free website hit counter

வேல் வழிபாடு !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து” என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது.

முருகனின் ஆயுதமாக மட்டும் வேல் கருதப்பட்டிருக்குமாயின் அதற்கென தனி வழிபாட்டு மரபுகள் ஏற்பட்டிருக்க முடியாது. அதற்கு மேலும், அதாவது முருகனே வேலாகா, வேலே முருகனாக எண்ணி வழிபடும் மரபு தோன்றிய போது தான் அதற்கென தனி வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

சங்க காலம் தொட்டு வளர்ந்து வந்துள்ள இவ்வழிபாட்டு முறைகளை ஆராய்கின்றபோது சங்ககாலம் தொட்டு இன்று வரை மக்கள் வேலின் பால் தெய்வநம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளமையை உணரமுடிகின்றது.

“வெறியயர்தல்”

சங்க காலத்தில் ‘வேல்’ வழிபாட்டுச் சடங்குகள் ‘வெறியயர்தல்’ என்ற பெயரில் நிகழ்ந்துள்ளன. அழகும் இளமையும் கொண்ட மகளிர் நலம் குன்றின காலத்து, அவர்களின் பெற்றோர் வேலனை வெறியாட அழைத்துள்ளனர். இவ்வாறு அவன் வெறியாட அழைக்கப்படும் போது வேலன் கையில் வேல் கொண்டு வருகின்றான். வழிகள் சில சந்திக்கும் இடத்தில் வெய்மணலைப் பரப்பி, செந்நெல் வெண்பொறிகளைத் தூவி, பந்தர் அமைத்து, பூபல பெய்து, பசுந்தழை, காந்தள், பூக்குலைகளைச் சுற்றிக்கட்டி, வேலை மையமாக வேலன் நடுகின்றான். பிறகு முருகன் பெயரை வாழ்த்தி, முருகன் தம்மேல் எழுந்ததாகக் கொண்டு, வேல் எடுத்து ஆடுகின்றான். இவ்வாறு அவன் ஆடுகையில் மணிகள், இயம்பங்கள் ஒலிக்கின்றன. மகளிர் குறிஞ்சி பாட, தூபம் எங்கும் புகைகிறது.

“பொய்யா மரபினூர் முதுவேலன்
கழங்கு மெய்ப்படுத்துக் கன்னந்தூக்கி
முருகென மொழியுமாயின்”

என்ற பாடலின் படி வேலன் கழங்கு இட்டு. கணக்கு பார்த்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது உரைப்பதும் உண்டு. “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” என இவனின் சிறப்பைத் தொல்பாக்கியம் (பொருள் : 60) குறிப்பிடும். இவ்வாறு வெறியாடும் திறம் குறுந்தொகை, நற்றிணை அகநாநூறு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் உள்ளன.

சிவபெருமான் சூரர்களை அழிக்க, முருகனுக்குத் தந்தது வேல். அது எப்படைக்கும் நாயகம் ஆவது என்று கந்தபுராணம் பேசுவது வேலின் தனித்த சிறப்பை முன் வைப்பதாக உள்ளது. மேலும் இற்றைக்காலத்தில் சிக்கல் போன்ற பல திருத்தலங்களில் வேல் வழங்கும் விழா சிறப்புற நடைபெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வேல் குறித்த பக்திப் பனுவல்கள்

வேல், புராணப் பின்னணி, சங்க இலக்கிய வழிபாட்டுப் பின்னணி பெற்றிருப்பினும், அருணகிரியார் காலத்தில் தான் தனி பெரும் நிலையை அது அடைக்கின்றது. வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு, வேல் விருத்தம் போன்றன அருணகிரியாரால் ‘வேலை’ முன்னிறுத்தி பாடப்பட்ட பனுவல்கள் ஆகும். இவை காலப் போக்கில், வேலை தனிப்பெருந் தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்த்துகின்றன.

“கண்டு குலையும் பொழுதில் அஞ்சலென
மென்சரண
கஞ்சமுத அங்கருணை வேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர்
தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே”

இப்பாடல் வரிகள் வேல் உணர்வுக்குச் சான்றாகின்றன. மேலும் மெய்ஞ்ஞான நிலைக்கு, அயனுமாலும் முறையிட அசுரல் கோடி துகளெழ விடு மெய்ஞ் ஞான அயிலோனே (திருப்புகழ், 317) என வேலை அருணகிரி நாதர் உணர்த்திப் பாடுகின்றார்.

எனவே வேல் இவ்வாறு பல புலவர்களாலும், முருகனுக்கு ஈடான புகழைப் பெருமளவிற்குச் சிறப்பு பெற்றுள்ளது என்ற தெளியமுடிகின்றது.

“வெல்லுகின்ற தன்மை உடையது ஆதலின் வேல் என்ற பெயர் உண்டாயிற்று அந்தவேல் ஞான சக்தியின் வடிவத்தைப் பெற்றது”

“முருகனுக்கு ஆறுமுகம் இருப்பது போல வேலுக்கும் ஆறுபடைகள் உண்டு. முருகப் பெருமான் திருவுருவத்தையும், அவன்பால் சார்ந்திருக்கும் வேலையும் தரிசிக்கும் போது கவனித்தால், அது அவன் அடியையும் கரத்தையும் தொட்டுக் கொண்டு முடியுமளவும் செல்வதைக் காணலாம்.”

“இலங்கையில் கதிர்காமம் மேலும்  சில கோயில்கள் மலேசியாவில் பத்துமலைக் கோயில், கோலாலம்பூர் சந்தசாமி கோயில் ஆகியவற்றில் வேலே நிறுவப்பெற்று வழிபடப் பெறுதல் முருகனும் வேலும் ஒன்றே என்ற சிந்தனையையும், முருகனுக்குக் கொடுக்கும் மதிப்பையே வேலுக்கும் கொடுத்தார்கள் என்ற உண்மையையும் புலப்படுத்துகின்றன.” என்ற அறிஞர்fளின் கருத்துக்களின் படி வேல் தனியொரு தெய்வமாக விளங்கி இக்காலத்தில் சிறப்புப் பெற்றுள்ளது என்பதை உணரலாம்.

நன்றி : முனைவர் மு. பழனியப்பன்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction