வணிக சினிமாவில் கவிநடை பாடல் வரிசைகளின் நடுவே அசாதாரணமாக ஒரு சிறுகதையையே பாடல்வரிகளாக வெறும் கிதார் இசையுடன் கடத்தும் கபேர் வாசுகிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.
ஒரு சுயாதீன தமிழ் இண்டி இசைக்கலைஞரான கபேர் வாசுகி யூடியூப் சேனலின் அண்மைக்கால பிரபலம் ''ஃபிரங்கிபானி பாடல்''!
கபேர் வாசுகி தனது தத்துவார்த்தமான பாடல் வரிகளுக்காகவும், இசையின் மூலம் கதை சொல்லும் தனித்துவமான அணுகுமுறைக்காகவும் அறியப்படுகிறார். குறிப்பிட்ட சில திரைப்படங்களுக்கு பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் பணியாற்றியிருக்கிறார்.
கடந்தாண்டு தொடக்கத்தில் இவரால் வெளியிடப்பட்ட ஃபிரங்கிபானி கதை சொல்லி பாடல் அப்போதே கவனம் பெற்றது. இந்நிலையில் அப்பாடலின் மீள் உருவாக்க காட்சிப்படைப்பாக மீண்டும் அண்மையில் வெளியானது. முதல் தடவை கேட்பவர்களுக்கு சற்றே சோர்வை தரலாம் ஆனால் இறுதிவரை கேளுங்கள் கதை உயிரோட்டமாய் ஆளும்.
இந்த மலர் போலவே அவரது பிற கதைசொல்லி பாடல்களும், மனதிற்கு இதமான வாசனையைத் தருபவை.
