அகில உலக நாயகனாக போற்றப்படும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றுமுதல் 25 நாட்களுக்கு ஆலய உற்சவங்கள் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திரளாக பக்கதர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா; இவ்வாண்டு கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக தொடக்க நாளான இன்று பக்கதர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உற்சவ குருமார்கள், உபயகாரர்கள் உள்ளீட்ட முக்கிய பணியாளர்கள் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் நேரலை காட்சி ஊடகங்களில் வழி நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ நிகழ்வுகளை பக்கதர்களை வீட்டிலிருந்தபடியே கண்டு தரிசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இனி வரும் ஓரிரு நாட்களில் மட்டுபடுத்தப்பட்ட அளவில் பக்கதர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நல்லூர் ஆலய கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக செங்குந்தர் பரம்பரையினரால் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்தில் நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை மாட்டுவண்டியில், பருத்தித்துறை வீதி ஊடாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.