free website hit counter

சூரிச் திரைப்படவிழாவில் Little Jaffna

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள  லா சேப்பல் (Quartier de La Chapelle) தொழிற்புரட்சிக்கு முன்னர் ஒரு வனப்புறு கிராமம். 19 ஆம் நூற்றாண்டில் வடக்கு இரயில்வே நிறுவனம் மற்றும் கிழக்கு இரயில்வே நிறுவனங்களின் வழித்தடங்கள் திறக்கப்படவும், இப்பகுதி மக்கள் நெருக்கம் நிறைந்த நகர்பகுதியாக மாறியது என்கிறார்கள்.

20 ம் நூற்றாண்டின் இறுதியில், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், பிரான்ஸின் காலனித்துவப் பகுதியாக இருந்த இந்தியாவின் பாண்டிச்சேரித் தமிழர்களும், இப்பகுதியில் தங்கள் சிறு வணிகங்களை இப்பகுதியை மையப்படுத்தி ஆரம்பிக்க, அது தமிழ்மக்கள் அதிகம் கூடும் பகுதியாக மாற்றம் பெற்றதுடன், 'குட்டியாழ்ப்பாணம்' (Little Jaffna) எனவும், ஈழவிடுதலைப் போராட்டக் குழுக்களின் ஆளுமைகள் அதிகரித்த காலத்தில் 'குட்டித் தமிழீழம் என்றும் பெயர் பெற்றது. இந்தக் களத்தில்  இளைஞர்கள் குழுக்களின்  இயங்குநிலைகளை மையப்படுத்தி,   இயக்குனர் லாரன்ஸ் வாலின் (director Lawrence Valin) எழுதி இயக்கி நடித்திருக்கும்  திரைப்படம் Little Jaffna. கடந்த செப்டெம்பர் மாதத்தில்  

81வது வெனிஸ் சர்வதேச திரைப்படவிழா ( Venice Film Festival), 49வது ரொறன்ரோ சர்வதேச திரைப்படவிழா ( Toronto Film Festival ) என்பவற்றிலும்,  ஒக்டோபர் மாதம்  3ந் திகதி முதல் 13 ந்திகதி வரை சுவிற்சர்லாந்தில் (தற்போது நடைபெறும்), (Zurich Film Festival) சூரிச் சர்வதேச திரைப்பட விழாவிலும், திரையிடல் கண்டிருக்கும், இத்திரைப்படம் இயக்குனர் முதலாவது முழுநீளத் திரைப்படம். தென்னிந்தியத் திரைநட்சத்திரங்களான ராதிகா சரத் குமார், வேல. ராமமூர்த்தி, ஆகியோருடன் பிரான்சின் பல கலைஞர்களும், முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் லாரன்ஸ் வாலினும் நடித்துள்ளார்கள். சூரிச் திரைப்படவிழாவில்  இத்திரைப்படத்தினைப் பார்த்து முடித்தபோது ஒரு பிரெஞ் குழு மோதல் படத்தினைப் பார்த்த அனுபவம் முழுமையாகக் கிடைத்தது.

இத்திரைப்படம் பேசும்கதையினை இருவேறு பார்வைகளில் காணமுடியும். இது ஒரு பிரெஞ்சுப்படம், அதில் தமிழ் குழுக்களின் கதையாடல் வருகிறது என்னும் ஒரு வகையிலும், குட்டித்தமிழீழம் என வர்ணிக்கப்பட்ட அப்பகுதியை தமிழர் நிலமாக உருவகித்து, அதன் மீதான ஊடுருவல், மோதல், ஆக்கிரமிப்பு எனப் பிறிதொரு வகையிலும் காணலாம். அதை எவ்விதம் காண்பது என்பதற்கான தெரிவு வெளியை பார்வையாளர்களிடத்தில் விட்டுவிட்டு, இயக்குனர் தனக்கான புனைவுச் சுதந்திரத்தின்வழி நின்று இத்திரைப்படத்தினைப் படைத்திருக்கின்றார். இது ஒரு சாகசமான முயற்சி. அதில் சமநிலை தடம்புரளாது பயணித்திருக்கின்றார் இயக்குனர் லாரன்ஸ்.

பிரான்ஸ் காவல்துறை  உளவாளியாகத் தமிழ் இளைஞர்கள் குழுவொன்றில் உள் நுழையும்   நாயகனின் நகர்வில், தமிழ்குழுக்களின் இரகசிய இயங்குதல்களும், வன்முறையும், கண்டறியப்படுகின்றன. உளவாளியாகச் செயற்படுகையில்,  சக தமிழனாக உணர்வுநிலையில் ஒன்றுதல் என இருவேறு நிலைகளில் சமன் செய்து கொண்டு நகரும் நாயகன் சந்திக்கும் சம்பவங்கள், அவற்றினூடான உரையாடல்கள், என்பவை எழுப்பும் கேள்விகள் பலமானவை. கதையின் போக்கில் பல இடங்களிலும் எழுப்படும் கேள்வி " நீ யார் ?, உன் அடையாளம் என்ன ? " அவற்றில் சிலவற்றுக்கு, நாயகனைப் போன்றே  யாரிடமும் தெளிவான பதில் இல்லை.

காவல்துறையின் சுற்றிவளைப்பில், தலைமை இல்லாது போக, ஒருவழியால் இளைஞர்களும் மக்களும்  அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். விடுதலைக் கோஷங்கள் எழுகின்றன. Little Jaffna வின்  திருவிழாக் கொண்டாட்டச் சூழலில் நிகழும் ஒரு கொலையுடன் தொடங்கும் கதை, அதே திருவிழாக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் முடிவுக்கு வர, இழப்புக்களின் எண்ணிக்கை எழுத்தில் வருகிறது. " தமிழா" எனும் அதிரும் ஒலியோடு திரை இருண்டு, காட்சிகள் மறைகின்றன.

இதற்குமேல் இத்திரைக்கதையை விளக்கிட விரும்பவில்லை. ஏனெனில் பார்வையாளனின் பார்வைத் தரத்துக்கு ஏற்ற வகையில் விரிந்திடும் வகையான ஒரு திரைக்கதை. அதை உய்ந்துணர்தலே அவனுக்கான திரை அனுபவம்.  அந்தத் திரை அனுபவத்தைச் சிறப்பாகத் தருவதற்கு உறுதுணையாக நிற்கும் ஏனைய அம்சங்களைப் பார்க்கலாம். இசையும் ஒலிப்பதிவும் கதையின் அச்சத்தை கூட்டுகின்றன.

காட்சி அமைப்பு, காட்சிப்பதிவு, காட்சித் தொகுப்பு, இசை, ஒலிப்பதிவு, வடிவமைப்பு, வண்ணத் தேர்வு என எல்லா அம்சங்களும் திருப்தியாக இருப்பதனால் கிடைப்பது  நல்ல காட்சி அனுபவம். அதில் கதாபாத்திரங்களின் வகையுணர்ந்த நடிப்பினால் வலுச்சேர்க்கின்றார்கள் நடிகர்கள். குறிப்பாக ராதிகா சரத்குமார், வேல.ராமமூர்த்தி, தாங்கள் அனுபவமிக்கலைஞர்கள் என்பதை மிக எளிதான ஆற்றுகையால் நிரூபித்துள்ளார்கள். இயக்குனருக்குள் மறைந்திருக்கும் பண்பட்ட நடிகனாக முகம் காட்டுகின்றார் லாரன்ஸ். மோதல் குழு இளைஞர்களின் முதல்வன் புவியாக நடித்திருப்பவருக்கு இது முதல் அனுபவம் என்று சொல்ல முடியாத நடிப்பு. வன்மமும், வன்முறையும், நிரம்பியிருக்கும்  முகத்தில், எள்ளலையும், காதலையும், சில நொடிகளுக்கு  சிதறவிட்டு இறுக்கமாகிலிடுதல் என்பது இயல்பானதல்லவே.

துருத்திக் கொண்டு தெரியும் ஒருசில காட்சிகளும், சிறப்பான நடிப்பினை வழங்கியிருந்தாலும், இயல்புடன் ஒன்றிக்காத ராதிகா மற்றும் வேல .ராமமூர்த்தியினபேச்சு மொழி வழக்கு உரையாடல்களும் சற்று நெருடலாகவே உள்ளன.

திரையிடலின் பின்னர், அரங்கினை நிறைத்திருந்த இந்நாட்டுப் பார்வையாளர்கள் பலரின்  கேள்விகளுக்குப் பதிலளிக்கும்  போது, மிக நேர்த்தியாகவும், நேர்மையாகவும் பதிலளித்த இயக்குனர், " இது என் முதல் படம், ஆனாலும் இது என் கடைசிப்படமாகிடலாம் என்ற எண்ணத்துடனும் இயங்கினேன்" என்றபோது,   Little Jaffna  பாகம் 2 னை எடுத்து இக்கதையில் சொல்லாத சேதிகளைச் சொல்லலாமே என கேட்க நினைக்கையில், "என் அடுத்த திரைக்களம் பிரெஞ் அரசியற் களம்"  எனக் கரவொலிகளின் மத்தியில் சொன்ன போது, இயக்குனர் லாரன்ஸின் படைபாற்றல் மீது இருக்கும் எதிர்பார்ப்பு மேலும் வலுவானது.

ஒரு தமிழ் இயக்குனரின் பிரெஞ்சுப்படமாக  Little Jaffna  புதிய பரிமாணம், சிறப்பான திரை அனுபவம்.  ஒருவகையில் Little Jaffna திரையில் விரியும் கனவு.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

மிதக்கும் நகர் வெனிஸில் Little Jaffna

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula