‘நவராத்திரி’படத்தில் 9 கெட்-அப்களில் சிவாஜியும்‘தசாவதாரம்’படத்தில் 10 தோற்றங்களில் கமலும் சாதனை படைத்தவர்கள். அவர்களது சாதனையைக் கடந்து,‘கோப்ரா’படத்தின் மூலம் புதிய சாதனை படைக்கவிருக்கிறார் விக்ரம்.
‘கடாரம் கொண்டான்’படத்தைத் தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிவரும்‘கோப்ரா’படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க, படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
'கே.ஜி.எப்' படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி உட்பட படத்தில் 6 கதாநாயகிகள் நடித்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. தற்போது 7-வதாக ஒரு கதாநாயகி இணைந்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கிய ‘கென்னடி கிளப்’ படத்தின் மூலம் அறிமுகமான மீனாக்ஷி கோவிந்த் இந்தப் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறாராம். இவருக்கு மட்டும்தான் படத்தில் 45 நாள் கால்ஷீட். ரஷ்யா கல்கத்தா கேரளா என்று நகரும் கதையில் விக்ரமுக்கு இன்னும் எத்தனை தோற்றங்கள் என்பதை இன்னும் படக்குழு வெளிபடத்தவில்லை என்றாலும் படம் தொடங்கிய சமயத்தில் வெளியிட்ட விக்ரமின் ஏழு தோற்றங்களையே சியானின் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
தற்போது படத்துக்கான பேச் ஒர்க் வேலைகளைப் படம்பிடிக்க தயாராகி வருகிறது படக்குழு. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் ‘கோப்ரா’வில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இதில் வில்லியின் கதாபாத்திரம் விக்ரமையே தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    