யாழ்ப்பாணத்தில் இவ்வார இறுதி நாட்களான செப்டெம்பர் 7, 8ந் திகதிகளில் யாழ். சர்வதேச திரைப்படவிழாவின் 10வது பதிப்பு நடைபெறுகிறது.
வரும் சனி, ஞாயிறு தினங்களாக அமையும் இந்த இருநாட்களிலும், சர்வதேச நாடுகளிலும், இலங்கையிலிமிருந்து தெரிவு செய்யப்பெற்ற 30 அதிகமான குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. இவற்றில் 15க்கும் அதிகமான படங்கள் சர்வதேச நாடுகளில் இருந்து பங்கு கொள்கின்றன.
இத் திரைப்படவிழாவில், சுவிற்சர்லாந்திலிருந்து, "Le Gap - இடைவெளி" திரைப்படம் பங்குகொள்கிறது. சுவிற்சர்லாந்தில் திரைப்பட நெறியாள்கையில் பட்டயப்படிப்பினை நிறைவுசெய்த கீர்த்திகன் சிவகுமாரின் இரண்டாவது குறுந்திரைப்படம் "Le Gap - இடைவெளி", இந்த ஆண்டின் தொடக்கத்தில் சொலொத்தூன் திரைப்படவிழாவில் போட்டிப்பிரிவுக்குத் தெரிவாகியிருந்தது. இவரது முதலாவது குறும்படமான "தூஸ்ரா" (Doosra) 2022ம் ஆண்டு இதே திரைப்படவிழாவில் பங்கேற்று, விருது பெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்தில் தனது திரைப்படைப்பு பங்கேற்பது குறித்து, கீர்த்திகன் சிவகுமார் தனது சமூக வலைத்தளத்தில் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.
"நான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தின் வாழ்க்கை விம்பம் எப்படி இருக்கிறது என்பதனை படம்பிடித்து நான் பிறந்த தேசத்திற்கு காட்ட வேண்டும் என்பது என் முக்கியமான ஒரு கனவு.
இரண்டு காரணங்கள் : என் ஆழமான வேர் இருக்கும் மண்ணின் மக்களுக்கு மேற்குலகின் மாற்றுச் சினிமா விம்பங்கள் சென்றடைவது அபூர்வம்.
அதிலும் மேற்குலகை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் கதைகள் தாயக மண்ணில் சென்றடைவது இன்னமும் அபூர்வம்.
எனது « The Gap » (இடைவெளி) குறுந்திரைப்படம், யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் தெரிவாகி செப்டம்பர் 7,8 வார இறுதியில் காட்சிப்படுத்தப்படுகிறது. அதே வார இறுதியில் லௌசான் (சுவிற்சர்லாந்து) இலும் காட்சிப்படுத்தப்படுகிறது.
நீங்கள் இந்த இரு இடங்களுக்கும் அருகில் எங்காவது இருந்தால் இக்குறுந்திரைப்படத்தை சென்று பார்க்க கிடைத்தாலோ, அது பற்றி உங்களை சுற்றியுள்ளவர்களுடன் கதைக்க கிடைத்தாலே மிகுந்த மகிழ்வடைவேன்."
கீர்த்திகன் சிவகுமார், சுவிற்சர்லாந்து வோ மாநிலத்தில் உள்ள நுண்கலைக்கல்லூரியில், திரைத்துறையில் படித்து, இளங்கலைமானி பட்டம் பெற்றிருப்பவர். 4தமிழ்மீடியாவில் சார்பில் திரைப்படவிழாக்களில் செய்தியாளராகவும், பல்வேறு உலகத் திரைப்படங்கள் குறித்த சினிமா விமர்சனக் கட்டுரைகளையும் 'ஸாரா' எனும் பெயரில் எழுதி வருபவர்.
அகதி வாழ்வின் வலிகளை ஆழ்மன உணர்வுவோடு திரைமொழியில் பதிவு செய்து வரும் கீர்த்திகன் சிவகுமார், முழுநீள ஆவணப்படமொன்றினை தனது அடுத்த படைப்பாக தருவதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். அகதி வாழ்வின் வலிகளை மேலும் வலுவாகப் பேசும் படைப்பாக இருக்குமென நிச்சயம் எதிர்பார்க்கலலாம்.
"Le Gap - இடைவெளி" குறித்த எமது முன்னைய பதிவு ;
"தூஸ்ரா" (Doosra) எமது முன்னைய பதிவு ;
Swissfilms தளத்தில் கீர்த்திகன் பற்றிய குறிப்புக்கள்.
4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்