தமிழர் நாகரிகம் என்பது வெறுமனே மொழி மற்றும் இலக்கியப் பெருமைகளை மட்டும் கொண்டதல்ல. அது காலங்களோடும், இயற்கையோடும், இறைநம்பிக்கையோடும், குடும்ப வாழ்வியலோடும் இணைந்த ஒரு முழுமையான பண்பாட்டு வாழ்க்கை முறையாகும்.
தமிழர் வாழ்வில் ஒவ்வொரு மாதமும் தனித்துவமான ஆன்மிகப் பொருளையும் சமூகப் பயன்பாட்டையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில், தமிழ் மாதங்களுள் மிகுந்த ஆன்மிகச் சிறப்பும் பண்பாட்டு மகத்துவமும் பெற்ற மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது. ஆடி மாதத்தின் முதல் நாளான "ஆடிப்பிறப்பு" தமிழர் இல்லங்களில் மகிழ்ச்சியோடும், பக்தியோடும், நன்றியுணர்வோடும் வரவேற்கப்படுகிறது.
ஆடிப்பிறப்பு என்பது ஒரு புதிய மாதத்தின் தொடக்கம் மட்டுமன்று. அது இயற்கையின் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தையும், மனித வாழ்வில் ஆன்மிகப் புதுப்பிறப்பையும் குறிக்கும் புனித நாளாகக் கருதப்படுகிறது. இறைவனை நோக்கி மனதைத் திருப்பி, இறையருளை வேண்டி, குடும்ப நலனையும் உலக நலனையும் பிரார்த்திக்கும் ஆன்மிக விழாவாக இது விளங்குகிறது.
ஆடி மாதத்தின் வானியல் மற்றும் ஆகமச் சிறப்பு
தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்றன. சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் நாளே ஆடி மாதத்தின் தொடக்கமாகும். இக்காலம் "தெட்சிணாயனம்" என்று வேத மற்றும் ஆகம மரபுகளில் குறிப்பிடப்படுகிறது. உத்தராயணம் தேவர்களின் பகல் காலம் எனக் கருதப்படுவதுபோல, தெட்சிணாயனம் தேவர்களின் இரவுக் காலமாகக் கருதப்படுகிறது.
ஆன்மிக ரீதியாகப் பார்க்கும்போது, தெட்சிணாயனம் என்பது வெளிப்புற வாழ்விலிருந்து அக வாழ்விற்கு மனிதன் தன்னைத் திருப்பிக் கொள்ள வேண்டிய காலமாகும். தியானம், விரதம், இறைநாமச் சிந்தனை மற்றும் ஆலய வழிபாடுகளுக்கு உகந்த காலமாக சைவ சமய அறிஞர்கள் இதனை விளக்கியுள்ளனர்.
தமிழர் மரபில், ஆடி மாதம் மனிதனின் உழைப்பிற்கும், இறைவனின் அருளுக்கும் இடையேயான உறவை உணர்த்துகின்றது. விதை மண்ணில் புதையும்போதுதான் பயிராக வளர்வதுபோல, மனிதனின் அகந்தை இறைபக்தியில் கரையும்போதுதான் ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும் என்பதை ஆடி மாதத்தின் தத்துவம் நமக்குக் கற்பிக்கிறது.
சங்ககாலத் தமிழர் வாழ்வியலும் ஆடி மாதமும்
சங்க இலக்கியங்களில் இயற்கை வழிபாடு, பெண்மையின் மகிமை, மழைக்கால மகிழ்ச்சி மற்றும் விவசாய வாழ்க்கையின் சிறப்புகள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர்கள் காலநிலைக்கு ஏற்ப தங்களுடைய சமூக மற்றும் ஆன்மிக வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். மழை பெய்யும் காலத்தின் தொடக்கமாக விளங்கிய ஆடி மாதம், விளைச்சலுக்கான எதிர்பார்ப்பையும் வளமான வாழ்க்கைக்கான பிரார்த்தனையையும் குறிக்கும் மாதமாக விளங்கியது.
தமிழர்களின் வழிபாட்டு மரபுகளில் நிலம், நீர், மரம், மழை, சூரியன் மற்றும் தாய்த்தெய்வ வழிபாடுகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இவை அனைத்தும் ஆடி மாத வழிபாட்டு மரபுகளில் இன்று வரை தொடர்வதைக் காணலாம். இதன் மூலம், ஆடிப்பிறப்பு தமிழர் நாகரிகத்தின் தொடர்ச்சியை உணர்த்தும் உயிர்ப்புமிக்க பாரம்பரியமாகத் திகழ்கிறது.
ஆடிப்பிறப்பு நாளின் இல்ல வழிபாட்டு மரபுகள்
ஆடிப்பிறப்பு நாளன்று அதிகாலையில் நீராடி, புதிய உடைகளை அணிந்து, இல்லத்தைச் சுத்தம் செய்து, வாசலில் அழகிய கோலங்களை இடுவது தமிழர் மரபாகும். மாவிலைத் தோரணங்கள் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, இறைவனை வரவேற்கும் சடங்குகளும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்நாளில் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள் ஒவ்வொன்றும் ஒரு குறியீட்டுப் பொருளைக் கொண்டுள்ளன. இனிப்பு வகைகள் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்பதையும், ஆடிக்கூழ் மற்றும் தானிய உணவுகள் விளைச்சல் வளத்தை வேண்டுவதையும், பகிர்ந்து உண்ணுதல் சமூக ஒற்றுமையை வளர்ப்பதையும், தேக ஆரோக்கியத்தையும் குறிக்கின்றன.
சில பகுதிகளில் எள்ளும் வெல்லமும் கலந்து தயாரிக்கப்படும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி காலநிலை மாற்றத்திற்கான உடல் சமநிலையையும் பேணுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம், தமிழர் மரபு ஆன்மிகத்தையும் ஆரோக்கியத்தையும் ஒன்றிணைத்த வாழ்க்கை முறையாக விளங்கியதை அறிய முடிகிறது.
சைவ சித்தாந்தத்தில் ஆடி மாதத்தின் தத்துவம்
சைவ சித்தாந்தம் "பதி – பசு – பாசம்" என்னும் முப்பொருள் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. மனித ஆன்மா இறைவனின் அருளைப் பெற்று பாசங்களிலிருந்து விடுதலை அடைவதே வாழ்வின் நோக்கம் என அது வலியுறுத்துகிறது.
ஆடி மாதம் சக்தி வழிபாட்டிற்கு உரிய காலமாகக் கருதப்படுவதற்கு முக்கியமான தத்துவ அடிப்படை உள்ளது. சிவனும் சக்தியும் பிரிக்க முடியாத ஒருமைப் பொருள்கள் என்பதே சைவ சித்தாந்தத்தின் உயரிய கருத்தாகும்.
"சிவம் சக்தியின்றேல் சவம்" என்ற சைவ தத்துவ வாக்கியம் சக்தியின் மகத்துவத்தை மிக எளிமையாக விளக்குகிறது. சக்தியே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல் ஆகிய ஐந்தொழில்களுக்கும் இயக்க ஆற்றலாக விளங்குகின்றாள். ஆகவே, ஆடி மாதத்தில் நடைபெறும் சக்தி வழிபாடு, சிவத்தத்துவத்தை உணர்த்தும் ஒரு ஆன்மிகப் பயிற்சியாகவும் கருதப்படுகிறது.
பெண்மையின் பெருமையைப் போற்றும் ஆடி மாதம்
தமிழ் மரபில் பெண் என்பவள் குடும்பத்தின் மங்களச் சின்னமாக மட்டுமல்ல; சக்தியின் வடிவமாகவும் கருதப்படுகிறாள். அதனால் ஆடி மாதம் பெண்களின் ஆன்மிகப் பங்களிப்பை உயர்த்திப் பேசும் மாதமாக அமைந்துள்ளது.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து குடும்ப நலம், நல்ல சந்ததி, திருமண வாழ்வின் மகிழ்ச்சி மற்றும் சமூக வளம் ஆகியவற்றை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றனர். அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், மலர் மற்றும் விளக்கேற்றி வழிபடுவது, பெண்மையின் மங்களத் தன்மையைப் போற்றும் வழிபாட்டு முறையாகும்.
ஆடி மாதத்தில் பெண்கள் ஒன்றுகூடி இறைநாமம் பாடுவதும், தேவாரத் திருப்பாடல்களைப் பாராயணம் செய்வதும், சுமங்கலி பூஜைகள் நடத்துவதும் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் மரபுகளாக விளங்குகின்றன.
ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளியின் ஆன்மிகப் பொருள்
ஆடி செவ்வாய்க்கிழமைகள் சக்தி வழிபாட்டிற்கும், ஆடி வெள்ளிக்கிழமைகள் அம்மன் அருளைப் பெறுவதற்கும் மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.
இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் சில வழிபாட்டு முறைகளாக, அதிகாலை நீராடி விரதமிருத்தல். அம்மனுக்கு மஞ்சள், குங்குமம் சமர்ப்பித்தல். எலுமிச்சை விளக்கேற்றுதல். பெண்களுக்கு தாம்பூலம் வழங்குதல். அன்னதானம் செய்தல். தேவாரம் மற்றும் திருவாசகம் பாராயணம் செய்தல். ஆலய வழிபாட்டில் பங்கேற்பது. இல்லங்களில் தீபம் ஏற்றி இறைநாமம் ஜபித்தல்.எனும் வழிபாடுகள் அனைத்தும் மன அமைதி, குடும்ப ஒற்றுமை மற்றும் ஆன்மிக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.
ஆடிப்பூரம் – இறைப்பக்தியின் திருவிழா
ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள், இறைவனிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்த பக்தியின் அடையாளமாக விளங்குகிறது.
ஆண்டாள் இறைப்பக்தியின் உன்னத நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர். இறைவனை அடைவதற்கான பாதை பக்தியும் அன்பும் என்பதை அவருடைய வாழ்வு எடுத்துரைக்கிறது. ஆண்டாள் பிறந்தாள் என்றும், அம்பாளின் ருதுசோபன நாள் என்பதாகவும் சொல்லப்படும் ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல்கள் சாற்றி வழிபாடியற்றுவதும், அம்மனுக்குச் சாற்றிய வளையல்களைப் பிரசாதமாகப் பெற்று, பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், முதலான சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம். இந்த வகையில் பெண்களின் ஆன்மிகப் பெருமையை உலகறியச் செய்த திருநாளாகவும் ஆடிப்பூரம் போற்றப்படுகிறது.
ஆடிப்பெருக்கு – இயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழர் விழா
தமிழகத்தில் ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பாகும். நதிகளின் பெருக்கை வரவேற்று, நீரின் அருமையைப் போற்றும் விழாவாக இது விளங்குகிறது. நீர் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. விவசாயமும், உணவும், மனித வாழ்வும் நீரையே சார்ந்துள்ளன. இதனை உணர்ந்த தமிழர்கள் நீரைத் தெய்வீகமாகக் கருதி வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கு நமக்கு கற்பிக்கும் உயரிய கருத்துகளாவன; இயற்கைக்கு நன்றி கூறுதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நீர் வளங்களை மதித்தல், சமூக ஒற்றுமையை வளர்த்தல், குடும்ப நலனை வேண்டிப் பிரார்த்தித்தல் எனக் கொள்ளலாம்.இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ள நிலையில், ஆடிப்பெருக்கு தமிழர்களின் தொன்மையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் சான்றாகத் திகழ்கிறது.
ஏன் ஆடி மாதத்தில் திருமணங்கள் நடைபெறுவதில்லை?
ஆடி மாதத்தில் திருமணங்கள் நடத்தப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. இது வெறுமனே சமய நம்பிக்கை மட்டுமன்று.முன்னைய காலங்களில், விவசாயப் பணிகள் தொடங்கும் காலமாக இருந்தது. மக்கள் ஆன்மிக வழிபாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர்.
குடும்பங்களின் பொருளாதாரச் செலவுகளைத் தவிர்க்கும் நோக்கம் இருந்தது. புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு சமூக ரீதியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இதனால் ஆடி மாதம் மங்கள நிகழ்வுகளைத் தவிர்த்து, இறை வழிபாடு மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மாதமாக உருவெடுத்தது.
ஆலய மரபுகளும் ஆடி மாதமும்
ஆடி மாதத்தில் ஈழத்திலும், தமிழகத்தின் பல ஆலயங்களிலும் நடைபெறும் வழிபாடுகள் மிகவும் சிறப்பானவை. அம்மன் ஆலயங்களில் தினசரி அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஊஞ்சல் உற்சவங்கள் மற்றும் அன்னதானங்கள் நடைபெறுகின்றன. பல சைவ ஆலயங்களில்; தேவாரப் பாராயணம், திருவாசக முற்றோதல், திருவிளக்கு பூஜை, உழவாரப் பணி, பக்தர்களுக்கு அன்னதானம், போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆடிப்பிறப்பு பாடல்
இத்தகைய சிறப்புக்கள் மிக்க ஆடிப்பிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! எனக் குழந்தைப் பாடலாகப் பாடிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
ஆடிப்பிறப்பு நமக்குக் கற்பிப்பவை
ஆடிப்பிறப்பு என்பது ஒரு மாதத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் நாளாக மட்டும் கருதப்படக் கூடாது. அது தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டு விழிப்புணர்வின் தொடக்கமாகும். மனிதன் இயற்கையுடனும், குடும்பத்துடனும், சமூகத்துடனும், இறைவனுடனும் இசைந்து வாழ வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை எடுத்துரைக்கும் புனிதமான தமிழர் மரபாகும்.
ஆடி மாதம் நமக்கு வளத்தையும் பக்தியையும் மட்டுமல்ல, பணிவையும் பகிர்வையும் பரிவையும் கற்பிக்கிறது. மனித வாழ்வின் உண்மையான செல்வம் இறையருளும் நல்லொழுக்கமும் என்பதை உணர்த்தும் ஆன்மிகப் பொக்கிஷமாக ஆடிப்பிறப்பு விளங்குகிறது. தமிழ் மரபும் சைவ சமயமும் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த உயரிய பண்பாட்டு விழா, தலைமுறைகள் தாண்டி என்றும் நிலைத்திருக்க வேண்டிய நம் பாரம்பரியச் செல்வமாகும்.
"ஆடி தேடித் தரும்" என்று தமிழர் கூறுவதன் பின்னணியில், வெறும் பொருளாதார வளம் மட்டுமன்று; இறையருள், குடும்ப மகிழ்ச்சி, ஆன்மிக வளர்ச்சி மற்றும் சமூக செழிப்பு ஆகிய நான்கும் அடங்கியுள்ளன. ஆகவே, ஆடிப்பிறப்பை நாம் கொண்டாடுவது ஒரு மாதப் பிறப்பைக் கொண்டாடுவதல்ல; தமிழரின் வாழ்வியல் ஞானத்தையும் இறைநம்பிக்கையையும் கொண்டாடுவதாகும்.
-4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
