மும்பை, ஹைதராபாத், சென்னை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலிருந்து பத்திரிகையாளர்களை பெங்களூருவுக்கு அழைத்து பிரம்மாண்ட விழா நடத்திய ‘கே.ஜி.எஃப் 2’படத்தின் நான்கு மொழி ட்ரைலரை வெளியிட்டது படக்குழு.
அதில் நாயகன் - நாயகி, இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் முதல் பாகம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு படத்தின் மூலம் யாஷ் இந்திய அளவில் பிரபல நடிகராக மாறினார். கன்னட சினிமாவை இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்தது கே.ஜி.எஃப். தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அதே நேரம் அதற்கு முந்தைய நாள் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படமும் ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.
எனவே கே.ஜி.எஃப் 2 மற்றும் பீஸ்ட் இரு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடைபெற இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இரண்டு படங்களின் மோதலால் இரு படங்களுக்கும் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கே.ஜி.எஃப் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் யாஷிடம் ‘விஜய் படமான பீஸ்ட் வெளியாகும் அதே நாளில் தமிழ்ப் பதிப்பை தமிழ் நாட்டில் வெளியிடுகிறீர்கள். இதை விஜயுடன் மோத வேண்டும் என்று திட்டமிட்டு செய்கிறீர்களா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் பதிலளித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இது கே.ஜி.எஃப் படத்திற்கும் பீஸ்ட் படத்திற்கும் இடையே நடக்கும் போட்டியல்ல. இரு படங்களும் இணைந்தே வெளியாகின்றன. இது தேர்தல் அல்ல, சினிமா. ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்று இல்லை. இரண்டு படங்களையும் மக்கள் பார்க்க முடியும். நானும் விஜய் ரசிகன்தான். விஜய் சார் மிகப்பெரிய நடிகர். நான் கண்டிப்பாக பீஸ்ட் பார்ப்பேன். அதே போல விஜய் சாரின் ரசிகர்களுக்கும் ‘கேஜிஎஃப்’ பிடிக்கும் என நம்புகிறேன். நாம் இணைந்து இந்த இரு படங்களையும் கொண்டாடுவோம்”எனக் கூறியுள்ளார். யாஷின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை