இன்று ஜூன் 12ஆம் திகதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத்தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) இந்நாள் அங்கீகரிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தும் அடிப்படையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது, இதன் தொடர்பாக உலக நாடுகள் பலவும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைக்கு தடை விதித்தது.
எனினும் அண்மைய நிலவரங்கள் படி குழந்தைத் தொழிலாளர் இரண்டு தசாப்தங்களில் இல்லாத அதிகரிப்பாக 160 மில்லியன் உயர்ந்துள்ளனர். இது குறித்து யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது புதிய ஆய்வறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கிறது.
உலகளவில் குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 160 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் 8.4 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அத்தோடு கோவிட்-19 பாதிப்பின் காரணமாக மேலும் மில்லியன் கணக்கானவர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் அவ் அமைப்பின் இந்த புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கையிலே இந்த கணிசமான உயர்வு இருப்பதாகவும் கூறியுள்ளது. இதில் அபாயகரமான வேலையில் 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை அதாவது அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேலை என வரையறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 6.5 மில்லியனிலிருந்து 79 மில்லியனாக இந்த உயர்வு காணப்படுகிறது.
மக்கள்தொகை வளர்ச்சி, தொடர்ச்சியான நெருக்கடிகள், தீவிர வறுமை மற்றும் போதிய சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகிய காரிய காரணங்கள் அடிப்படையில் துணை-சஹாரா ஆபிரிக்காவில் 16.6 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிக்க வழிவகுத்தன.
2016 ஆம் ஆண்டிலிருந்து ஆசியா மற்றும் பசிபிக், மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்ட பிராந்தியங்களில் கூட, COVID-19 அந்த முன்னேற்றத்திற்கு ஆபத்தை விளைவித்திருப்பதாக மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<<இந்த புதிய மதிப்பீடுகள் விழித்தெழ செய்யும் அபாய மணி; நம் புதிய தலைமுறைக்குழந்தைகளின் ஆபத்தை வெறுமேன பார்த்துக்கொண்டிருக்க இயலாது >> என ஐ.எல்.ஓ இயக்குநர் ஜெனரல் கை ரைடர் தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தை சூழ்நிலை காரணமாக வேலைக்கு அமர்த்தப்படும் போது உடல், உளவியல், சமூகம் ஆகிய மூவகை ரீதியிலும் பாதிப்பை அடைகிறது. இது எதிர்கால தலைமுறை சுழற்சியையே சீர்குழைக்கும் ஆபத்து உருவாகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுவயது முதல் சூழ்நிலை நிர்பந்தனைகளால் தொழிலாளராக மாறும் ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள கனவை நிஜமாக்கும் ஆற்றல் நாம் அனைவரும் ஒன்றினைந்து குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்பதிலே இருக்கிறது.
source : ilo.org, wikipedia