உதயநிதி ஸ்டாலினுடைய நெருங்கிய நண்பராக இருந்து வருபவர் விஷால். நடிகர் சங்கச் செயலாளர்,
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என திரைச் சங்கங்களில் வென்றபோதும் எதிரணியைச் சேர்ந்த பலர் அவரை செயல்படவிடாமல் ஒரு குழு துரத்திக்கொண்டேயிருந்தனர். உதயநிதி ஸ்டாலின் சொல்லியே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகாவை தோற்கடிக்க அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவருடைய வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரிக்கும்படி செய்தனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால் நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு இனி பிரச்சினை வராது என்பது உறுதியாகியுள்ள நிலையில் விஷால் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்!
அந்த சந்திப்புக்குப் பின்னர் விஷால் கூறியதாவது: “முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்து கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல் , மருந்து வாங்க கூட முடியாமல் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினேன். இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு , கண்டிப்பாக அதற்கான ஆவணத்தை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.அத்துடன் கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார். அத்தோடு முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன எனது நண்பர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.