கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார் நடிகர் யாஷ். முதலிடத்தில் இருந்த ராஜ்குமாரின் மகன் புனித், கணேஷ் போன்றவர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்கள் இருவருக்கும் அடுத்த மூன்றாம் இடத்தில் இருக்கும் கன்னட நடிகர்களில் ஒருவர் ரக்ஷித். இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜுன் ‘ஜிகிர்தண்டா’ படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தது நினைவிருக்கலாம். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘777 சார்லி’ என்ற படத்தைப் பார்த்த கார்த்திக் சுப்புராஜ், அதை வாங்கி தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார். சார்லி என்ற நாயுடனான அன்பை சொல்லும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும், இத்திரைப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பாபி சிம்ஹா அறிமுகமாகும் முதல் கன்னட படம். இந்தப் படம் குறித்து பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்ராஜுக்கு கூறியதால் அவர் இந்தப் படத்தை சலுகை விலையில் வாங்கியிருக்கிறாராம்.
மேலும் இந்தப் படத்தை வாங்கி மலையாளத்தில் டப் செய்து வெளியிட இருக்கிறார் நடிகர், இயக்குநர் பிரித்விராஜ். ‘கே.ஜி.எஃப் 2’ படத்தையும் மலையாளத்தில் பிரித்விராஜ்தான் வெளியிடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுவது பற்றி கூறும்போது ‘சார்லி ஒரு அழகான படம். மனிதனுக்கும் ஒரு அற்புதமான குழந்தைக்கும் இடையிலான நிபந்தனையற்ற அன்பை சொல்லும் படம். இப்படத்தை தமிழில் வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.