எதிர் வரும் (2025) மார்ச் 21ந் திகதி முதல் 30ந் திகதி வரை, சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழா (FIFF) வில், இலங்கையிலிருந்து தமிழ், சிங்கள மொழிப் படைப்பாளிகளில் பலரும் கலந்து கொள்கின்றார்கள்.
சுவிற்சர்லாந்தில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாக்களில், ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழா (FIFF)வும் முக்கியமான சர்வதேச திரைப்பட விழாவாகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இத் திரைப்படவிழாவின் 39 வது பதிப்பில், உலகின் 52 நாடுகளைச் சேர்ந்த 108 படங்கள் திரையிடப்படுகின்றன, இதில் 17 உலக பிரீமியர்ஸ், 3 சர்வதேச பிரீமியர்ஸ், 5 ஐரோப்பிய பிரீமியர்ஸ் மற்றும் 42 சுவிஸ் பிரீமியர்ஸ் ஆகியவை அடங்கும். இவற்றுடன், புதிய பிரதே (NEW TERRITORY) ஆசியச் சினிமா பிரிவில், தமிழ், சிங்களம், என இரு மொழிகளிலுமான, 13 படங்கள் பங்குகொள்கின்றன.
இந்த வெளியீடு தொடர்பாக, FIFF தமது பட்டியல் குறிப்பில், 1948 இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தது இலங்கையில் பொருளாதார மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மட்டுமல்ல, அரசியல் எழுச்சி, இனப் பதட்டங்கள் மற்றும் ஆயுத மோதல்கள், குறிப்பாக நாட்டை பல தசாப்தங்களாகப் பிரித்த உள்நாட்டுப் போர் ஆகியவற்றையும் ஏற்படுத்தியது. சமீபத்திய வரலாறு காட்டுவது போல், சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு இடையிலான பிளவு இன்னும் இருந்தாலும், இலங்கை சினிமா நல்லிணக்கம் இறுதியில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது எனக்குறிப்பிட்டுள்ளது.
இது தவிர, மார்ச் 23ந் திகதி இலங்கை சினிமா பற்றிய விரிவான வட்டமேசை உரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. 1988 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்து 2009 இல் அகதியாக சுவிட்சர்லாந்திற்கு வந்து, சுவிற்சர்லாந்தில் சினிமாத்துறை பட்டப்படிப்பினை முடித்து, சுவிஸ் சமூகத்துக்குள் அறியப்பட்ட இயக்குனராகவுள்ள கீர்த்திகன் சிவகுமார் இந்த உரையாடலை ஒருங்கமைக்கின்றார்.
இந்த வட்டமேசை உரையாடலில், கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை சினிமா வெளியீட்டின் பன்முகத்தன்மையை, சிங்கள மற்றும் தமிழ் இயக்குனர்களின் படைப்புகளுக்கு சமமான முக்கியத்துவத்தை அளிப்பது என்பனவற்றுடன் மேலும் பல்வேறு விடயங்கள் பேசப்படவுள்ளன. இவை இலங்கையின் சினிமாத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பினையும், புதிய அங்கீகாரத்தையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து இத்திரைப்பட விழாவிற்கு வருகின்ற படங்கள்:
டென்டிகோ ( Tentigo ) : இயக்குனர். இளங்கோ ராம்.
2023 தாலின் பிளாக் நைட்ஸ் ( Tallinn Black Nights Film Festival) திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி பரிசை வென்ற இயக்குனர் இளங்கோ ராமின் நகைச்சுவை திரைப்படம். இத் திரைப்படம் தமிழ்மொழிக்கான மொழிமாற்றுக் காப்புரிமை பெற்று, " பெருசு" எனும் பெயரில் தமிழகத்தில் கடந்த 14ந் திகதி வெளியாகியுள்ளது.
வெந்து தணிந்தது காடு (Dark Days of Heaven) : இயக்குனர். மதிசுதா
மதி சுதாவின் முதல் முழு நீளத் திரைப்படம் பல விழாக்களில் பல விருதுகளைப் பெற்றுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போர் மூளும் போது, ஒரு குடும்பம் உயிர்வாழ போராடும் கதையைச் சொல்கிறது. இப்படம் முழுவதுமாக இயக்குனரின் மொபைல் போனில் படமாக்கப்பட்டது.
சத்தமில்லாத நடனம் (Soundless Dance) : இயக்குனர். பிரதீபன் ரவீந்திரன்.
இரண்டு குறும்படங்களைச் சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட பிறகு, ரவீந்திரன் தனது முதலாவது முழு நீளத் திரைப்படத்தில் 2009 ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போரின் மிகவும் வன்முறைக் கட்டத்தில், பிரான்சில் வசிக்கும் ஒரு இளம் தமிழ் அகதியின் உணர்வினை கதையாக்கியுள்ளார்.
மாதங்கி/மாயா/எம்.ஐ.ஏ. (Matangi/Maya/M.I.A. ) : இயக்குனர். Steve Loveridge
பிரித்தானியாவில் வாழும், இலங்கைப் பூர்வீகத்தைக் கொண்ட தமிழ் பாடகர் மற்றும் ராப்பர் மாயாவின் வின் வாழ்க்கையை 22 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட டையறிக் குறிப்புக்களுடன் ஆவணப்படுத்தும் படம்.
சொர்க்கம் (Paradise) : இயக்குனர். Prasanna Vithanage
இலங்கையின் முக்கியமான சிங்கள மொழி இயக்குனர்களில் ஒருவரான பிரசன்னா விதானகே அவர்களின் இயக்கத்தில், இலங்கையின் உள்ளூர் பதட்டங்கள் அதிகரிக்கும் வேளையில் ஒரு இந்திய தம்பதியினர் தங்கள் ஐந்தாவது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட முயல்கையில் வரும் பதட்டங்கள் குறித்த உணர்வு பூர்வமான சித்தரிப்பு. 2023ல் பூட்டானில் விருது வென்ற படம்.
மயில் புலம்பல் (Peacock Lament) : இயக்குனர் . Sanjeewa Pushpakumara'
2022 இல் டோக்கியோவில் விருதுபெற்ற இலங்கையின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான, சஞ்சீவ புஷ்பகுமாராவின் நான்காவது திரைப்படம். தெற்கிலிருந்து மேற்கு நோக்கி குழந்தைகள் கடத்தப்படுவதைப் பற்றிய பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை.
குட்டி யாழ்ப்பாணம் ( Little Jaffna ) : இயக்குனர். Lawrence Valin
2024ல் வெனிஸ் திரைப்படவிழா, சூரிச் திரைப்படவிழா, கனடா திரைப்படவிழா எனப் பல திரைப்படவிழாக்களில் பங்கேற்ற திரைப்படம். பாரிஸ் நகரின் லாச்சப்பல் பகுதியை கதைக்களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தமிழகத்தின் முக்கிய கலைஞர்கள் சிலரும் நடித்திருக்கின்றார்கள்.
உங்கள் தொடுதலினால் காணமற் போனவர்கள் (Your Touch Makes Others Invisible ) : இயக்குனர். Rajee Samarasinghe
இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப்போரில் வலிந்து காணமலாக்கப்பட்ட 100,000 வர்களுக்கு அஞ்சலிகளையும், குடும்பங்களுக்கு ஆறுதல்களையும் சொல்லும் முயற்சி
மணல் (Sand) ; இயக்குனர் . விசாககேச சந்திரசேகரம்.
2023 ரோட்டர்டாமில் சிறப்பு ஜூரி பரிசை வென்ற இந்தத் திரைப்படம், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பிச் செல்லும் ஒரு முன்னாள் தமிழ்-புலி போராளியின் கதையைச் சொல்கிறது,
இந்த முழுநீளத் திரைப்படங்களுடன், கீர்த்திகன் சிவகுமாரின் Le Gap, சோபன் வேல்ராஜின் Crisis, பவனீதா லோகநாதனின் Island Story, விப்ரசன் ஞானதீபனின் Anushan, ஆகிய நான்கு குறும்படங்களும் திரையிடப்படுகின்றன.
காட்சி விபரங்கள் கட்டண விபரங்கள், முன்பதிவுகள் என்பவற்றுக்கு , இந்த https://www.fiff.ch இணைப்பில் அழுத்தி ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழா வின் இணையத் தளத்தில் காணலாம். சுவிற்சர்லாந்தில் இலங்கைத் திரைப்படங்களையும், படைப்பாளர்களையும், கலைஞர்களையும் காண்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இது.
சுவிற்சர்லாந்தில் அரசியற் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட பலர், சுவிஸ் அரசினால் உதிரிகளாக இலங்கைக்குத் திருப்பியனுப்பட்டு வரும் சமகாலத்தில், இலங்கைப் படைப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்குமான இந்த அழைப்பு முக்கியமானதாகும்.
-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்