கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, உடனடியாக மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அவர்களிடம் “நான் திரும்பவும் அரசியலுக்கு வருவேன் என்பதுபோன்ற எண்ணம் பல மக்களிடம் இருந்ததை கவனித்தேன்.
ஆனால், நான், இனி எப்போதுமே அரசியலுக்கு வரப்போவதில்லை”என்று திட்டவட்டமாக அறிவித்தார். அதைவிட முக்கியமாக, தன்னுடைய மக்கள் மன்றங்களை அதிரடியாக கலைத்து அறிக்கை வெளியிட்ட அவர், அவை ஆரம்பத்தில் இருந்ததுபோல் இனி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் தெரிவித்தார். அவர் கூறியதைப்போலவே மக்கள் மன்றங்கள் ரசிகர் நற்பணி மன்றங்களாகச் செயல்பட தொடங்கியிருக்கின்றன.
ரஜினி அரசியலுக்கு வருவார் என கரைவேட்டி கெட்டப்பிலிருந்த ரசிகர்கள், ரஜினியின் பழைய திரைப்படங்களின் ஹேர் ஸ்டைல்களுக்கு மாறிவருகிறார்கள். நற்பணி மன்ற பெயர் பலகைகளை புதிதாக அழகுற வரைந்து அவற்றைத் திறப்பதற்கானப் பணிகளிலும் ரசிகர்கள் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் பல ஊர்களின் சுவர்களில் நற்பணி மன்ற பெயர், ரஜினியின் ஸ்டைலான காட்சிகள் ஓவியங்களுடன் மின்னத் தொடங்கியிருக்கின்றன. ‘பதவி ஆசையில்லாத ரசிகர்கள் தலைவர் பக்கம் நிற்போம்’என்பன போன்ற வசனங்களை எழுதி அதிரடி காட்டி வருகின்றனர். ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாகி மீண்டும் ரசிகர் மன்றாகமாக மாறி ரஜினியைக் கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகியிருப்பது உண்மையில் ரஜினியின் திரை வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் என்றால் அது மிகையில்லை.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை