30 ஆண்டுகளைக் கடந்து ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் அதிரடி நாயகன் டாம் குரூஸ்,
இவரது நடிப்பில் வெளியான ஜெர்ரி மாக்வேர்’, ‘மெக்னோலியா’, ‘பார்ன் ஆன் த போர்த் ஜூலை’ ஆகிய படங்களில் குரூஸின் அசத்தலான நடிப்புக்காக அடுத்தடுத்து மூன்றுமுறை கோல்டன் குளோப் விருதுகளை பெற்றிருந்தார். அவற்றை குரூஸ், விருது அமைப்புக்கு திரும்ப அனுப்பிவிட்டதாக ஹாலிவுட்டின் புகழபெற்ற பொழுதுபோக்குச் செய்தி இணையதளமான வெரைட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அகில உலக வணிக சினிமா சந்தையில் வெளியாகும் படங்களுக்கான விருதுகளில், ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கோல்டன் குளோப் விருதுகள் பேசப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், சிறந்த திரைப்படங்களுக்கு வருடம்தோறும் ஹாலிவுட்டின் ஃபாரின் பிரெஸ் அசோசியேஷன் எனும் அமைப்பே கோல்டன் குளோப் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் 90 பேர் ஜூரி உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 20 வருடங்களாக இந்த அமைப்பில் கறுப்பினத்தவர் யாரும் உறுப்பினர்களாக இல்லை, வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உறுப்பினர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் எனும் குற்றச்சாட்டுகள் எழுந்து தற்போது சர்சையாகியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து கோல்டன் குளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர், நடிகைகள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் டாம் குரூஸ் 1989, 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் தான் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அனுப்பியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதையடுத்து விரைவில் விருது குழுவில் கறுப்பினத்தவர்கள் சேர்க்கப்படுவர் என தற்போது அமெரிக்க நாளிதழ்கள் இன்று செய்தி வெளியிட்டு உள்ளன.