யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருங்கோவில்களில் ஒன்று. தற்போது மாவை.கந்தன் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவம் நிகழ்கிறது.
அப் பெருங்கோயில் குறித்து, 'இந்து சாதனம்' பத்திரிகை ஆசிரியர் தியாக.மயூரகிரி குருக்கள் அவர்கள், 4தமிழ்மீடியாவிற்காக எழுதியுள்ள இச் சிறப்புக்கட்டுரையினை, அவர்களுக்கான நன்றிகளுடன், பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia Team
பொதுயுகத்துக்குப் பின் (கி.பி) 789 ஆம் ஆண்டு (8 ஆம் நூற்றாண்டு) மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணத்தில் மன்னர்களால் கட்டப்பட்டது. அப்பொழுது மதுரையரசன் திசையுக்கிரப் பெருவழுதியின் ஆணையால் சிதம்பர தீக்ஷிதரான பெரியமனதுள்ளார் மாவிட்டபுரத்துக்கு அழைத்து வரப்பெற்றார்.
இவ்வாறு சிதம்பரத்திலிருந்து வந்த தீக்ஷிதர்களுக்கு பரம்பரையாக மாவை ஆதீன முதல்வர்களாக மாவிட்டபுரக்கோயிலை நிர்வகிக்க ஆணையும், "மஹா ராஜ ஸ்ரீ " என்ற விருதும் உக்கிரசிங்கசேனன் என்ற சோழ அரசனால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 16ஆம் நூற்றாண்டில் ஆலயம் பறங்கியரால் இடித்தழிக்கப்பட்டது. மீண்டும் ஆலயம் 32ஆம் தலைமுறை சபாபதிதீக்ஷிதரால் 1782ல் கட்டப்பட்டது. இந்த மாவையாதீன மரபில் வந்தவரே இரத்தினக்குருக்கள் என்றும் சுப்பிரமணிய தீக்ஷிதர் என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணியக்குருக்கள்.
ஓரடிப்பாதையாக இருந்த மாவிட்டபுரம்- கீரிமலை பெருவீதி குருக்களின் முயற்சியால் ஆங்கிலேய அரசால் பெருவீதியாக்கப்பட்டது. மாவையாதீனத்தை நெறிப்படுத்தி கோயிலை ஒரு பெருங்கோயிலாக வளர்த்தெடுத்தது இவரே என்பர்.
கலை ஈடுபாடு மிக்க குருக்களால் மாவிட்டபுரம் கோயிலில் கலைநிகழ்வுகளும், கதாபிரசங்கங்களும், இசைக்கச்சேரிகளும், கிராமிய நடனங்களும் நிகழ்த்துவிக்கப்பட்டன. புராண படன வல்லுனரான குருக்கள் திருச்செந்தூர் புராணத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
கோயிலில் ஆண்டு தோறும் ஈழத்தின் சிறந்த நாதஸ்வரக்கலைஞருக்கு "தங்க நாதஸ்வரம்" வழங்கி கௌரவிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி மங்கள இசை மரபு இலங்கையில் வளர உதவினார். இலங்கையில், தவில் - நாதஸ்வர இசை முதன்முதலில் தோன்றிய தலம் இதுவே என்பர்.
பெரும் பூச்சப்பரச் சோடனைகளை உருவாக்கினார். இந்த பூஞ்சப்பர சோடனை மாவிட்டபுரத்திலேயே முதலில் உருவாயிற்று என்பர். 1934ல் வள்ளி திருமணம் என்றொரு நாடகத்தை தாமே எழுதி மேடையேற்றினார். இதில் வந்த வருமானம் மூலம் கோயிலில் மின்னொளி ஊட்டினார். வட மாகாணத்தில், மின் ஒளியூட்டப்பட்ட முதற் கோயில் மாவிட்டபுரமானது.
ஆங்கிலேய தேசாதிபதிகள் போல இரட்டைக்குதிரை பூட்டிய வண்டிலில் குருக்கள் பயணிப்பாராம். இது அக்காலத்தில் பொதுமக்களிடையே ஒரு பிரமிப்பை தந்தது. ஒரு கிறிஸ்தவ தம்பதியர் குருக்களின் ஆசி பெற்று பெற்ற குழந்தையை கோயிலுக்கு கொண்டு வந்தனர். அக்குழந்தைக்கு குருக்கள் சண்முகநாதன் என பெயரிட்டார். அவரே இலங்கை வானொலி புகழ் சானா என்ற சண்முகநாதன்.
குருக்கள் அவர்கள் 1943ல் சிவப்பேறு பெற்றார். அவரது மரபார் மாவையாதீன முதல்வர்களாக மாவிட்டபுரம் பெரிய கோயில் அறங்காவலர்களாக இன்று வரை பணியாற்றுகின்றனர். இலங்கையில் முதல் ராஜகோபுரம், முதல் வெள்ளிக் கொடிமரம் என்று மாவைப்பெருங்கோயில் பொலிவுற்றது.
இக்காலத்தில், தங்கத்தாலான முத்துக்குமார சுவாமி விக்கிரகம் ஒன்றும் இருந்த்தாகச் சொல்கிறார்கள். இவ்வாறாக, சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் (1950களில்) ஈழத்தின் வேத சிவாகம மரபுத்திருத்தலங்களில் தலைமைத்தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலே விளங்கியிருக்கிறது.
1990 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பேரிடப்பெயர்வும், தொடர்ந்து பல வருடங்கள் கோயிற்சூழலை அணுக இயலாத நிலை ஏற்பட்டமையும், இன்ன பிற காரணங்களும் கோயில் வளர்ச்சியிலும் எழுச்சியிலும் தாக்கம் செலுத்தி விட்டன.
எவ்வாறாயினும், தற்போதைய ஆதீன கர்த்தர் மஹாராஜஸ்ரீ ஷ. இரத்தினசபாபதி தீக்ஷிதரும், அவரது குமாரர் திருப்பரங்குன்றத்தில் முறையாக வேதாகமங்களை பயின்ற ஞானஸ்கந்தசர்மாவும் மீண்டும் திருக்கோயிலை பழைய நிலை நோக்கி திருப்ப பெருமுயற்சி செய்கிறார்கள்.
பெரிய பெரிய சுதை வடிவங்கள், நெடிதுயர்ந்த மதில்கள், என்று பழைய பெரு வடிவத்திலேயே கோயில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பழைமையான மகோத்திர மகாரதம் யுத்தகாலத்தில் அழிவடைந்ததால், சென்ற ஆண்டு (2019) அதை விட உயரமாக, தனித்துவமாக மகோத்திரப் பெருந்தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் கண்டிருக்கிறது.
கடந்த மூன்று தசாப்தங்களாக மகாகும்பாபிஷேகம், கொடியேற்ற மகோத்ஸவம் என்பவற்றை காணாதிருக்கும் மாவைப்பதி வரும் ஆண்டுகளிலேனும் அவற்றை காண வேண்டும் என்பதே அனைவரதும் அவா. மாவைப்பெருமானை பாடாத யாழ்ப்பாணப்புலவர் இல்லை என்ற அளவுக்கு இப்பெருமான் பேரில் பல்வேறு பிரபந்தங்கள் நிரம்பவே இருக்கின்றன.
அருணகிரியார் காலத்தில் இத்தலம் அருக்கொணாமலை என வழங்கியது என்றும், அவ்வாறே திருப்புகழ் அருளினார் என்றும் ஒரு குறிப்பும் உண்டு. தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளையின் குறிப்பும் (நகுலேசுவரம் அருகில்) அவ்வாறே கருதுவதாக உணர முடிகிறது.
துரகானன விமோசன புரி என்றும் போற்றப்படும் இத்தலம் மாருதப்புரவீகவல்லி என்ற சோழ இளவரசியின் குதிரை முகம் (மாமுகம்/ துரகானனம்) காட்டிய குன்ம நோய் விலகிய தலம். அது மட்டுமல்ல, இந்து மகா சமுத்திரத்தில், சூரபதுமனான மா மரத்தை அறுத்து வெற்றி பெற்ற வெற்றி பெருமான் எழுந்தருளிய மகா ஸ்தலம்.
இத்தல பெருவிழா ஆடி அமாவாசையை நிறைவு நாளாக கொண்டு 25 நாட்கள் நிகழ்வது வழமை. அவ்வகையில், இந்த (2020) ஆண்டு நடைபெற்று வரும் பெருவிழாவில், 19.07.2020 ஞாயிறன்று மகோத்திர மகாரத பவனியும், திங்கட்கிழமை கண்டகி மகா சமுத்திர தீர்த்த விழாவும் நிகழவுள்ளது.
நம் பெருமானான வள்ளி மணாளன்- மாவைக்கந்தன் அருளால் அவனடியார்கள் உலகில் நோயற்ற வாழ்வும்- வளமும் காண பிரார்த்திப்போம்.
- 4தமிழ்மீடியாவிற்காக : தியாக. மயூரகிரிக்குருக்கள்