விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, அந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் உலகநாயகன் கமல்.
இப்படத்தில் ஏற்கெனவே ஃபகத் ஃபாசில், விஜய்சேதுபதி நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவதாக மற்றொரு பெரிய நடிகரான நரேன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் இணைந்தது குறித்து நடிகர் நரேன் கூறும்போது: "இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம் முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன். விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தான் அவர் சொன்னார், உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்பதை! ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன்.
உலக நாயகன் கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்! இது ஒரு மகிழ்ச்சியான செய்தி” என உளம் நெகிழ்ந்து பேசியுள்ளார். நரேன் உள்ளே நுழைந்திருப்பதால் விஜய் சேதுபதி ஃபகத் ஃபாசில் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற இந்த ஏற்பாடா என்கிற பேச்சும் ராஜ்கமல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. வழக்கம்போல மேல்மட்ட விவகாரங்களில் ரகசியம் காக்கப்படும் பட நிறுவனம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    