free website hit counter

நம்பியாண்டார் நம்பிகள்.

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிதம்பரம் அடுத்த திருநாறையூர் திருத்தலத்தில், சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் சிவாச்சாரியாருக்கு திருமகனாக அவதாரம் செய்தவர் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள். இன்று வைகாசி புனர்பூசம் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை.

பொல்லாப் பிள்ளையார் சன்னிதியில் பக்தியுடன் தினமும் பூஜித்து வந்த, ஆதிசைவர் மரபில் தோன்றிய அனந்தேச சிவாச்சாரியாருக்கும், அவருடைய மனைவி கல்யாணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் நம்பியாண்டார் நம்பி. அனந்தேச சிவாச்சாரியார் தினமும் கோவிலுக்கு சென்று இறைவனுக்கு பிரசாதத்தை நைவேத்தியம் வைத்து விட்டு வீடு திரும்புவாராம். அப்போது, அவரிடம் சிறுவன் நம்பி எங்கே பிரசாதம் என்று கேட்கும் போது, விநாயகர் சாப்பிட்டு விட்டார் என்று அனந்தேசர் கூறினாராம். இதை சிறுவதிலேயே நம்பியாண்டார் நம்பி உண்மையாக கருதினார்.

இந்த நிலையில், ஒரு சமயத்தில் தந்தை வெளியூர் சென்றதால், அவர் வழியை பின்பற்றி, சிறுவன் நம்பி கோவிலுக்கு சென்று பக்தியுடன் பூஜை செய்துவிட்டு, தாயார் கொடுத்த நைவேத்தியத்தை பிள்ளையார் முன்பு வைத்து விநாயகப் பெருமானை சாப்பிடும் படி வேண்டினார். ஆனால், பிள்ளையார் சாப்பிடவில்லை. இதில் ஏதோ தவறு இருக்கும் என அஞ்சிய நம்பி, வேதனையுடன் அழுது புரண்டு, பிள்ளையாரை சாப்பிட சொல்லி தன்னுடைய தலையை கருங்கல்லில் முட்டி மோதி கொண்டாராம்.

அப்போது, பிள்ளையார் சிறுவன் முன்தோன்றி, கல்லால் தலையில் முட்டிய நம்பியை தம் திருக்கரத்தால் (தும்பிக்கை) தாங்கி தடுத்தருளினாராம். அதன்பின், பிள்ளையார் துதிக்கையை வலப்புறமாக நீட்டி அந்த நைவேத்தியத்தை சாப்பிட்டார். இதில் மகிழ்ந்த நம்பி நடந்த விஷயத்தை தன் தாயிடம் கூறினார். ஆனால், அதை அவர் நம்பவில்லை. மறுநாள் நம்பியின் தந்தை மறைந்திருந்து பார்க்க மீண்டும் அதே அற்புதம் நடைபெற்றது. இதை கண்டு மெய்சிலிர்த்த அனந்தேசர், தன்னுடைய மகனை கட்டித்தழுவி, இறைவனை கும்பிட்டாராம்.

இதையடுத்து, பிள்ளையாருக்கும், நம்பிக்கும் இடையே நாளுக்கு, நாள் நெருக்கம் அதிகரித்தது. இதன் விளைவாக நம்பியாண்டார் நம்பிக்கு எல்லா கலைகளும் கிடைக்க பெற்றது. தொடர்ந்து, அவர் பல திருமுறைகளையும், பாடல்களையும் பாடினார். திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை ஆகியன 11–ம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்தி பாடியவையாகும்.

இந்த செய்தி காட்டு தீப்போல பிரபஞ்சம் முழுவதும் பரவியது. இதையறிந்த ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பியை சந்தித்து, திருமுறைகளை தொகுக்க வேண்டினாராம். தொடர்ந்து, இருவரும் சேர்ந்து பொல்லாப்பிள்ளையாரிடம் சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றை தொகுக்கும் மாபெரும் பணியை முடிக்க வேண்டும் என்று வேண்டினார்களாம். சிதம்பரம் கோவிலுக்கு வடமேற்கு மூலையில் உள்ளது என்று பிள்ளையார் அருளினார். இதையடுத்து, அங்கு சென்ற ராஜராஜசோழன் பூட்டி கிடந்த அறையை திறக்க அந்தணர்களை வேண்டினார். உரியோர் வந்தால் திறப்போம் என்று அந்தணர்கள் கூறினர்.

இதையடுத்து, சைவர் மூவர் சிலைகளை வடித்து நன்கு பூஜித்துவிட்டு திருமுறை சுவடிகள் இருந்த அறையை திறக்க செய்தாராம் ராஜராஜ சோழன். அப்போது, அந்த அறையில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட பதிகங்கள் கரையான் புற்றால் மூடப்பட்டிருந்தது. இதில் எண்ணெயை குடம், குடமாக ஊற்றி கரையானை போக்கி கண்டெடுத்த பதிகங்கள் மொத்தம் 796 ஆகும். இதில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் 384, திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 312, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் 100.

 உளியால் செதுக்கப்படாமல் சுயம்பாக தோன்றிய காரணத்தால் பொல்லாப் பிள்ளையார் என்று வணங்கப்படும் பொல்லாப் பிள்ளையாரை நாமும் வணங்கி அருள்பெறுவோம் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction