free website hit counter

கசப்பான ஒரு படத்தில் இனிப்பான ஒரு ‘மெத்தட்’ ஆக்டர்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போவதும் உருமாறுவதும் எல்லா நடிகர்களுக்கு வசமாகும் நடிப்பு முறை அல்ல. அதை இன்றைய நடிப்புப் பள்ளிகள் ‘நேச்சுரல் ஆக்டிங்’ என்கின்றன.

இப்படி நடிப்பவர்களின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்குமே தவிர, அவர்களிடம் கதாபாத்திரத்தை மீறிய நடிகரின் திறமை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், இது விஜய்சேதுபதி நடிப்பு, இது தனுஷ் நடிப்பு, இது கமல் நடிப்பு, இது விக்ரம் நடிப்பு என பாணிகளாக அவை மாறி விடுகின்றன. இந்த வகை நடிப்பை தொடர்ந்து சில ஆண்டுகள் முயலும் ஒரு நடிகரால் எளிதில் அடைந்துவிட முடியும்.

ஆனால், ரஷ்ய மேடைநாடகாசிரியர் ஸ்தானிலாவ்ஸ்கி உருவாக்கிய ‘மெத்தட் ஆக்டிங்’ நடிப்பு முறையைக் கைகொண்டு நடிப்பவர்களின் எண்ணிக்கை இன்று அபூர்வமாக இருக்கிறது. ஹாலிவுட்டில் மார்டீன் ஸ்கார்சசி, மார்லன் பிராண்டோ,  ராபர்ட் டினிரோ, ஹீத் லெட்ஜர், டஸ்டின் ஹாப்மேன் உள்ளிட்ட வெகுசில நடிகர்களால் கற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்ற இந்தக் கலையை ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலில் பயன்படுத்திய ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். வட இந்தியாவில் திலீப்குமார் இந்த வகை நடிப்பில் விற்பன்னராக இருந்தார்.

தமிழில் சமகால நடிகர்களில் கமல் பல படங்களில் முயன்றுள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால் அசலான மெத்தட் ஆக்டிங் நடிப்பு முறையில் வென்று காட்டிய ஒரு வில்லன் நடிகர் ரகுவரன். கதாநாயகர்களில் விக்ரம், சூர்யா இருவரையும் கூற வேண்டும். இவர்களின் வரிசையில் ஆச்சர்யகரமாக தற்போது ஒரு மெத்தட் ஆக்டர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். மலைவாழ் பழங்குடி மக்கள் அடையாள அட்டை இல்லாமல் அரசு இயந்திரத்தால் அலைக்கழிக்கப்படும் அவலத்தை சமீத்தில் உணர்வுபூர்வமாகப் பேசியிருக்கும் படம் ‘தேன்’. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாத இந்த சிறந்த திரைப்படம், தற்போது ஓடிடியில் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. திரையரங்கில் பார்க்காதவர்கள் கூட தற்போது ஓடிடியிலும் திருட்டு வீடியோவிலும் பார்த்துவிட்டு அந்தப் படத்தைக் குறித்தும் அந்தப் படத்தின் நாயகன் தருண்குமாரின் நடிப்பை புகழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.


மலையாள சினிமாவைப் பொருத்தவரை மூத்தவர்களில் மோகன் லால், தற்போது பகத் பாசில் மெத்தட் ஆக்டிங் முறையில் கில்லாடிகளாக இருக்கிறார்கள் இந்திப் படவுலகில் நஸ்ருதீன் ஷா, நானா படேகர், இர்பான் கான், அமீர் கான் என ஒரு பட்டியல் உண்டு. எப்படியிருந்தாலும் ஒரு அறிமுகக் கதாநாயகன் மெத்தட் ஆக்டிங் முறையைப் பின்பற்றியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. தான் ஏற்ற பாத்திரத்தின் நிலவெளிப் பின்னணி, கதைக்கரு, உளவியல் ஆகியவற்றைக் கொண்டு அதற்கென மெத்தட் ஆக்டிங் முறையில் கைகொள்ள வேண்டிய உளவியல் கலந்த உடல்மொழியை தேர்ந்து கொண்டிருக்கிறார். அதற்கேற்ப படம் முழுக்க நடித்திருக்கிறார். பார்க்கிற, உதடு அசைகிற, முகத்தை வெட்டுகிற, தோளை அசைகிற என ஒவ்வொன்றும் அளந்தெடுத்தாற் போல் தனது ஆழ்மனத்தின் உந்துதலிருந்து அவர் நடிப்பதை உணர முடிகிறது.  தருண்குமார் வேறொரு படத்தில் முற்றிலும் நிலவெளி சார்ந்து வேறுபட்ட இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அவரா இவர் என குழப்ப வைக்கும் நடிப்பை இனி தருண்குமாரிடம் எதிர்பார்க்கலாம்.

தருணின் நடிப்பை தேன் பார்த்து விட்டு அவரது தொலைக்காட்சிப் பேட்டியைப் பார்த்தால் அவரா இவர் என வியந்து போகவேண்டியிருந்தது. ஏனென்றால் அந்த மலைக்கிராமத்து பழங்குடியின சாமானியனாக அவர் ஆழ்மனத்திலிருந்து தனது கதாபாத்திரத்தை கட்டியெழுப்பியிருக்கிறார். அவரை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்ததற்காக அப்படத்தின் இயக்குநர் இயக்குநர் கணேஷ் விநாயகனை பாராட்ட வேண்டும். அந்த உயரமான கட்டான உடலை வைத்து அவருக்கு வில்லன்  வேடங்களைத் தான் பொதுவாக கொடுப்பார்கள். ஆனால் தொடர்ந்து வாய்ப்பளித்தால் தருண் தானொரு மெத்தட் நடிகர் என்பதை நிரூபிக்கும் வல்லமை அவருக்கு இருப்பதை எளியவர்களின் கசப்பான அடையாளம் தேடும் வலிகளை  பேசியிருக்கும் இனிப்பான தேன் சொல்லாமல் சொல்கிறது.

4தமிழ் மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction