சுவிற்சர்லாந்தின் பெருந்திரை விழாவான லோகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவின் 77பதிப்பு நேற்று (07.08.24) மாலை ஆரம்பமாகியது.
எதிர் வரும் 17ந் திகதி நிறைவுபெறும் இத்திரைப்படவிழாவில், 104 புதிய அறிமுகங்கள், ஐந்து சர்வதேச பிரீமியர்கள், உள்ளடங்கலாக, சுமார் இருநூற்றி இருபத்தைந்து 225 திரையிடல்கள் இடம்பெறவுள்ளன.
லோகார்னோ திரைப்பட விழாவின், அதிகாரப்பூர்வமாக தொடக்க நிகழ்வில், சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின் ஜுரா மாநில உறுப்பினரும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைவருமான, எலிசபெத் பாம்-ஷ்னீடர் ( Elisabeth Baume-Schneider) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், " லோகார்னோ திரைப்பட விழா டிசினோ மற்றும் சுவிட்சர்லாந்திற்கான ஒரு கலாச்சார அடையாளம்", எனக் குறிப்பிட்டார்.
லோகார்னோ திரைப்படவிழாவின் முன்னாள் தலைவர் மார்கோ சோலாரியின் 23 ஆண்டு செயலாற்றுகையின் பின், அதன் தலைமைப்பொறுப்புக்கு வந்துள்ள, மாஜா ஹாஃப்மேன் அவர்களின் நிர்வாகத்தில் நடைபெறும் முதலாவது விழா. அவர் தனது உரையில், " லோகார்னோவின் பியாஸ்ஸா கிரான்டே, அதன் பெரிய வெளிப்புறத் திரையுடன், கனவு காணவும், சிந்திக்கவும், சினிமாவின் மாயாஜாலத்தில் மூழ்கவும் ஒரு சிறந்த இடமாகும். இது லோகார்னோவின் அடையாளமும்" என்றார்.
அவர் மேலும் "லோகார்னோ என்பது கருத்துக்களின் திருவிழா. இங்கே முற்போக்கான சிந்தனைகள் கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், புகைப்பட இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள் மற்றும் படங்களில் நேரத்தைச் செலவழித்து வேலை செய்யும் அனைத்துத் தொழில் வல்லுநர்களையும் நாங்கள் வரவேற்கிறோம். இதுவே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்." என்றார்.
ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இத் திரைத்திருவிழாவினை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என்பது முதல் பல்வேறு புதிய யோசனைகளையும் வழிநடத்தல்களையும் முன்மொழிந்து வரும் திரைப்பட விழாவின் புதிய தலைவர் மஜா ஹாஃப்மேன் "இது யோசனைகளின் திருவிழா" எனக் குறிப்பிடுகிறார்.
பார்வையாளர்களுக்கான பெருந்திரையிடலும் துவக்கமும் மாலை 9.30 மணிக்கு பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் நிகழ்ந்தது. பெருந்திரையில் இத்தாலி, பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில், இயக்குனர் ஜியான்லூகா ஜோடிஸ் அவர்களின் இயக்கத்தில் உருவான Le Déluge (வெள்ளம்) திரைப்படத்துடன் ஆரம்பமாகியது. இந்தத் திரைப்படத்தின் கலைஞர்களான குய்லூம் கேனட் Guillaume Canet, மெலனி லாரன்ட் , Mélanie Laurent கௌரவிக்கப்பட்டார்கள்.
- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்
படங்கள் : Locarno Film Festival