புலம்பெயர் தேசங்களில் உருவாகும் ஆலயங்களை எதிர்காலத்தில் பரிபாலிப்போர் யார் ? எனும் பெருங்கேள்வியொன்று புலம்பெயர் தேசத்தில் வாழும் சைவப் பெருமக்கள் மத்தியில் நிறைந்திருக்கிறது.
எதிர்காலச் சந்ததியின் நன்மை கருதி உருவாக்கப்பெற்றதாகச் சொல்லப்படும் இந்த ஆலயங்களில் இளைய தலைமுறையினர் ஆர்வம் கொள்கின்றனரா? இவற்றில் அவர்களது பங்களிப்புக்கள் எவ்வாறிருக்கினறன ? என்கின்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் இருந்த வண்ணமேயுள்ளது. இந்தக் கேள்விகளுக்கான சிறப்பான பதில் தரு களமாகவும், சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் கோவில் இவ்வருடத் திருவிழா அமைந்திருந்ததைக் காண முடிந்தது.
கோவிட் பெருந்தொற்றின் பேரெழுச்சிக்குப் பின் ஏற்பட்ட முடகங்கங்களால், பெருவிழாக்களும், மக்கள் கூடல்களும் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசின் தளர்வுகள் அவற்றைப் பாதுகாப்பு விதிகளுக்கு அமைவாகச் செய்ய அனுமதிக்கினறன.
சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலம், பல மாநிலத்தவர்களும், மற்றும் பல் தேசத்தவர்களும் கூடும் வர்த்தக முக்கியத்துவம் நிறைந்த நகரம். இந்நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள சூரிச் அருள் மிகு சிவன் கோவில் எப்போதும் பக்தர்கள் பெருமளவில் கலந்து வழிபாடியற்றும் திருத்தலம். சென்ற ஆண்டில் பெருந்தொற்றுக் காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் வழிபாடுகளை மிக இறுக்கமாகக் கடைப்பிடித்த இந்த ஆலயத்தில், இந்த ஆண்டு மஹோற்சவம், பாதுகாப்பு விதிகளுக்கமைவாக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த ஆண்டு மஹோற்சவம் சிறப்பாக நடைபெற, அடியார்கள் முதல் அர்சகர்கள், அறங்காவலர் வரை எல்லோருமே சிறப்பாகப் பங்காற்றினார்கள் எனினும், இளையவர்கள் ஆற்றிய அரும்பணிகள் குறிப்பிடத்தக்கன. ஆலய நிர்வாகத்திற்கு இணையான நிழல் அமைப்பாக நின்று செயற்பட்ட இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்பான பணியில், பாதுகாப்பு நடைமுறைகளைச் சிறப்பாகப் பேணி, உற்சவத்தை நிறைவாக நடத்தியிருப்பதை நேரில் காண முடிந்தது. பல்வேறு ஆலயங்களிலும், பாதுகாப்பு விதிமுறைகளின்படியே உற்சவங்கள் நடைபெறுகின்ற போதிலும், சூரிச் போன்ற பல் வேறு இடங்களிலிமிருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் குமியும் இடங்களில், இதனைச் சரிவரச் செய்வது என்பது மிகப் பெரும் சவாலான விடயம். ஆனால் அதனைச் செவ்வனே நிறைவேற்றத் துணைநின்றுள்ளது சுவிற்சர்லாந்தின் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகள்.
மிகச் சிறப்பாக பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துகையிலும் , அருட்பணிகளில் ஈடுபடுகையிலும், அவர்கள் ஒவ்வொருவரும் தொண்டாற்றும் அடியவர்களாகப் பரிமளித்ததைக் காண முடிந்தது. வாகனச் சோதனை, தரிப்பிட ஒழுங்கு, நோயியற் சோதனை என வெளிப்புறத்தே ஆரம்பித்து, ஆலய தரிசனத்தில் அடியவர்களிடையே இடைவெளி பேணல், முக கவசங்களை சரிவர நிறுவுதல் என்பன உட்பட பல்வேறு பணிகளில் இணைந்திருத்தார்கள். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பதிலும் வீண்வார்த்தைகளோ, பரபரப்புக்ளோ அன்றி, தத்தமது பணிகளை பணிவும், பெரியோரை மதிக்கும் பண்பும் மிளிரச் செய்ற்பட்டமை காண்கையில், இரண்டாம் தலைமுறை மீதான நம்பிக்கை அபரிமிதமாக எழுகிறது.
தற்போது சுவிஸ் நாட்டின் அரசியற்களங்களுக்குள் எமது இரண்டாம் தலைமுறை உள்வாங்கப்பட்டு வரும் நிலையில், நமது ஆன்மீகத் தளங்களிலும் அவர்கள் உள்வாங்கப்படுவதும், உருவாக்கப்படுவதும் ஆரோக்கியமானது, எதிர்காலத்திற்கான நம்பிக்கை தருவது. அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களும், அதற்குக் காத்திராமானவர்களும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
வைரஸ் மாறுபாடு Vs தடுப்பூசி - வெல்வது யார் ?
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்.