free website hit counter

குரு பூர்ணிமா

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆடி மாதத்தில் (ஜுலை-ஆகஸ்ட்) வரும் பௌர்ணமி “குரு பூர்ணிமா” அல்லது “வியாச பூர்ணிமா” என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச தர்மத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள். இந்த பூமியில் அவதரித்து, உள்நிலை மாற்றத்திற்கான அறிவை வழங்கிய ஞானமடைந்த குருமார்களைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் அமைந்திருக்கிறது. “குரு” என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு “இருளை விலக்குபவர்” என்று பொருள். குரு பூர்ணிமா அன்று ஆன்மீக சாதகர்கள் குருமார்களுக்கு நன்றி செலுத்தி அவர்கள் அருளைப் பெறுகிறார்கள். குரு பூர்ணிமா அன்று யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் பயன் பெறுகின்றனர்.

சன்னியாச தரமத்தில் ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

குடிசைகளில் தங்கி இருந்து சந்நியாச ஆசிரமத்தைக் கடைப்பிடிப்பவர்களைக் “குடீசர்கள்” என அழைப்பார்கள்.

நீர் அதிகம் உள்ள நதிக்கரைகளில் வாழும் துறவிகளை “பஹூதகர்கள்”என அழைப்பார்கள். இவர்கள் பிக்ஷை எடுத்தே உண்ணுவார்கள். அடிப்படையில் சந்நியாச ஆசிரமத்தின் கட்டுப்பாடுகள் ஒன்றே என்றாலும் நுணுக்கமான வேறுபாடுகளும் உண்டு.

அடுத்துப் பரிவ்ராஜகர்கள்! இவர்கள் ஓரிடத்தில் தங்க மாட்டார்கள். பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் பரிபூரணப் பக்குவ ஞானம் அடைந்தவர்களாக இருப்பார்கள். ஒரே ஊரில் தங்குவதும் அங்குள்ள மக்களுக்குப் போதிப்பதும் இவர்கள் வரை சரியானது அல்ல. ஒரே இடத்தில் தங்கினால் அந்த மக்களிடம் பற்றோ, பாசமோ ஏற்பட்டு விடும் என்பதால் இடம் மாறிக் கொண்டே இருப்பார்கள். இவர்களும் குரு, சிஷ்ய பரம்பரையில் தான் வந்திருப்பார்கள்.

பொதுவாக சந்நியாசிகள் மூன்று நாட்களுக்கு மேல் ஓர் இடத்தில் தங்கக் கூடாது என்பார்கள். என்றாலும் இந்தச் சாதுர்மாஸ்யம் ஆரம்பித்தால் மட்டும் ஒரே இடத்தில் தங்குவார்கள். ஏனெனில் இவர்கள் மழைக்காலங்களில் ஊர் ஊராகப் பயணம் செய்ய முடியாது. மழைக்காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் புதிய செடிகள், துளிர்கள் முளைத்து வரும். புழுக்கள், பூச்சிகள் நிறையக் காணப்படும். இவற்றை மிதிக்காமல் நடக்க வேண்டி இருக்கும். சாலைகளின் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கூடப் புழுக்கள், பூச்சிகள், பாம்புகள் போன்றவை மறைந்திருக்கலாம்.

எவ்வுயிர்க்கும் இல்லல் விளைவிக்காவண்ணம் அஹிம்சை என்பதைப் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பதே சந்நியாச யோகத்தில் முக்கியமானது. ஆகவே சந்நியாசிகளும், துறவிகளும், பரிவ்ராஜகர்களும் இந்த நான்கு மாதங்களில் ஒரே இடத்தில் தங்கித் தங்கள் விரதத்தை அனுஷ்டிப்பார்கள்.

குறிப்பாக இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், ஆடி மாத பவுர்ணமி அன்று தான் மழைக்காலமும் தொடங்கும்.

அவர்கள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங்கும் பொழுது இருக்கிறார்களோ அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கிவிடுவார்கள். அவ்வூரில் வாழும் மக்கள் சன்னியாசிகளிடம் நான்கு மாதங்களில் வேதாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொள்வார்கள். அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து பிச்சைக்கும் ஏற்பாடு செய்வார்கள்.

வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையிலும், தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது….

இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர்தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே, வியாச முனிவரின் பங்குள்ளது.

எனவே வியாச பகவானை முன்வைத்து, ஆனி மாதப் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது.

ஆன்மீகத்தில் ஒரு பழமொழி உள்ளது இறைவனால் கொடுக்கப் பட்ட சாபத்தை ஒரு குருவினால் மாற்ற முடியும், ஆனால் ஒரு குருவினால் கொடுக்கப்பட்ட சாபத்தை இறைவனாலும் மாற்ற முடியாது என்பதாகும். இதனை கூர்ந்து நோக்கினால் குருவின் வலிமை தெரியும்..

“த்யான மூலம் குரோர் மூர்த்தி
பூஜாமூலம் குரோர் பதம்
மந்த்ரமூலம் குரோர் வாக்யம்
மோக்ஷமூலம் குரோக்ருபா!’

“தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்;

பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்;

மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்;

குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’

இந்த நன்னாளில் நாம் நம் குருமார்களுக்கு நம் மரியாதையை செலுத்தி குருவின் திருப்பாதங்களை இறுக பற்றுவோம். இந்த குரு சிஷ்ய பரம்பரை இன்னும் தொடர்த்து வர நம் குழந்தைகளும் தத்தமது குருமார்களை அடையாளம் காட்டுவோம்

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வரஹ

குரு சாட்சாத் பரப்ரம்மா

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.

பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் இவர்கள் குரு தேவர்கள். குருவின் அன்றாட நடவடிக்கைகள், எண்ணங்கள், சொற்கள் ஆகியவைகள் உண்மையைப் பிரதிபலிக்கும். அதாவது இம்மூன்று குணங்களையும் கடந்தவர் என்று பொருள். ஒழுக்கத்தை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதால் அவர் பிரம்மாவாக கருதப்படுகிறார். நல்ல பழக்கங்களைப் பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதப்படுகிறார். தீய குணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதப்படுகிறார். இந்த மூன்று பணிகளையும் செய்வதால் அவர் மூம் மூர்த்திகளுக்குச் சமமாக போற்றப்படுகிறார்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள், இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம், பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம். குரு என்பது சுழுமுனை சுவாசம். இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வநிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகத்தத்துவம். சுழுமுனை என்னும் சூட்சுமசுவாசம் அதிகமாக நடைபெறும் ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா. இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கி கொண்டு குருவின் துணையோடு யோகசாதனையைத் தொடங்கும் அற்புதநாளே குரு பூர்ணிமா.

குரு எப்படிப்பட்டவர் என்பது முக்கியம் இல்லை, எத்தகைய வழியை நமக்கு காட்டுகிறார் என்பதே முக்கியம்.

ஒரு ஊரில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவ்வூரில் அவனை பற்றி தெரிந்ததால், அவனால் திருட்டு தொழிலை செய்யமுடியவில்லை. வேறு ஊருக்கு சென்று திருட்டு தொழிலை செய்ய முடிவு செய்து பயணமானான். வெகுதூரம் பயணப்பட்டு ஓர் ஊரை அடைந்தான். திருடனுக்கோ அகோர பசி. உணவுக்கு எங்கு செல்வது என பார்க்கும்பொழுது பூசணிக்காய் தோட்டம் ஒன்று இருப்பதை கண்டு வேலியை தாண்டி குதித்து பூசணி பழத்தைத் திருடி உண்ண எண்ணினான்.

வெள்ளை பூசணி பழத்தை திருடும் சமயம் தோட்ட காவல்காரன், யாரோ ஒருவன் தோட்டத்தில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டான். சப்தம் கேட்டு மக்கள் கூட்டமும், தோட்ட காவல்காரனும் வருவதை கண்ட திருடன் மறைந்துகொள்ள இடம் தேடினான். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும் ? உடனே சமயோஜிதமாக தனது ஆடைகளை கழற்றி விட்டு பூசணிக்காய் மேல் படந்திருக்கும் சாம்பலை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டான். திருடனை நெருங்கிய மக்கள் நீண்ட நாட்கள் பசியில் மெலிந்த உடல், சாம்பல் பூச்சு என அங்கு ஒரு சிவ தொண்டு புரியும் ஆன்மீக குரு இருப்பதாக நினைத்துகொண்டனர்.

திருடனின் சாம்பல் பூச்சு அவனை ஒரு முனிவனாக காட்டியது. தாங்கள் முனிவரை தவறாக எண்ணியதாக கூறி மன்னிப்பு கேட்டனர். ஊருக்கு வந்த புதிய முனிவரை காண பலரும் வரத் துவங்கினார்கள். ஞானத்தேடல் கொண்ட ஒருவன் இந்த முனிவரை சந்தித்தான். “ரிஷி புருஷரே என்னை சிஷ்யனாக ஏற்று உங்களைப் போல ஞானம் அடைய வழி சொல்லுங்கள்” என கேட்டான். பூசணி முனிவருக்கு ஞானம் என்றால் என்ன என்றே தெரியாது. வாய் திறந்து பேசினால் தனது சுயரூபம் தெரிந்துவிடும் என்பதால் சைகையில் பேச ஆரம்பித்தார்.

ஆசீர்வதிப்பதை போல கைகளை உயர்த்தி, பூசணிக்காய் போல கைகளை காட்டி தனது உடல் முழுவதையும் காட்டிவிட்டு கண்களை மூடினார் பூசணி முனிவர். ” பூசணி திருட வந்த நான் இவ்வாறு ஆகிவிட்டேன்” என்பதையே சைகையில் முனிவர் கூறினார். வாலிபனோ தன்னை ஆசீர்வதித்து சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார் என்று நினைத்தான். மேலும் “உலகில் எதுவும் இல்லை, அனைத்தும் உன் உள்ளே இருக்கிறது” என குரு உணர சொல்வதாக எண்ணிக்கொண்டான்.

சிஷ்யனோ ஆனந்தமாக அவரை மூன்றுமுறை வலம் வந்து வணங்கி விடைபெற்றான். வருடங்கள் ஓடின. தீவிர தேடலில் சிஷ்யன் ஞானம் அடைந்தார். இந்த கதையின் மூலம் குருவின் தன்மை முக்கியமில்லை. குரு உங்களில் என்ன ஏற்படுத்துகிறார் என்பதே முக்கியம் என உணருங்கள்.

முழுமை நிலையில் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் பாக்கியமாக அமைந்த நாள் தான் “குரு பூர்ணிமா “. முழுமையை உணர்த்தும் பௌர்ணமி அன்று இருக்கும் உயிர் கூட இறைநிலையை நோக்கி உயர்த்தக் கூடியது இந்த திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும் குரு பூர்ணிமா தனி மனிதன் குருவின் வழிகாட்டுதலை துவங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைகிறார்கள்.

நன்றி: saibalsanskaartamil

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction