free website hit counter

ஞானக்குழந்தையும் வாகீசரும் செய்த பெரும் சாதனை !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று வைகாசிமாத மூலநட்ஷத்திரம் திருஞானசம்பந்தர் குருபூஜை. “ பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி போற்றி” எனப் போற்றப்படும் ஞானசம்பந்தப் பெருமான், தமிழுக்குச் சைவத்தையும், சைவத்தால் தமிழையும் மீட்டுத் தந்த பெருமானார். இந்நாளில் அவர் குறித்த சிந்தனையின் பகிர்வு.

சங்க காலத்திற்கு பிறகு ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை தமிழகத்தின் வரலாற்றில் ஆராய்வதற்கு மிகவும் கடினமான காலமாகும். இதனாலேயே இதனை "இருண்டகாலமென்றும்" "களப்பிரர்" காலமென்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுவர்.

இக் காலத்தில் மதுரையை ஆண்ட ஓர் அரசன் குறித்த செய்தி புராணத்தன்மையோடு பெரியபுராணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுந்தரர் "மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்" என்று கடந்தகால நிகழ்வாக குறிப்பிடும் உலகாண்ட மூர்த்தியே அவர் ஆவார்.

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்ட ராஐசிம்மனென்ற இரண்டாம் நரசிங்க மன்னன் காலத்தைச் சேர்ந்தவர் சுந்தரர். (அதாவது பொ.பி 725 காலப்பகுதி) அவர் "மும்மையால்" என்கிறார் என்றால் அந்த மும்மை என்பது பல்லவ சாசனங்களில் பேசப்படும் சக்தித்திரயம் என்கிற பிரபுசக்தி (ஆளும் திறன்) மந்திர சக்தி (ஆயும் திறனும்) உத்ஸாக சக்தி (முயற்சி) என்று ஆய்வாளர் கருதுவர். ஆனால் சேக்கிழார் பெருமான் தம் பக்திக் காவியத்திற்கேற்ப மும்மை என்பதை விபூதி ருத்திராக்ஷம், சடாமுடி எனக் குறிப்பிடுகிறார்.

இந்த மூர்த்தி நாயனார் காலத்தில் சமணரான கர்நாடக அரசர்களே பாண்டி நாட்டை ஆண்டுள்ளனர். சந்தனம் சாத்தி சிவபூசை செய்து வந்த மூர்த்தி நாயனார் இறையருள் துணை கொண்டு கர்நாடக அரசரை வென்று அரசராகி சிலகாலம் ஆட்சி செய்திருக்கிறார். அந்தக்கால கர்நாடக அரசர்கள் என்போர் வாதாபி சாளுக்கிய வம்சத்தவராகக் கூடும். அதன் பின்னர் பொ.பி 575ம் ஆண்டளவில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரசன் சோழ நாட்டையும், தொண்டை நாட்டையும் கைப்பற்றுகிறான்.

இக்காலப் பகுதியில் கடுங்கோன் என்ற தமிழ்ப்பாண்டியன் தமிழ் நாட்டை கைப்பற்றுகிறான். இதன்பின் அடுத்த ஓரிரு நூற்றாண்டுகளுள் திருஞானசம்பந்தர் அவதரிக்கிறார். திருநாவுக்கரசர் ஞானசம்பந்தரது சமகாலத்தவர். இதிலும் ஞானசம்பந்தர் திருவவதாரம் செய்யும் போது, பல்லவ அரசரும் பாண்டிய அரசரும் சமணராகவே இருந்துள்ளனர்.
ஆக, தமிழகமெல்லாம் சமணமே கோலோச்சியது. (அப்போது சோழர்கள் ஆட்சியில் இல்லை.)

பிறகு திருநாவுக்கரசரால் கி.பி 610-680 காலப்பகுதியில் ஆட்சி செய்த குணபரன் அல்லது குணதரன் என்ற முதலாம் மகேந்திரவர்மன் என்ற பல்லவப் பேரரசன் சைவனாகி திருப்பாதிரிப்புலியூரில் "குணபரவீச்சுவரம்" அமைக்கிறான். திருஞானசம்பந்தரால் மதுரையில் அரசாண்ட மாறவர்மன் அரிகேசரி என்ற இயற்பெயர் (கி.பி 640-670) கொண்ட கூன்பாண்டியன் அல்லது நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டியப் பேரரசன் சைவசமயம் சேர்கிறான்.

இதனால், சமணத்துறவிகள் தமிழகத்தை விட்டு வெளியேறி கர்நாடகத்தை நோக்கிச் சென்றிருக்கலாம். எனவே, சைவ சமயத்தையும் தமிழையும் தமிழ்நாட்டில் மீண்டும் புனருத்தாரணம் செய்ததில், ஞானக்குழந்தையான திருஞானசம்பந்தரதும், திருநாவுக்கரசரதும் பங்கு மிக முக்கியமானதாகும். இவற்றை இப்பொழுது நினைக்கிற போதும் வியப்பும், இக்குரவர்களிடம் மாறாத பக்தியும் உண்டாகிறது.

-4தமிழ்மீடியாவிற்காக : தியாக. மயூரகிரிக்குருக்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction