எப்போதும் சிவ தியானத்திலிருக்கும் நந்திகேஸ்வரர் ஜீவாத்மாவின் அடையாளம். பரமாத்வை அடையும் நோக்கில் தியானித்திருக்கும் ஜீவாத்மாவிற்கு இடையுறு செய்யும் செயல்கள் எதுவாயினும் அது நன்மை பயக்காது என்பதனைச் சுட்டியே, அவ்வாறான நடைமுறைகளை ஆலயங்களில் தவிர்க்கக் கூறுகின்றார்கள்.
இது சிவன் கோயில்களில், நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்று மட்டும் எண்ணப்படுவதில்லை. கோவில் மூலவர் எவரோ அவரது வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் (இறைவன்) பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பதுவே.
ஆலய வழிபாட்டில் முதல் தெய்வம் விநாயகர் என்றால் ஆலயத்தின் முதல்வர் நந்தீஸ்வரர் எனவும், அதனாற்தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது எனச் சொல்வதுமுண்டு.
நந்தியெம்பெருமானுக்கு, ரிஷபதேவர், என்றும் பெயருண்டு. சிவபக்தர்களில் இவரே தலைமையானவர். சிவ ஆகமங்கள் அனைத்தும், நந்திகேஸ்வரர் மூலமாகவே உலகிற்கு வெளிப்பட்டன. அடியவர்களுக்கு அருள்புரியும் போதெல்லாம் சிவபார்வதி நந்திமீது எழுந்தருளி காட்சியளிப்பர். எப்போதும் சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை தர்மத்தின் வடிவமாகப் போற்றுவர். இவரின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று சிவன் நடனம்புரிவதாக ஐதீகம். வெள்ளை உள்ளம்படைத்த இவரை வழிபட்டால் தடைகள் நீங்கி, செயல்கள் வெற்றி பெறும்.
நந்தி என்றாலே ஆனந்தம் என்று பொருள். அவரை வழிபடுவதனால் எல்லோரையும் ஆனந்தமாக வைத்திருப்பார் என்பது நம்பிக்கை. நந்தியின் நிறம் வெள்ளை, வெண்மை என்பது தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் தர்மமும் நிறைந்தது.
“செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து நம் பவமறுத்த நந்திவானவர்” எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தான் என்பது தெளிவாகின்றது.திருமூலருக்கு குருவாக இருந்த நந்தி பெருமான்தான், ஒன்பது வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவர் மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. சிவபெருமான் நாட்டியக் கலையை பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க, அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்ததாக அபிநய தர்ப்பணம் என்ற பரத நாட்டிய நூல் கூறுகிறது.
சிவபெருமான் நந்தி புராணத்தில் நானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதற்கு சமமாகும்.
நந்திகேஸ்வரருக்குரிய மற்றைய நாமங்கள், ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், நந்தீசர், நந்தீஸ்வரர், நந்தியெம் பெருமான் என்பனவாம்.
" நந்தி மாதிரி குறுக்கே நிற்பதாக " எதிர்மறைபேசுவோரும் உண்டு. ஞானத்தின் தன்மை புரியா நிலையது. அறிவின் வடிவம் எப்போதும் அழிவின் வழியைத் தடுக்க விழையும். அதனைப் புரியும் அறிவிலாவிடின் நந்தி குறுக்கே நிற்பதாக உணர்வர்.
நந்தி பகவானை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார். சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம். அதோடு வாழ்வில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும், குருவின் ஆசி கிடைக்கும் மேலும் மனமானது அமைதிகொள்ளும்.
இன்று நந்திகேஸ்வர ஜெயந்தி. நந்திகேசுவரனைப் போற்றி செய்வோம் நலம் பெறுவோம் !