free website hit counter

ஆடிப்பூரத்தில் அவதரித்த ஶ்ரீ கோதை நாச்சியார்!

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"அன்ன வயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியமின்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்த சூடர்க் கொடியே தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய் நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி யென்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு
ஆண்டாள் வாழி திரு நாமம்"

இப்படி உய்யக் கொண்டார் கோதையை வாழ்த்திப் பாடி சிறப்பிக்கின்றார். அப்படி போற்றப்பட்டவரே ஶ்ரீ ஆண்டாளாகும். மாயவன் தன்னை மணஞ் செய்யக் கண்ட தூயநற்கனவை தோழிக்கு உரைத்து பத்துபாடல்கள் பாடினார். அப்படிக் கோதை பாடியதே "வாரணமாயிரம்" என்னும் திருமொழியாகும். கண்ணனையே மனதில் நிறுத்தி தெய்வமாக உயிராக அவனை நினைந்து உருகிறாள். அரங்னை உயர்ந்த நிலையில் வைத்து ஆண்டு கொண்டிருந்த உன்னதபாவை திருப்பாவை எனும் பாமாலை சூடுகிறாள், ஆண்டாளாக ஶ்ரீ கோதை நாச்சியாராக அரங்க நாயகியாக சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக இப்படி எல்லாம் விளங்குகின்ற கோதை அவள் அவதரித்த தினமே ஆடிமாத பூர நட்சத்திரமாகும். கண்ணண், அவனை நாயகனாய் மனதில் இருத்தி வழிபட்டாள். <மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்..என்று திருப்பாவை பாடியருளினாள்.

தோழிகளை தனது தேனினும் இனிய குரலால் பாவை பாடி துயில் எழுப்பினாள். அதிகாலையில் மாதவனுக்கு மிகப்பிடித்த மாதமாகிய மார்கழியில் அவனை பூமாலைகளாலும் பாமாலைகளாலும் சூடி வழிபட்டாள். அந்த ரங்கநாயகி அரங்கனை தானாகவே பாவித்துக் கொண்டாள். தந்தை ஆழ்வார் பதிபக்தியுடன் புனைந்து வைத்த மாலையினை எடுத்துச் சூடிக்கொண்டாள், கண்ணாடியில் தன் மனதில் உள்ள கண்ணனை கண்டு மகிழ்ந்தாள். அச்சமயம் அங்கு வந்த தந்தையார் கண்ணுற்று வேறு மாலையினைத் தொடுத்து எடுத்துச் செல்கிறார். அரங்கநாதன் ஆலயத்தில் அம் மாலையை சுவாமிக்குச் சாற்றுகிறார். மாலை நழுவி கீழே விழவும் பதறிப்போனார்.

"நாராயணா ஏதும் தவறு செய்திருப்பின் என்னை மன்னைத்து விடு" என்று பாதக் கமலத்தில் வீழ்ந்து வணங்கினார். ஶ்ரீ மந்நாராயணனோ அவருக்கு அசரீயாக "கோதை சூடிக்களைந்த மாலையினை எனக்கு அணிவித்து ஆராதிப்பாயாக" என்று கூறவும் ஓடோடிச் சென்று கோதை நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்து ஆராதித்தார்.

மனம் ஒன்றிச் செய்யும் எக்காரியமும் யோகமாகும். இறைவனும் தூய்மையான அன்புக்கும் மனம் ஒன்றிச் செய்யும் ஈடுபாடான பக்திக்கு நிச்சயம் அருள் தருவான். கோதை நாச்சியாரின் பதி பக்திக்கு அரங்கப் பெருமாள் செவிசாய்த்தார் என்றே கூறவேண்டும். சூட்டிய மாலையைச் சாற்றிய பைங்கிளியை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். அவளது பக்திக்கு ஈடு இணையில்லை. ஆண்டாளை நினைந்து "தொண்டரடிப் பொடியாழ்வார் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே" என்று திருப்பள்ளி எழுச்சி பாடி துயில் எழுப்புகிறார். வேதப்பிரான் பட்டர் வெண்பா பாடுகிறார்,

<<கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழும் ஊர் சோதி மணிமாடந்தோன்றும் ஊர் நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர் வில்லிபுத்தூர் வேதக்கோனூர் பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்துக்கும் வித்தாகும். கோதை தமிழ் ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.>>

இப்படியாக கோதை புகழை பாடியருள்கிறார். நாதப்பிரம்மமாய் விளங்கும் இறையை ஆழ்வார்களும், ஆண்டாளும், அடியார்களும், நாயன்மார்களும் இசையால் ஆராதித்து அந்த இறையிடமே ஒன்றித்தனர். கோதைநாச்சியாரும் பாடிக் கொடுத்தாள் நாம் விதியை நோகா வண்ணம் அதைக்கடப்பதற்கு வழி இறைநாமம் எனும் உண்மையை தெளிவாக்கினார். சூடிக் கொடுத்தார். அதில் அன்பையும், பக்தியையும் உணர்த்தினார். ஆகவே நாமும் நாதப் பொருளான நாயகியைத் தொழுது, நாம் பாடும் மொழிகள் யாவும் அவள் மந்திரமாகக் கொண்டு அவளை வணங்கி அருள் பெற முனைய வேண்டும்.

தெய்வத்தை யார் வழிபடினும் குழந்தையாவர். பின்னர் தெய்வத்தை அன்னையாகப் போற்றுவர். மந்திர யந்திர தந்திர முறைகளில் சக்தி வழிபாட்டினை முக்கோணத்தின் மூன்று மூலைகளாகக் கருதுவர். நாம் சொல்லும் ஸ்லோகங்கள், வேதங்கள், காயத்திரிகள், மந்திரத்தின் கருத்தை உருவகப்படுத்தி யந்திரம் காட்டும். அதில் சித்தத்தை ஒருமுகப் படுத்துதல் தந்திரமாகும். அதற்கு பாஸ்ய பூஜைகளும், மானசீக பூஜையும், யோகமும் ஏனைய சாதனங்களும் அவசியம் எனினும் மனம் வாக்கு காயம் மூன்றாலும் அன்பெனும் அதிக பக்தி கொண்டு உள்ளத்தில் நைந்து நைந்து உருகி பாடி பூஜிக்க இறை சித்தி பெருகும். ஆண்டாளும் இரங்கநாதனை சூடியும் பாடியும் ஏத்தி நிதம் துதித்தாள். அதன் பயனைப் பெற்றாள். அன்னையைத்தாயாக கன்னியாக குழந்தையாக எப்படியும் நாம் வழிபாடாற்றலாம்.

அபிராமி அந்தாதி பாடிய பட்டரும், திருமந்திரம் தந்த திருமூலரும், சக்தி உபாசகர் ஶ்ரீராமகிருஸ்ணபரமகம்சரும், மீனாட்சிகலிவெண்பா பாடிய போரூர் சிதம்பர சுவாமிகளும், மீனாட்சி பிள்ளைத்தமிழ் குறம் பாடிய குமரகுருபரரும், பர்வதவர்த்தனியை பாடிய தாயுமானவரும், வடிவுடை மாணிக்கமாலை பாடிய இராமலிங்க அடிகளும் சக்தியின் உபாசகர்களாக அம்பிகை பெருமை பேசி பாடி அருள் பெற்றுய்தவர்கள். இன்னும் அநேகமானவர் சாக்தர்களாக அன்னையைத்துதிப்பவராய் விளங்கி வந்திருக்கின்றனர். அன்னையோ சிவத்தின்பெருமை அறிந்தவர் ஆறாதாரத்திலும், ஶ்ரீசக்கரத்திலும் உறைகின்ற சிவசக்தி சொரூபம் நமக்கு சக்தியின் உண்மை நிலையை எடுத்து இயம்பும். எந்த உயிருக்கும் சக்தி தரும் அன்னையை நாம் மெய்யன்புடன் வழிபட வேண்டும். ஆடிமாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமை ஏற்றநாளாகும். 

- 4தமிழ்மீடியாவுக்காக அருந்தா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction