free website hit counter

திருவாசகம் தந்த மணிவாசகர் குருபூஜை !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சைவமும் தமிழும் தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளும் இன்றும் எம்மிடையே மறையாது இருக்கின்றதென்றால் அதற்கு தேவார திருவாசகங்கள் பாடிய நால்வர்களும் ஒரு காரணம்.

அவர்களால் இயற்றப்பட்டு அவர்களால் பாடப்பெற்று அதி அற்புதம் நிறைந்த இப்பாடல்களை இன்றும் நாம் ஆலயங்களிலும் இந்து சமய நிகழ்ச்சிகளிலும் பாடி வருகின்றமை, தொன்று தொட்டு வரும் மரபாகும். அந்த வகையில் இத் தேவாரங்களை பாடி எமக்குத் தந்தவர் மூவர். தேவாரம் பாடிய மூவரில் ஒருவர் மூன்று வயதிலேயே உமையம்மையின் ஞானப்பாலுண்டு சிவபிரானின் அருளால் திருவாய் மலர்ந்து தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர். அடுத்தவர் சிவபிரானை நினைந்துருகி திருத்தாண்டகம் மற்றும் அநேகபதிகங்கள் பாடி இறைவனாலேயே நாவுக்கரசர் எனப்பெயர் பெற்றவர். மற்றவர் சிவனின் தோழனாக ஆட்கொள்ளப் பட்டு அநேக பதிகங்கள் பாடி இறையருள் பெற்ற சுந்தரர். இவர்களோடு திருவாசகம் பாடியருளியவரே மணிவாசகர் ஆவார்.

இவரது திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார். அவ்வளவும் மாணிக்கங்கள். மெய் ஒளி வீசி எம் உள்ளத்தில் பாய்ந்து எமை மெய்மறக்கச் செய்யும் பாடல்களாகும். சிவனின் அற்புதங்களை எடுத்துக் கூறி உருகி உருகிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர். அவற்றை நாம் பாடும் போது எம்மில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். எமது துயரங்களில் இருந்து மீண்டு சந்தோசங்களில் நிலைக்கச் செய்யும் அவ்வளவு இனிமையானது திருவாசகம் எனும் தேன்.

வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாயிருக்க எதை எல்லாமோ தேடி எப்போதும் பரபரப்புடன் அலைந்து திரிந்து கொண்டு இருப்போம். ஏட்டிக்கு போட்டியாக எதைப்பற்றிப்பிடித்து முன்னேறுவது என்றே குறிக்கோளாய் இருப்போம். நாம் நினைப்பவைகள் சரியாக கிடைக்க வில்லையா உடனே சோர்ந்து போய் உட்கார்ந்து விடுவோம். அந்த நேரத்தில் கோபம் அதிகமாகும், அது பாபத்தை தேடும். ஆனால் நாம் எமது மனதை சற்று கட்டுப்படுத்திக் கொண்டு இந்த திருவாசகத்தை எடுத்து பாடிமனதில் இறைவனை நினைந்துருகி விட்டால் அவன் எமது துன்பங்களைத் தொலைத்து இன்பங்களை வெற்றி கொள்ளச் செய்வான்.

இந்த மாணிக்கவாசகரைப்பற்றி அவரது திருவாசகத்தைப் பற்றி அவருக்கு பிறகு வாழ்ந்திருந்த இராமலிங்க அடிகளார் வெகு அழகாகப்புகழ்ந்து கூறுகிறார். அது என்ன என்றால்,

<வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ் சாற்றில் தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்துஎன் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே> என்று திருவருட்பாவில் இயம்பியுள்ளார்.

அப்படிப்பட்ட இத்திருவாசகத்தை இயற்றிய மணிவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிராம்மண குலத்தில் சம்புபாதாசிரியருக்கும், சிவஞானவதியாருக்கும் மகனாப்பிறந்தார். பெற்றோர் அவருக்கு 'திருவாதவூரர்' எனும் திருநாமம் சூட்டி வளர்த்தனர். சிறுவயதிலேயே பலகலைகள் கல்வி யாவும் கற்றுத்தேர்ந்தவராக விளங்கினார். அவர் வல்லவராக விளங்கியதால் மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னன தனது அமைச்சராக வாதவூரரை நியமித்து 'தென்னவன் பிரம்மராயன்' எனும் பட்டத்தையும் அவருக்கு வழங்கி கெளரவித்தான். பின்னர் தனது படைக்கலங்களைப் பெருக்க எண்ணி குதிரைகள் வாங்க பெரும் பொருள் கொடுத்து மன்னன் அனுப்பிவைத்தான்.

திருப்பெருந்துறைக்குச்செல்கிறார் வாதவூரர். அங்கே குருந்த மரநிழலில் எம்பெருமான் சிவபெருமானால் ஆட்கொள்ளப் படுகிறார். சிவபிரான் தமது திருவடியை வாதவூரர் தலையில் சூட்டி ஞான உபதேசம் செய்து திருவருளை குருவடிவில் அருள்கின்றார். அமைச்சராகிய வாதவூரர் தனது செல்வம் அனைத்தையும் திருப்பெருந்துறை திருக்கோவில் திருப்பணிகள் செய்வதற்கு செலவிட்டார். சிவனை நினைந்து உருகி உருகிப் பாடினார். அருள் ஞானம் பெற்றுப் பாடிய வாசகங்கள் யாவும் மாணிக்கங்கள் போன்று இருக்க இறைவனும் அவருக்கு 'மாணிக்க வாசகன்' என்று பெயர் சூட்டினார். அவரும் பாடி பணிந்து சிவனின் நினைப்பிலேயே இருந்து விட்டார். அதன் பின் வந்த வேலை நினைவுக்கு வரவே வாதவூருக்குத் திரும்பி வந்து மன்னனிடம் சென்று பணிகளை ஆற்றுவதற்குச் சென்றார்.

அங்கு குதிரைகளையும் கானோம். பணத்தையும் கானோம் எங்கே என அரசன் கேட்டான். மாணிக்கவாசகரோ இறைவனிடம் மன்றாடினார். அவர் இன்னாளில் வரும் என்று மன்னனுக்குச் சொல்லுமாறு அசரீரியாகச் சொல்லி அனுப்பினார். குறிப்பிட்ட நாளில் குதிரை வரவில்லை. மன்னன் மாணிக்கவாசகரை துன்புறுத்தத் தொடங்கினான். இறைவனை நினைந்து மணிவாசகரும் உருகலானார். சிவனாரோ நரிகளைக் குதிரைகளாக்கி அனுப்பி வைத்தார். மன்னன் மகிழ்ந்தான். ஆனால் அன்றிரவே பரிகள், நரிகளாகி ஏற்கனவே இருந்த குதிரைகளை கடித்துக் கொன்று விட்டு பாய்ந்தோடின. அதைக் கேள்வியுற்ற மன்னன் வைகைநதிக்கரை சுடுமணலில் மாணிக்கவாசகரை நிறுத்தி துன்புறச்செய்தான்.

இறைவன் தன் அடியார் படும் துயரை நீக்கிட அருள்பாலித்தார். வைகைநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வைகை நதி அணைகட்ட வருமாறு ஊர் மக்களுக்கு அரசன் அறிவித்தான். ஊரை வெள்ளம் அணைக்கத்தொடங்கியது. ஊரைக் காக்க மக்கள் எல்லோரும் அவரவர் பங்குக்கு அணைக்கட்டினர். வயதான மூதாட்டிக்கு அனைகட்ட யாரும் இல்லை. இறைவனை நினைந்து பாடவும் கூலியாளாக சிவபெருமானே வருகிறார். அந்த வயதான கிழவியைப் பார்த்துக் கேட்கிறார். அணைகட்ட கூலி என்ன தருவாய் என்கிறார். கிழவியோ என்னால் எது இயலும் நான் அவித்த பிட்டைத் தருவேன் .என்று கூறவும், சிவனாரும் மண்வெட்டியால் மண்ணை வெட்டி கூடையில் போட்டு அணையை அடைக்கிறார். அரைகுறையாகச் செய்து விட்டு வந்து பிட்டை உண்டு மரத்தடியில் படுத்துறங்கி விடுகிறார்.

காவலர்கள் இருந்த கிழவியின் பங்கு அடைபடாமல் உடைப்பெடுத்துக் கொண்டிருக்க கிழவியிடம் சென்று கேட்ட போது அவளும் கூலியாளைச் சுட்டிக்காட்டினாள். அவர்கள் சென்று அவரை எழுப்ப அவர் எழுந்து அணைகட்டுவதும் பிட்டைவாங்கிச் சாப்பிடுவதும் தூங்குவதுமாய் இருக்கிறார். காவலர்கள் மன்னனிடம் சென்று முறையிட அவனும் வந்து பார்த்து விட்டு பிரம்பால் அடிக்கிறான். அந்த அடி எல்லோர் முதுகிலும் அடிவிழ எல்லோரும் இறவனே திருவிளையாடல் புரிந்தார் என உணர்ந்து அவர் பெருமையை அறிந்து மன்னன் வருந்தினான். மாணிக்கவாசகரையும் விடுவித்தான்.

மணிவாசகரின் பக்தியை உலகம் அறியச் செய்ய பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியும் பட்டார் நம்சிவபிரான். என்னே அவரின் திருவருள் அதன் பின்னர் மாணிக்கவாசகர் அரசரிடம் கூறி விட்டு அமைச்சரவை பதவியில் இருந்து நீங்கினார். கடவுள் தொண்டாற்றிட புறப்பட்டார். அருள் பாடல்கள் பாடி அடியார்களோடு பலதலங்களுக்கும் சென்றார். புத்தரை வாதில் வென்றார். ஊமைப்பெண்ணை பேசவைத்தார். இன்னும் பல அற்புதங்களைச் செய்தும் சமயத்தை வளர்த்தார். அப்படி அவர் தில்லை சென்று சிதம்பரநடராஜர் மேல் அளவற்ற பக்தியும் அன்பும் கொண்டு திருவாசகம் சிவபுராணம் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை என்று பலபாடல்கள் பாடி அருளினார்.

இவரது பாடலில் மனமமகிழ்ந்த எம்பெருமானாகிய சிவபிரான் அந்தணர் உருவில் வந்து திருவாசம், திருப்பாவை எல்லாவற்றையும் தொகுத்தளிக்குமாறும், 'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று கூறிச்சென்றுவிட்டார். மாணிக்கவாசகரும் திருவெம்பாவை பாடியவாயால் கோவைபாடினார். இறைவனைப் பணிந்தார். 'எனக்கு யாது தெரியும் எல்லாம் நின் அருளே' என்று இறையைச் சரணடைந்தார். மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் யாவற்றையும் இறைவன் தன் கரத்தாலே எழுதி ''இங்கனம் மாணிக்கவாசகன் சொல்லியபடி அழகிய சிற்றம்பலமுடையார் எழுதியது'' எனக் கைச் சாத்தும் இட்டு மறைந்தருளினார். இவரது திருவாசகமும் திருக்கோவையாரும் சிதம்பரம் திருக்கோவில் வாசலில் இருந்து கண்டெடுத்தனர்.

மக்கள் இறையருளையும் மாணிக்கவாசகரின் பக்தியையும் கண்டு அதிசயம் அடைந்தனர். இந்து மதம் வளர்ச்சி குன்றாது மங்காது இருக்க நால்வர் பாடிய தேவாரப் பதிகங்களே இன்றளவும் பேருதவி புரிகிறது எனலாம்.

<திருவாசகம்>

சற்குருதரிசனம்.
பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத சழுக்கனேன் உனை ச்சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

<திருக்கோவையார்>

பொருளா எனைப்புகுந்தாண்டு புரந்தரன் மாலயன் பால்
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனலாம்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியின் ஒழியா தழியும் என் ஆருயிரே.

இந்து மதம் குன்றாது தேன்சுவை கலந்த திருவாசகத்தை தந்த மாணிக்கவாசக சுவாமிகள் தில்லையில் இறைவன் திருவடி நிழலை அடைந்த தினம் ஆனிமாத மக நட்சத்திரமாகும். அவரது குருபூஜைத்தினம் இன்று. இந்நாளில் ஆலயம் சென்று பூஜை வழிபாடாற்றி திருவாசகம் ஓதி, பயனை அடைவோமாக.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction