சிம்புவுடன் முதன் முதலில் கௌதம் மேனன் கூட்டணி அமைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அதை விட்டுவிட்டு ‘அச்சம் என்பது மடமையடா’எனும் மொக்கைப் படத்தைக் கொடுத்ததால் விடிவி ரசிகர்கள் மிகவும் நொந்து போனார்கள். ஆனால் தற்போது இருவரும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற புதிய படத்தில் இணைந்துள்ளனர். இது விடிவி இரண்டாம் பாகம் அல்ல. இந்தப் படத்துக்கான போட்டோ ஷுட் சமீபத்தில் நடந்தது. வேல்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றுதான் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘கிட்டார் கம்பிமேல் நின்று; என்ற குறும்படம் இடம்பெற்றுள்ள நவரசா ஆந்தாலஜி படம் ரிலீஸ் ஆகிறது.
இதற்கிடையில் இன்னொரு அதிரடியையும் செய்திருக்கிறார். கௌதம் மேனன். இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜோஷ்வா: இமை போல் காக்க' படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்காக அதனை விற்பனை செய்யும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். இதற்காக இந்தப் படத்தின் விநியோகஸ்தர்களுக்கான காட்சி நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. வருண், ராஹி, கிருஷ்ணா உள்ளிட்ட பல வளரும் நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகியும் வரவேற்பு போதிய அளவு கிடைக்கவில்லை. இந்தப் படம் விற்பனையாவிட்டால், படத்தை ஓடிடி கொண்டுசெல்லும்முன் திரையரங்குகளில் வெளியிடுவது என்ற முடிவில் தயாரிப்பாளர் இருப்பதை கௌதம் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்னொரு பக்கம், பிரபல நடன இயக்குநர் சாண்டியின் படத்தில் வில்லனாக நடித்து முடித்திருக்கும் கௌதம் மேனனிடம், அந்தப் படத்தின் முதல் வெர்ஷனை உங்கள் கோணத்திலிருந்து எடிட் செய்துகொடுங்கள் எனக் கேட்டிருக்கிறாராம் அந்தப் படத்தின் இயக்குநர் சந்துருவும் நாயகன் சாண்டியும். தற்போது அந்த வேலையிலும் பிஸியாக ஈடுபட்டுள்ளார் கௌதம் மேனன்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    