free website hit counter

டூரிஸ்ட் ஃபேமிலி - விமர்சனம்.

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடற்கரையில் இறங்கும் சசிக்குமார் ஈழத்துத் தமிழ்பேசத் தொடங்கும் போதே, இராமேஸ்வரக் கரையிறங்கிய மற்றுமொரு இலங்கைத் தமிழர்களின் கதையென்பது தெரிந்துவிடுகிறது.இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்தும், அந்தப்  பேச்சுவழக்கு மொழியையும் வைத்து அவ்வளவு துன்ப்படுத்தியிருக்கிறார்கள் தமிழ்ச் சினிமாவில். மறுபடியுமா..? எனும் பயத்துடனேயே பார்க்கத் தொடங்குகின்றோம்.

ஆனால் ஒரு ஐந்து நிமிடத்துக்குள்ளேயே அதையெல்லாம் மறந்து, நடக்கும் பாதையில், மெலிதாகத் தூறிய மழையில் நனைந்த புற்களின் ஈரச் சிதறல்கள் பாதம் நனைப்பதைப் போன்று, மனிதநேயம் எனும் ஈரலிப்பினைத் தெறிக்கவிட்டு நகரும் கதையுடன் நாமும் ஒன்றாய் கலந்துவிடுகின்றோம். 

மொழி, நாடு, என்பதெல்லாம் கடந்து ஒன்றாயிருப்பது எல்லோர்க்குமான மானுடநேசிப்பு. அதைக் கூச்சல் போட்டுச் சொல்லாமல், மெல்ல மெல்ல, சின்னச் சின்ன சம்பவங்களோடும், சிரிப்போடும் நகரும் கதையின் எல்லாவிடத்திலும் அன்பின் வாசம்.நடிகர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் பாத்திரத்தின் கனதியறிந்து கதையின் மாந்தர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள். அந்த வாழ்க்கை ஒட்டத்தில் கோபம்,பாசம்,தாபம், கருணை, கண்ணீர், என ஒவ்வொன்றும் நம்முடன் ஒட்டி உறவாடிச் செல்கின்றன. ஒரு சில இலங்கைத் தமிழ் வார்த்தைகளையும், அவற்றின் உச்சரிப்பினையும் வைத்து தமிழகத்துக்கு வந்த இலங்கைத் தமிழ் குடும்பமாகக் காட்ட முயற்சித்திருப்பது முழுமையடைந்திருக்கிறதெனச் சொல்ல முடியாது. ஆயினும் அதை குறையெனச் சொல்லி நிறுத்திவிடமுடியாத கதைநகர்வு.

அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்து வம்பு பேச நினைக்கும் மனிதர்களுக்கு, அடுத்தவர்களுடன் அன்பு செய்யும் அழகான நேரங்கள் மட்டும் கிடைப்பதில்லை. ஆனால் அது மட்டும் கிடைத்துவிட்டால் வாழும் இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை நல்ல சினிமாவாகச் சொல்லியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. திரையிலிருந்து தெறிக்கும் இரத்தம் பார்வையாளர்களின் முகத்தில் பட்டுத் துடைத்தாலே அது மாஸ் படம் என இயங்கும் தமிழ்திரைப்படச் சுழலுக்குள் சிக்கிக் கொள்ளாத சினிமாவாக  வந்திருப்பதே பெரும் ஆறுதல். 

நேர்த்தியான திரைக்கதை , தேர்ந்த பாத்திரப் படைப்புக்கள், அந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் சில அழகான, அன்பான குட்டிக்கதைகள், அவற்றைச் சொல்லும் எளிமையான ஆனால் ஆழமான வசனங்கள். அவற்றை இயல்பாக உச்சரித்து வாழ்ந்திருக்கும் மனிதர்கள். பரத் விக்ரமனின் பொருத்தமான காட்சித் தொகுப்பு, அரவிந்த் விஸ்வநாதனின் கண்ணை உறுத்தாத காட்சிப்பதிவு, ஷான் ரோல்டனின் இதமான இசை, என சேர்ந்திருக்கும் இத் திரைப்படத்தில் தவறுகள் இல்லையா ? தமிழகத்தில், ஆட்டோச் சாரதிகள் முதல் பெட்டிக்கடைக்கடை வைத்திருக்கும் அக்காக்கள் வரை,  வாயைத் திறப்பதற்குள்ளேயே இலங்கைத் தமிழர் என மோப்பம் பிடித்துவிடுவார்கள். ஆனால் பொலிஸ் அதிகாரிகள் அவ்வாறு கண்டுகொள்ளமல் போவார்களா என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. ஆனாலும் இலங்கை என்றதும் இனப்பிரச்சனையைச் சொல்கின்றோம் எனத் தாமும் குழம்பி, பார்ப்பவர்களையும் குழப்பிவிடாமல், அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களால் அகதியாக வந்தவர்கள் கதை என்று தொடங்கி, " எந்த தமிழில் பேசுகின்றோம் என்பது பிரச்சனையா? அல்லது தமிழிலே பேசுவதென்பதே பிரச்சினையா ? " என்பது போன்ற வசனங்களின் வழி ஒன்றிடச் செய்து விடுகின்றார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சசிக்குமாருக்கு, அயோத்தி படத்தின் பின்னதாக அமைந்திருக்கும் மற்றுமொரு சிறப்பான படம். நடிகை சிம்ரனின் தமிழுக்கான மீள்வருகைக்கு நல்ல களம்.  இனப்பிரச்சினையோ ? பொருளாதாரச் சிக்கலோ? எதுவாயினும் சரி, இலங்கையோ? ஆபிரிக்காவோ ? எந்த நாடாயினும் சரி, தமது சொந்த நாட்டினைப் பிரியும் புலப்பெயர்வு என்பது ஒரு பெருந்துயரம். அந்த பெருந்துயரத்தின் நீட்சியாக, புதிய நிலத்தில் ஒரு சுமுகமான வாழ்க்கையைத் தொடங்குவதென்பது பெருஞ்சவாலானது. இவற்றை யாரையும் காயப்படுத்தாமல், நகைச்சுவையாகவும், நல்லவிதமாகவும், சொல்லியிருக்கும் வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி நல்லதொரு குடும்பம்.

-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான் 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula