புலம்பெயர் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சவால் அல்லது சுவாரசியங்களில் ஒன்று நமது பெயர் அடையாளம். ஐரோப்பிய நடைமுறையில் குடும்பப் பெயரே அழைக்கும் பெயராக அமைந்துவிடுவதால் நம் தந்தையின் பெரோ அல்லது பாட்டனின் பெயரோ நம்மை அழைக்கும் பெயராக அமைந்துவிடும்.
அதுவே நமக்குப் பழக்கமாவதற்குச் சற்றுக் காலமெடுக்கும். அதன் பின் அழைக்கப்படும் அப்பெயர் நீளமானதாகவும், உச்சரிப்புக் கடினமானதாகவும் இருந்துவிட்டால், அப் பெயர் அவர்கள் நாவில் சிக்கிச் சின்னாபின்னமாகிவிடும். இது பலநேரங்களில் சிரிப்பாகவும், சிலநேரங்களில் சினம் தருவதாகவும் அமைந்துவிடும். புலம்பெயர்வாழ்வின் எனது முதலாவது பணியிட அனுபவமொன்று அவ்வாறானதாயினும் சற்று வித்தியாசமானது.
புகலிட மொழிப் பரிச்சயம் குறைவான எனது நிலை கருதி, எனக்கு ஆங்கிலம் தெரிந்த தொழில்பயிற்றுனர் எனஅறிமுகம் செய்து வைக்கப்பட்ட அவருக்கும் எனக்குமான மொழியாடலில், அவரது ஆங்கில உச்சரிப்பு எனக்கும், எனது நீளமான குடும்பப் பெயர் அவருக்கும் பெரும் நெருக்கடியாகவே அமைந்தது. பெயரைச் சற்றுச் சுரக்கி அழைத்த போதும் உச்சரிப்பு அவருக்கு அமையவில்லை. ஒரு சிலதினங்கள் போராடி முயற்சி பலனற்றுப் போக, தான் அழைப்பதற்கு வசதியாக எனக்கு ஒரு புதிய பெயர் ஒன்றைச் சூடினார். அன்றிலிருந்து அவருக்கு நான் அந்தோனியோ.
உணவு இடைவேளைகளில் தான் சூட்டியபெயர் பிடித்திருக்கிறதா என்று கேட்பார். சுவாரசியமற்று நான் கூறும் 'ஆம்' எனும் பதில் உறுத்தியதோ என்னவோ, 'அந்தோனியோ கொன்செலோர் கிறான்டே மயஸ்த்ரோ ' எனக் கூறி தோளில் தட்டிச்செல்வார். உணவு இடைவேளையின் எஞ்சிய நேரத்தில், எல்லாப் பணியாளர்களும் சுவாரசியமாகவும் சத்தமாகவும் உரையாடுவார்கள். அவர்களது அந்த உரையாடல்களை மொத்தம் மூன்று பிரிவுகளில் வகைப்படுத்திவிடலாம். ஒன்று, ஏதோ ஒரு பெண்குறித்தது. இரண்டு, வார இறுதியில் சென்ற உணவகமும், அங்குண்ட உணவு குறித்தது. மூன்றாவது முதல் நாள் நடந்த காற்பந்தாட்டம் குறித்தது. பெரும்பாலான இத்தாலியத் தொழிலாளர்களது ஓய்வு நேர உரையாடல்கள் இந்த எல்லை தாண்டி விரிவதில்லை. அவ்வகையான உரையாடல்களிலிருந்து விலகி ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்தவாறு இருக்கும் அவர் எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தார். அவரிடம் நெருங்கிப் பழகிய போது, அவர் ஒரு பொதுவுடமைக் கருத்தாளர் என்பது தெரிந்தது. அவருக்கும் எனக்குமான புரிதல்கள் ஏற்பட்ட சிலநாட்களில், இத்தாலிய மொழியிலான ஒரு புத்தகத்தை எனக்களித்தார். அப்போது எனக்கிருந்த இத்தாலிய மொழியறிவு, அப்புத்தகத்தின் தலைப்பினை மட்டும் வாசிக்கும் அளவிலானது. வாசித்துவிட்டு வைத்துக் கொண்டேன்.
காலநகர்வில், பணியிட மாற்றம், வாழ்விட மாற்றம் என்பவற்றால், அவரும், அவர் தந்த அப்புத்தகமும் என்னிடமிருந்து பிரிந்தன. ஆனால் அவர் அறிமுகப்படுத்திய அந்தோனியோ கொன்செலோர் எனும் பெயர் மட்டும் நினைவில் நின்றது. ஒரு நாள் அது குறித்து ஆங்கில மொழிவழி, இணையத்தில தேடியபோது, 'அந்தோனியோ கொன்செலோர் கிறான்டே மயஸ்த்ரோ ' என அன்று அவர் இத்தாலிய மொழியில் சொன்னதன் பொருள் புரிந்தது.
அரசியலற்றது ஆன்மீகம் என்பது பொது மரபு. ஆனால் இன்றைய அரசியலில் ஆன்மீகமும், ஆன்மீகத்தில் அரசியலும், நீக்கமற நிறைந்திருக்கின்றன. தூய்மையான ஆன்மீக சிந்தனையும், மக்களுக்கான நேர்மையான அரசியலும், பொதுவுடமை எனும் புள்ளியில் ஒன்றுபடக் கூடியவை என்ற கருத்தும் உண்டு. அந்தோனியோ கொன்செலோரின் கதை அக் கருத்தினை வலியுறுத்துகிறது.
அந்தோனியோ கொன்செலேரோ (Antonio Conselheiro), பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற மத தலைவர். போதகர். 1896-97 ளில், அந் நாட்டின் வரலாற்றில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய ஒரு உள்நாட்டு போராக கனூடோஸ் யுத்தம் (War of Canudos) நிகழ்ந்தது. சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர். இந்த யுத்தத்திற்கு காரணமாக இருந்தது 'கனூடோஸ்' எனும் கிராமம்.
பிரேசிலின் வட கிழக்கில் பாஹியா மாநிலத்தில், அமைந்துள்ளது 'கனூடோஸ்' எனும் கிராமம். இதன் அருகில் வாசா பாரிஸ் எனும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த கிராமத்தை உருவாக்கியவர் தான் அந்தோனியோ கொன்செலெரோ.
சிறியவயதிலேயே தாய் மரணமடைய, தந்தை மறுமனம் செய்ய போதைக்கு அடிமையானார் அந்தோனியோ. தாத்தாவுடன் வளர்ந்த இவர், தனது கடினமான கற்கை முயற்சிகளால், லத்தீன், பிரெஞ்சு, போர்த்துகீசு , கணிதம், புவியியல், வரலாறு போன்ற கல்விகளில் தேர்ந்து ஆசிரியரானார். வாழ்க்கைப் பயணத்தில் முதல் மனைவியால் துரோகம் இழைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டார். மீண்டும் மறுமணம் செய்தார். ஊர் ஊராக யாத்திரை செய்யும் யாத்திரீகரானார். நேரில் பார்த்தவர்கள் தோற்றத்தில் யேசு கிரிஸ்துவின் மறு அவதாரமாக இவர் தெரிவதாக கூறினார்கள். ஏழைகளின் ஆலோசகரானார். பின்னர் சமயப்பிரச்சாரகப் போதகர் ஆனார். ஆன்மீக தலைவரானார். பலர் அவரை பின்பற்றத்தொடங்கி அவர் பின்னால் பயணிக்க தொடங்கினர். அவரது பேச்சாற்றல், அவர் வழங்கிய ஆலோசனைகள் கேட்போரை அவர் பால் ஈர்த்தது.
அவருடைய உரைக்காக கத்தோலிக்க தேவாலயங்களும் காத்திருக்த் தொடங்கின. விவசாயிகளிடமும், ஏழைகளிடமும் செல்வாக்கு பெறத் தொடங்கினார். இதற்கிடையில் பிரேசில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக கைதாகி விடுதலையான சம்பவங்களும் நடந்தன. எனினும் ஏழைகளுக்கான சொற்பொழிவுகள், ஆலோசனைகள், போதனைகளை இடைவிடாது தொடர்ந்தார். 12 நகரங்களில் 21 தேவாலயங்களை கட்டினார். தேவாலயங்கள் மட்டுமே ஒரு கிராமத்தை வளம்பெற செய்யாது என்பதற்காக பாரிய நீர் தடாகங்களையும், ஏன் மயானங்களைக் கூட உருவாக்கினார்.
1877ம் ஆண்டு பிரேசிலின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடங்கிய கடுமையான வறட்சி இரு வருடங்கள் நீடித்ததால் வறுமையினாலும், பசிக்கொடுமையினாலும் 300,000 க்கு அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர். பல கிராமங்கள் கைவிடப்பட்டன. மனித மாமிசம் உண்ணும் சூழ்நிலை கூட ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் அந்தோனியோவும் அவரை பின்பற்றுபவர்களும் இணைந்து வறுமையில் துவண்ட ஏழை மக்களுக்கு முடிந்தளவு உதவி செய்ய செய்யத் தொடங்கினார்கள். இதனால் மறுவாழ்வு பெற்ற மேலும் பலர் அந்தோனியாவை பின்பற்ற தொடங்கினர். நாட்டின் புனித மதகுருக்களில் ஒருவாராக அந்தோனியோவை பார்க்கும் நிலை உருவானது.
அப்போது, நாட்டின் நகர்ப்புற மையங்களில் இருந்த மிக பிரபலமான அரச தேவாலயங்களின் நேர்மையற்ற செயற்பாடுகள் பல அந்தோனியோவுக்கு கோபத்தை தூண்ட, பகிரங்கமாகவே அவற்றை விமர்சிக்க தொடங்கினார். சிறிய கிராமங்களிலும், நிலபிரபுத்துவ இடங்களிலும் தானே சிறிய தேவாலயங்களை உருவாக்கி மதபோதனை செய்ய தொடங்கினார். இதனால் பாஹியா மாநில கிறிஸ்தவ பேராயரின் எதிர்ப்பை சம்பாதித்தார். பிற மத குருமார்கள் அவரை சேர்த்துக்கொள்ள கூடாது என பேராயர் தடை விதித்ததுடன், அந்தோனியோவை பைத்தியக்காரனாகவும் மதத்தை கைவிடுபவராகவும் அடையாளப்படுத்தி பேராயர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
1888 இல் டாம் பெட்ரோ II (Dom Pedro II) பிரேசிலின் அரசராக ஆட்சிபொறுப்பை ஏற்றதும், தனது மகள் இசபெல்லுடன் இணைந்து அடிமை வாழ்க்கைய ஒழிக்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டார். இதன் பயனாக சுமார் 5 மில்லியனுக்கு மேற்பட்ட கறுப்பின மக்கள் விடுதலையானதுடன், விவசாயத்தை கைவிட்டு பொருளாதார, அரசியல் புரட்சி நோக்கி சென்றனர். (அடிமை முறையை ஒழித்தமைக்காக இந்த டாம் பெட்ரோ II இன்றுவரை பிரேசில் மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார். )
1889 இல் இராணுவ புரட்சி ஒன்றின் மூலம் நாடு கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, மீண்டும், அடிமை முறை அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவுகளால் பாதிக்கப்பட்டு அடிமை வாழ்வுக்கு எதிராக இன்னமும் உறுதியாக குரல் கொடுக்க தொடங்கிய அந்தோனியோ அதையே மக்களுக்கு போதிக்க தொடங்கியதுடன், அதை பற்றி எழுதவும் ஆரம்பித்தார்.
அரசாட்சி என்பது, கடவுளின் ஆசீர்வாதத்தால் உருவாக்கப்பட்டது, அது தான் குடியரசு ஆட்சியும் கூட. தேவாலயங்களை மாநிலத்திலிருந்து தனிமைப்படுத்தாதீர்கள். அது நாட்டுக்கும் குடும்பங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என ஒரு வித Antichirist முறையிலான கொள்கையை எடுத்துக்கூறினார்.
இறுதியில் 1893ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் உருவானது. அந்தோனியோ மற்றும் அவரது குழுவினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து, தன்னை பின் தொடர்பவர்களை அழைத்துக்கொண்டு மோண்டெ சாந்தோ நகர் அருகே சென்று Bello Monte (அழகிய மலை) எனும் கிராமத்தை கண்டுபிடித்தார். அது உள்ளூர் வாசிகளால் கனூடோஸ் என அழைக்கப்பட்டது. அவை விவசாயிகளால் கைவிடப்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்ததால் அதை மீள்நிர்மானம் செய்து கனூடோஸ் எனும் புதிய கிராமத்தை உருவாக்கினார். அவருக்கு உள்ளூர் அரசும் அயலவ முதியவர்களும், உதவி செய்தனர்.
கம்யூனிசத்தை போன்றதொரு சமூக திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். தொழிலாளர்களை பல்வேறு துறைகளுக்கு ஏற்ப பிரித்து வகைப்படுத்தினார். சொத்துக்களை பொதுவுடமை ஆக்கினார். சிவில் திருமணம், அரச நாணய பயன்பாடு என்பவற்றை ஒழித்தார். உணவுவிடுதிகள், குடிபானங்கள், பாலியல் தொழில் என்பவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டது. கொலைக்குற்றங்கள், கட்டாய மத நடவடிக்கைகள் என்பவற்றையும் இல்லாது ஒழிக்க பாடுபட்டார்.
நீதியற்றசெயல்கள், அரச அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு, நிலபிரபுக்களின் ஆக்கிரமிப்பு என்பவற்றிற்கு எதிராக கருத்துக்கூற குடிமக்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் வழங்கினார். பிரேசிலின் வடக்கு கிழக்கு பகுதிகள் அனைத்திலும் கனூடோஸின் புகழ் பரவியது. 'பாலும் தேனும் இருக்கும் நிலம்' என கனூடோஸ் அயலவரால் அழைக்கப்பட்டது. முன்னாள் கறுப்பின அடிமைகளும், பழங்கிடியினரும், நிலமில்லாதோரும், கனூடோவை நோக்கி செல்ல தொடங்கினர். கனூடோஸ் உருவாக்கப்பட்டு ஒரே வருடத்தில் 8,000 புதிய குடியேற்ற மக்களை ஏற்றுக்கொண்டது.
அடுத்த இரு வருடத்திற்குள் (1895 இல்), சுமார், 30,000 மக்கள் சனத்தொகை கொண்ட கிராமமானது. 5,000 வீடுகள் அங்கிருந்தன. இவை மண், வைக்கோல் கொண்டு கட்டப்பட்டவை. இது தவிர தேவாலாயங்கள், ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. வர்த்தகம், வியாபாரம் என்பனவும் முறையான ஒழுங்குமுறையின் கீழ் வளம்பெற தொடங்கியது.
எனினும், புதிதாகக குடியேறிய பலர் அமைதி முறையில் செல்ல தயாராக இருக்கவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளுக்கு உதவும் ஆயுததாரிகளாக வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள். அதோடு அருகிலிருந்த ஜுயாஷெயிரோ எனும் கிராமம் மீது, அந்தோனியோவின் கன்செலெஸ்தாஸ்கள் (போதகர் குழுவினர்) படையெடுக்கலாம் எனும் அச்சம் ஏற்பட மாநில அரசு கனூடோஸ் பக்கம் கவனத்தை திருப்பியது.
மாநில பேராயரால், இரு சமய துறவிகள் கனூடோஸுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர், அந்தோனியோ ஏகபாத்திய முறையிலான மன்னர் ஆட்சிக்கு வித்திடுவதாகவும், நாட்டுக்கு துரோகமிழைப்பதாகவும் தவறாகப் புரிந்து கொண்டார். பிரேசில் மத்திய அரசு, புரட்சியாளர்களை ஏகாபத்தியவாதிகளாகவும், பிரிவினையாளர்களாகவும் பார்த்த காலமது. இதனால் கனூடோஸ் மீது பிரேசிலியன் இராணுவம் தாக்குதல் நடத்தி தனது கட்டுக்குள் கொண்டுவர முதன்முறையாக அனுப்பபட்டது.
வெகுண்டெழுந்த கனூடோஸ் மக்கள் கிட்டத்தட்ட அசாத்திய படைவீரர்களாகவே மாறி தொடர்ந்து மூன்று முறை பிரேசிலின் இராணுவத்தை தோற்கடித்தனர். மூன்று முறையும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வி ஏற்பட்டது. எனினும் ஒவ்வொரு இராணுவ படையெடுப்புக்களின் போதும், கனுடோஸ் கிராமம் கடும் தாக்குதலுக்கு உள்ளானதால், அந்தோனியோ கொன்செலோரே அதிர்ச்சி அடைந்தார். தன்னை பின்பற்றுவர்கள் படும் கஷ்டம் அவரை வெகுவாக வாட்டியது. அவர் ஒரு இராணுவ தலைவர் அல்ல. ஆன்மீக தலைவர் என்பதால், இந்த யுத்தத்தை அறவழியில் நிறுத்தவும், முடிவுக்கு கொண்டுவரவும், தனது உடலை வருத்தி, உணவை விடுத்து கடும் தவம் செய்யத் தொடங்கினார்.
1897ம் ஆண்டு செப்.22ம் திகதி கடும் வயிற்று போக்கினால் உயிரிழந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 67. அவரது மரணம் கனுடோஸின் யுத்த தோல்வியை ஆரம்பித்து வைத்தது. மூன்று முறை போரில் வெற்றி பெற்ற போதும், தமது ஆன்மீக தலைவரை பறிகொடுத்த சோகம், கனூடோஸ் மக்களை அடுத்த முறை தாக்குதலுக்கு தயாராகாதவாறு நம்பிக்கையை முழுவதுமாக இழக்க வைத்திருந்தது.
இருந்த போதும், இறுதியில், 10,000 படைவீரர்கள் கொண்ட படையுடன் போரில் ஈடுபட்டே பிரேசில் அரசால் கனுடூஸை வீழ்த்த முடிந்தது. சுமார் 20,000 க்கு மேற்பட்ட கனூடோஸ் மக்களும், 5,000 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
உணவு, நீராகாரம் கனூடோஸுக்கு தடைப்பட்டதாலும், பசியினாலும், போஷாக்கு குறைபாடினாலுமே பல கனூடோஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆயுதங்களும் பற்றாக்குறையும் ஏற்பட்டது. ஏற்கனவே முன்னைய படையெடுப்புக்களில் அதிகளவிலானவர்கள் இறந்திருந்தனர். இதனாலேயே நான்காவது படையெடுப்பில் தோல்வி கண்டது. கிராமம் முற்றாக நெருப்பு வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இறுதியில் வேறு வழியின்றி எரியும் நெருப்பில் பலர் தாமாகவே முன்வந்து வீழ்ந்து மாண்டு போயினர்.
1897 அக்.2ம் திகதி கனூடோஸ் இராணுவத்திடம் முற்றாக வீழ்ந்தது. உயிருடன் பிடிபட்ட ஆண்கள், கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டனர். மீண்டும் அங்கு அமைதி நிலைநாட்டும்வரை, படுகொலைகள் தொடர்ந்தன. நல்ல தோற்றத்துடன் இருந்த பெண்கள் பலர் பாலியல் அடிமைகளாக எல் சல்வடோருக்கு விற்கப்பட்டனர். இறுதியில் கனூடோஸை பிரதிநிதித்துவப்படுத்தி 150 பேர் மட்டுமே உயிரோடு தப்பினர்.
அந்தோனியோவின் பூதவுடல், இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு, அவரது தலை மாத்திரம் வெட்டி எடுக்கப்பட்டு சல்வடோருக்கு கொண்டு செல்லப்பட்டது. வரலாற்றின் குறிப்பிடத்தக்க மருத்துவராக ஆய்வாளராக கருதப்படும், நினா ரோட்ரிங்குவெஸ் என்பவரால் அவரது தலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பாஹியாவின் மருத்துவ கல்லூரியின் கண்காட்சி சாலையில் காட்சி பொருளாக வைக்கப்பட்டது. எனினும் 1905ம் ஆண்டு மே மாதம் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்து போனது.
மொத்தத்தில் கனூடோஸ் யுத்தம் இரண்டு தேசங்களுக்கு இடையிலான யுத்தம் என பார்க்காது, சர்வாதிகாரத்திற்கும், ஓர் மிகச்சிறிய சமூகத்திற்கும் இடையில் ஒரே நாட்டில் நடந்த யுத்தமாகவே கருதப்பட வேண்டியது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
தமது சுய முயற்சியினாலும், சுய உழைப்பினாலும், மத அனுஷ்டானங்களை ஓர் சமூகத்தின் அபிவிருத்திக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற அந்தோனியோவின் வித்தியாசமான வழிகாட்டுதலாலும் வேகமாக வளர்ச்சியடைந்த ஒரு சிறிய கிராமம் ஒரு நாட்டின் அரச சாம்ராஜ்ஜியத்திற்கே சவாலாக விளங்கி, இறுதியில் மூன்று படையெடுப்பின் பின் தோற்றுப்போன வரலாற்றை, இன்றுவரை கனூடோஸ் யுத்தம் (War of Canudos) ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறது.
கனூடோஸ் யுத்தம் குறித்த பிரேசில் சினிமா Guerra de Canudos
தகவல் உதவி: Wikipedia மற்றும் இணையம்
மொழிபெயர்ப்பில் உதவி: ஸாரா
4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்.