விடுதலை இரண்டாம் பாகம், எம்மை வேறோர் களத்துக்கு மெல்ல நகர்த்திச் செல்கிறது. நம்மவர்கள் பலரும் அறிந்த கதைதான். ஆனால் அதனுள்ளே அறியாத பல அரசியற் சூழ்ச்சிகள், அதற்குப் பலியாக்கப்படும் அப்பாவி மனிதர்களின் துயர்கதைகள் தொடருகின்றன.
ஒரு பூகோள அரசியலைப் புரியும்படியாகக் கதைசொல்லிப் படமெடுக்கலாம் என்பதை, வரிக்கு வரி, கனதியாக வரும் வசனங்களால், சாட்சியம் செய்யும் திரைக்கதை. பார்வையாளனின் அகமகிழ்வை கைதட்டல்களாக வாங்கிய வண்ணமே நேர்கோடாக நகர்ந்து செல்லும் திரைக்கதை. அதில் இயல்பாக வாழ்ந்திருக்கும் விஜய்சேதுபதி, அப்பாவித்தனமான பாவனையால், கச்சிதமாக ஒட்டிக் கொள்ளும் சூரி, ஆகியோரின் நடிப்பு. மற்றைய கதாபாத்திரங்களும் கற்பனைப் பாத்திரங்கள் இல்லை எனத் தோன்றச் செய்யும் கச்சிதமான பாத்திரத் தேர்வு. அதிலும் தலைமைச் செயலாகவரும் ராஜீவ் மேனனின் மென்குரலிலும், அசைவிலும், சொல்லித் தெரிய வைக்கும் நுன்னரசியல், இராமானுஜன், ஹனிபா, எனும் பெயர்களைத் தவிர்த்து, அமுதனைத் தெரிவு செய்வதில் காட்டும் பெயர் அரசியல், எனப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
அந்த மலைப்பிதேசத்திலும், அடர்ந்த காடுகளிலும், மலைக்கிராமங்களிலும், அங்கிங்கு நாம் அலைந்திடாதபடி, கதையோடு பிணைத்துக் கைபிடித்து நம்மை அழைத்துச் செல்கிறன வேல்ராஜின் ஒளிப்பதிவும், இசைஞானியின் இசையும்.
இரண்டாம் பாகத்தின் இறுதிப்பகுதி பேசுவது 2009ல் எங்கள் பகுதிப் பூகோள, பிராந்திய அரசியல் என்பதாகத் தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் உலகெங்கும் ஏகாதிபத்திய வர்க்கம் செய்யும் அதிகார அரசியல் இதுவென்பதால், உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்படும் மக்கள், விடுதலை விரும்பும் மக்கள் அனைவரும், இதனைத் தங்களின் கதையாக உணர்ந்து கொள்வார்கள் என்பது நிஜம்.
காட்சியின் நிறைவில் கலந்து கொண்டவர்கள் பலரின் கருத்தும், எமது கருத்தும் மட்டுமன்றி, எம்மோடு பேசிய மாற்றுமொழியினரும் இந்தக் கருத்தினை ஆதரித்துப் பேசியதில் மட்டுமன்றி, இந்த நிலை மாற்றத்துக்கு, பரஸ்பர மரியாதை, பாசம், பணிவு என்பனவே உதவும் என்பதை கதையின் சம்பவங்களால் பார்வையாளர்களிடத்தில் பகிர்ந்து, இயக்குனராக வெற்றி காண்கின்றார் வெற்றி மாறான்.