வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கிறிஸ்துமஸ் ஈவ் ஆராதனையில் கலந்து கொண்ட புனித பாப்பரசர் பிரான்சிஸ், "வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை மதிக்கவேண்டும்.
ஏழைகளுக்கு உதவுவதில் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் " என ஆராதனைச் செய்தியில் குறிப்பிட்டார்.
நத்தார் ஆராதனையில், சுமார் 2,000 பொதுமக்களும், 200 மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முகமூடி அணிந்து, சமூக இடைவெளியை மதித்து வழிபட்டனர் என்று வத்திக்கானின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆராதனையில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாதவர்கள், செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஆராதனைகளைக் கண்டனர்.
"நம் அன்றாட வாழ்வில், வீட்டில், நம் குடும்பங்களில், பள்ளி மற்றும் பணியிடத்தில் நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் காரியங்களில் உள்ள சிறிய தன்மையை ரசிக்க வேண்டும், அதனை மக்கள் தேட பழக வேண்டும். அதனையே இறைவனும் விரும்புவார் " என்று ஆராதனையில் ஈடுபட்ட, 85 வயதான போப்பாண்டவர் கிறிஸ்துவின் பிறப்பு கதையில் உள்ள மேய்ப்பர்களை நினைவு கூர்ந்து குறிப்பிட்டார்.
அவர் மேலும் தன்னுடைய ஆசியுரையில், "இந்த அன்பின் இரவில், நமக்கு ஒரே ஒரு பயம் இருக்கட்டும். அது கடவுளின் அன்பை புண்படுத்துவது. நம் அலட்சியத்தால் ஏழைகளை இகழ்ந்து கொள்வது கடவுளின் அன்பை, காயப்படுத்துவது போலாகும் " என்று கூறினார்.