ஆந்திராத் திரையுலகம் இன்று தமிழ்த் திரையுலகைவிட பல உயரங்களைத் தொட்டிருக்கிறது. 400 முதல் 450 கோடி வசூல் செய்யும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ் சினிமாவில் இந்த உயரத்தை இயக்குநர் ஷங்கர் மட்டுமே தொட்டுள்ளார்.
தற்போது ராஜமௌலியின் இயக்கத்தில் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 600 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெளியிடப்பட உள்ள ஆந்திரத் திரையரங்கு ஒன்றில், திரைக்கு முன்பாக ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியில் சென்று திரையைக் கிழித்துவிடாமல் தடுக்க முள்வேலி அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள இத்திரைப்படம், ஆந்திரத்தின் நடுத்தர நகரங்களில் ஒன்றான ஸ்ரீகாகுளத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில்தான், திரைக்கு முன்னே உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் தடுக்கும் வகையில் முள்வேலியை திரையரங்க நிர்வாகம் அமைத்திருக்கிறது. திரையில் நாயகர்களைப் பார்த்த உற்சாகத்தில் மேடையில் ஏறி ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால், திரைக்கும் திரையரங்க ஒலிப்பெருக்கி சாதனத்துக்கும் சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கண்டித்து வருகிறார்கள்.