கொட்டுக்காளி என்றால் தான் நினைத்ததைச் செய்யும் பெண்(The Adamant Girl) என்பது, என் நிலம் சார்ந்த மொழி வழக்கு என பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவில், இயக்குனர் வினோத்ராஜ் (Vinothraj PS) விளக்கம் சொன்னார்.
தற்போது (Feb 15 -25 ) நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவில், அவரது இரண்டாவது படமான கொட்டுக்காளி, Forum பிரிவில் பங்கேற்றுள்ளது.
2021ல் றொட்டடாம் சர்வதேச திரைப்படவிழாவில், தனது முதலாவது படமான ' கூழாங்கல் ' (Pebbles) படத்திற்கு பெறுமதி மிக்க ( Tiger) புலிமுக விருது பெற்றதன் மூலம், சர்வதேச திரைப்பட விழா இயக்குனர்களையும், பார்வையாளர்களையும், தமிழ்த்திரையுலகின் பக்கமும், தன் பக்கமும் திரும்பிப்பார்க்க வைத்தார் இயக்குனர் வினோத்ராஜ்.
பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவின் இரண்டாம் (Feb16)நாளில், நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாயிருக்கும், 'கொட்டுக்காளி' முதற்காட்சி கண்டது. இத் திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்படும் 'கொட்டுக்காளி' , ஐந்து காட் சிகளுக்குமான டிக்கெட்டுக்கள் முழுவதும் முற் கூட்டியே விற்கப்பட்டுவிட்டன.
அரங்குகள் நிறைக்கும் பார்வையாளர்களில் 80 வீதத்திற்கும் அதிகமானவர்கள் மாற்றுமொழியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப் படத்தின் நாயகன் சூரி, இயக்குனர், வினோத்ராஜ் மற்றும் திரைப்படக் குழு உறுப்பினர்கள் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்
திரைப்படத்தின் அறிமுகங்களின் போதும், காட்சிகளின் பின்னதான கேள்வி பதில்களின் போதும், இயக்குனர் வினோத்ராஜ் " இது என் மண்ணின் கதை . அந்த மண்சார்ந்த வாசனையையும், வாழ்வியலையும், காட்சிகளாகத் திரையில் பதிவு செய்கின்றேன். அதற்கான காட்சிப் படிமங்களையும், பதிவுகளையும், எனது குழுவினருடன் விவாதித்து உருவாக்குகின்றேன். இதற்காக நான் எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் சற்று நீளமானது " என்கிறார்.
'கூழாங்கல்' படத்தினை விடவும் 'கொட்டுக்காளி' திரைப்படத்தினை, திரைப்படவிழாக்களுக்கான தனித்துவமான கலைப்படைப்பு எனும் நிலையிலிருந்து, சற்று ஜனரஞ்சகப்படுத்தியிருந்தாலும், தனது தனித்துவமான படைப்பாற்றலை, இயக்குனர்கள் ராம், வெற்றிமாறன் போல், விநோத்தும் கச்சிதமாகக் கையாண்டிருக்கின்றார். விநோத்ராஜ்ஜின் படங்கள் ஏன் சர்வதேச திரைப்படவிழா ரசிகர்களைக் கவருகின்றது என்பது குறித்தும், இப்படத்தில் சூரியின் வேறு ஒரு பரிமாணத்தில் உள்ள சூரியின் நடிப்புக் குறித்தும் விரிவாக பிறிதொரு பதிவில் பேசலாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக : பேர்லினிலிருந்து மலைநாடான்