90-கள் முதல் 2000-வரை பாலிவுட் சினிமாவில் கனவு ராணியாக வலம் வந்தவர் ஜூகி சாவ்லா. தற்போது பல இந்திப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் அவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில் “இந்தியாவில் 4ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பம் முடிந்து 5ஜி அலைக்கற்றை அறிமுகமாகி இருக்கிறது. இது 4ஜி அலைக்கற்றையைவிட 100 மடங்கு கதிர்வீச்சு கொண்டது, மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, 5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது” என கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இது விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்து விட்டார் எனக்கூறி 20 லட்ச ரூபாய் அபராதமும் செலுத்த ஹூகி சாவ்லாவுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
அதே நேரம், அலோபதி மருத்துவம் குறித்து தொடர்ந்து அவதூறு செய்துவருகிறார் யோக ஆசிரியர் பாபா ராம்தேவ். அலோபதி தடுப்பூசிகளே இன்று கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்கும் பேராயுதமாக விளங்குகின்றன. இந்த நேரம் அலோபதிக்கு எதிரான அவதூறு பேச்சுகள் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. பாபா ராம்தேவ் அலோபதி குறித்து உண்மைக்கு புறம்பானதை பேசக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்குப் போட்ட மருத்துவர்களை கண்டித்ததுடன், ‘பாபா ராம்தேவ் விமர்சனம் செய்யக் கூடாது’ என யாரும் தடை விதிக்க முடியாது என கூறியது குறிப்பிடத்தக்கது.