பார்வையாளர்களின் முகத்தில் தெறிக்கும் இரத்தத்தைத் துடைப்பதற்கான முன்னேற்பாட்டுடனேயே , தற்போதெல்லாம் தமிழ் திரைப்படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆனால் மறைந்து போன மகத்தானவர்களின் நிழற்படங்களை படங்களை மட்டுமே வைத்து, மறுபடியும் அவர்களை அசையவும், பேசவும் வைக்க முடியும் என்ற வகையில் வளர்த்து நிற்கும் தொழில்நுட்பத்தை சினிமாவில் பரீட்சார்த்தம் பார்க்கும் முயற்சியாக உருவான Cartas Telepáticas (Telepathic Letters) போர்த்துக்கல் படத்தினை, லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் போட்டிப்பிரிவுக்கு வெளியே பகுதிப் பத்திரிகையாளர் காட்சியில் நேற்றுக் காண முடிந்தது.
இந்தப்படத்தினை எழுதி இயக்கியுள்ள, எட்கர் பெரா (Edgar Pêra ) ஒரு போர்த்துகீசிய திரைப்பட தயாரிப்பாளர். மற்றும் ஒரு சிறந்த கிராஃபிக் காமிக்ஸ் கலைஞர் ஆவார். கூடவே எட்கர் பெரா உளவியல் படித்தும் உள்ளார். அதனால் அவரால் இந்தப் புதிய முயற்சியை மேற்கொள்ள முடிந்தது. போர்க்கல் திரை விமர்சகர்களிடம், மிக விடாமுயற்சியுடன் தனித்துவமிக்க போர்த்துகீசிய திரைப்பட தயாரிப்பாளர் எனும் பெயரினைப் பெற்றுள்ள அவரது தெளிந்த அறிவுசார்நிலை, காட்சியின் தொடக்கத்தின் முன்னதாக அறிமுகத்திலும், பின்னர் கேள்வி பதிலிலும் அறிய முடிந்தது.
ஹோவர்ட் பிலிப்ஸ் லவ்கிராஃப்ட் 1890 - 1937 காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு விசித்திரமான, அமெரிக்க அறிவியல், கற்பனை மற்றும் திகில் புனைகதை எழுத்தாளர். பெர்னான்டோ பெசோவா (Fernando Pessoa ) 1888 - 1935 காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு போர்த்துகீசிய கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், வெளியீட்டாளர் மற்றும் தத்துவவாதி. இவர்கள் இருவருக்குமிடையில் நடைபெறும் கடிதஅட்டைப் பரிவர்த்தனையின் 70 நிமிடக் காட்சி நிழலாட்டம்தான், Cartas Telepáticas திரைப்படம்.
இருவருடைய நிழற்படங்களையும் வேறு சில படங்களையும் வைத்து, செயற்கை நுன்னறிவுத் (AI) தொழில்நுட்பத்தின் துணையோடு, அசைபடங்களாகவும், அவற்றினை உரையாடவும் வைத்து, சினிமாவின் அத்துனை விதிகளையும் கட்டுடைத்த ஒரு படைப்பாகக் காணமுடிந்த படம் Cartas Telepáticas.
இந்தப் படத்தினைப் பாரத்துக் கொண்டிருக்கையில் எம் நினைவுக்கு வந்த மற்றுமொரு படம், றொட்டடாம் திரைப்படவிழாவில் நடுவர்களின் பரிந்துரைப் பரிசினையும், பத்திரிகையாளர்களது சிறப்பு விருதினையும், வென்ற, கேரள இயக்குனர் மிதுன் முரளியின் கிஸ்வாகன் (Kiss wagan). ஒரு அனிமேஷன் படமாக அது சினிமாவின் தளைகளையெல்லாம் கட்டுடைத்து, சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் விமர்சனத்துடன் அனுகியது. Cartas Telepáticas செயற்கை நுன்னறிவுத் தொழில் நுட்பத்தின் துணையுடன், இருவேறு ஆளுமைகளின் கருத்தியல் புனைவாகவும் திரையில் விரிய, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கிறது.
செயற்கை நுன்னறிவுத் தொழில் நுட்பம் இன்னமும் சிறப்பான நிலையினை எட்டாதநிலையில், அதன் தவறுகளையும் கூட இயல்பான காட்சிகளாகத் தொகுத்துவிடுவதில் சிறந்த தொகுப்பாளராகவும், புதிய கதைசொல்லியாகவும், இயக்குனராகவும் தெரியும் எட்கர் பெரா, சினிமாவின் கட்டுடைப்பில் ஒரு கலகக்காரராகவும் தன்னைத் தகவமைக்கின்றார்.
- 4தமிழ்மீடியாவிற்காக லோகார்னோவிலிருந்து மலைநாடான்
படங்கள்: Locarno Film Festival