பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையும், தெலுங்கு திரையுலகின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவருமான விஜயேந்திர பிரசாத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்துவரும் தன்னுடைய மகன் ராஜமௌலி ‘ஹாலிவுட்டில் லைவ் அணிமேஷன் திரைப்படம் ஒன்றைய இயக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக’ஹாட்டான தகவலை தெரிவித்துள்ளார். விஜயேந்திர பிரசாத் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் தெலுங்கு திரையுலகை இந்தியளவில் மட்டுமல்லாது உலகளவில் கவனிக்க வைத்த வகையில் ஒரு திரைக்கதை ஆசிரியராக அவருடைய வெற்றி மிகப்பெரியது. தன்னுடைய மகனுக்கு தொடர்ந்து ஆஸ்தான கதாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியாவையும் சீனாவை அதிரவைத்த பாகுபலி எனும் பிரம்மாண்ட புனைக்கதை படத்தைக் கொடுக்க தன்னுடையகா மகனுக்கு பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கான திரைக்கதையை எழுதிய இவர், தற்போது ராஜமெளலி இயக்கி முடித்துள்ள ‘ஆர். ஆர். ஆர்.’ படத்துக்கும் இவரே திரைக்கதை எழுதியிருந்தார். சமீபத்தில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த நிகழ்ச்சியில்தான் தனது மகனின் ஹாலிவுட் நுழைவு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தெரிவித்தார். ரசிகர்கள் சிலர் ‘ரஜினி, கமலுக்கு என்னமாதிரியான திரைக்கதை எழுதுவீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர் சுவாரஸ்யமான பதில்களை தெரிவித்துள்ளார். “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இராவணன் கேரக்டரில் நடிக்க வைக்க திரைக்கதை எழுதுவேன். கமல்ஹாசனுக்கு என்ன கதை எழுதினாலும் வீண்தான். அவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை” என்று கமல்ஹாசனைப் பெருமைப்படுத்தும்விதமாகக் குறிப்பிட்டார்.