free website hit counter

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்  மாரடைப்பால் மரணம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படுவர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ் பாரதி, திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் (மார்ச் 25) செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 48. 

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், மனோஜ் பாரதிக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் உடல்நலன் குணமடைந்து வந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் மனோஜ் ஓய்வெடுத்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மனோஜ் பாரதியின் உயிர் பிரிந்தது. 

காலஞ்சென்ற மனோஜ் பாரதி, மலையாள திரைப்பட நடிகை நந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த  1999ஆம் ஆண்டில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'தாஜ்மஹால்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் மனோஜ் கால்தடம் பதித்தார்.  அதை தொடர்ந்து,  சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் கதாநாயகன் ஆகவும், பல்லவன், ஈர நிலம், மகா நடிகன், மாநாடு. அன்னக்கொடி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் மனோஜ் நடித்துள்ளார். 

இவர் கடைசியாக 2022ம் ஆண்டு விருமன் என்ற படத்தில் நடித்து இருந்தார். மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கி இருக்கிறார். 

இயக்குநர் பாரதிராஜாவின் மகனின் திடீர் மறைவு திரையுலக பிரபலங்கள், தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் "பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.  இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

இசை அமைப்பாளர் இளையராஜா, தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மனோஜ் மறைவுக்கு தங்களது துயரையும் பதிவு செய்து வருகின்றனர். 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula