முதல்வரும் நடிகருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் ஆகியோரின் நடிப்பில் அனிருத்தின் இசையில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன்.
இந்தப் படம் கடந்த ஜன. 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
2025-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தப் படம் சான்றிதழுக்காக தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
படத்தின் சில காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் தெரிவித்திருந்த நிலையில், படத்தரப்பு எதையும் நீக்கவில்லை. பின், மறுதணிக்கை, தேர்தல் காரணங்களால் தொடர் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது.
அதனைத்தொடர்ந்து மொத்த ஜன நாயகன் படமும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியாகி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜன நாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான பகவதி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், 24 ஆண்டுகள் கழித்து விஜய்யின் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயகன் படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்றும் கூறப்படுகிறது. ஜன நாயகன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்க காலத் தாமதப்படுத்திய தணிக்கை வாரியம், எந்தெந்த காட்சிகளை நீக்கியது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
விஜய்க்கு 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகம் என்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலை எழுந்துள்ளது. இருப்பினும், வருகிற ஜூலை 23 அல்லது 24 ஆம் தேதி படத்தை உலகமெங்கும் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
