சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ பா. ரஞ்சித்தை மீண்டும் பரபரப்பான இயக்குநராக மாற்றியுள்ளது.
இன்னொரு பக்கம், தயாரிப்பாளராக ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘குதிரை வால்’, ‘லேடீஸ் அண்ட் ஜெண்டில்வுமன்’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில் மீண்டும் மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரிசெல்வராஜின் மூன்றாவது படமாக உருவாகும் இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார்.
இது கபடி விளையாட்டை மையமாக கொண்ட படமாக உருவாகி வருகிறது. பிரபல தலித் கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகி வருவதாக தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்துக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியான நிலையில் தற்போது இந்தப் படத்தில் மனத்தி கணேசனாக நடிக்கும் துருவ் விக்ரம், உண்மையான கபடி வீரர்களுடன் விளையாடி கபடி பயிற்சியை மேற்கொண்டுவருகிறார். இதற்காக, தூத்துக்குடியிலிருந்து கபடி வீரர்கள் சென்னை வந்திருக்கிறார்கள். தொடர்ச்சியான பயிற்சிகள் கடந்த தினங்களில் நடந்துவந்திருக்கிறது. தினசரி 2 மேச் விளையாண்டு இந்த பயிற்சி துருவுக்கு தரப்படுகிறதாம். தற்போது முதல்கட்டப் பயிற்சியை துருவ் சிறப்பாக முடித்துவிட்டார் என நடிகர் விக்ரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அப்பா சியான் விக்ரமுடன் துருவ் இணைந்து நடித்துவந்த ‘மகான்’ படத்தின் படப்பிடிப்பில் தன்னுடைய பகுதிகளை நடித்துக்கொடுத்துவிட்டாராம் துருவ். கபடி படுத்துக்காக எம்.ஜி.ஆர். நடித்த புகழ்பெற்ற படமான ‘மதுரை வீரன்’ எனும் தலைப்பை வாங்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.