free website hit counter

ராக்சி ட்றைவரும் முள் வேலியும் ! - யோகா - ராஜன்

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"இது புலம் பெயர்ந்தோர் இலக்கியம் அல்ல! புலம்பெயர்ந்தவரின் ஐரோப்பிய இலக்கியம்" என்கிறார் இப்புனைவினை எழுதிய யோகா - ராஜன் நண்பர்கள்.

புலம்பெயர்சூழலில் பிறந்துள்ள சிறுகதை என்பது மட்டுமல்லாது, தமிழ் படைப்பாளர்களில்  ஜேர்மன் மொழி எழுத்துருவாக்கம் எனப் பயணித்திருக்கும் இலக்கியப் பாச்சல் மிக்கது என்பதைக் கூடுதல் சிறப்பாகக் கொண்டுள்ளது. 2021, மே 14 - 16 வரை 48 வது (Solothurn Literature Festival ) சொலோத்தூன் இலக்கிய விழா, நடைபெற்ற போது பிரதி வாசிக்கும் கௌரவமும் பெற்றுள்ளது. சிறப்புக்கள் மிக்க இக்கதையினை, 4தமிழ்மீடியாவின் வாசகர்களுக்குப் பகிர்வதற்கு அனுமதியளித்த கதாசிரியர்களுக்கான நன்றிகளுடன்  இங்கே அக் கதையினைப் பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia.com.

ராக்சி ட்றைவரும் முள் வேலியும் !

அந்தப் ப்பெறுக்கையின்; (Perücke, செயற்கைமுடியின்) நாத்தம் இன்னும் அவனது நாசித்துவாரங்களை நிறைத்திருப்பதாக அவனுக்கு ஒரு பிரமை. மிகுந்த அருவருப்புடன் சீறுகிறான், காறுகிறான், நாறுகின்ற எலியின் நாத்தத்தை முகர்ந்தவன் போல் காறாப்புகிறான்…
இருந்தும் இருகோட்டுத் தத்துவச் சமாச்சாரம் அவனை ஆட்கொண்டதாலோ என்னவோ அவள் மீதான ஆத்திரம் சற்றுக் கீழிறங்கியிருந்தது. சற்றுக் கரைந்து இரக்கத்துக்குரிய கோபமாக மாறியது.
அந்த நேரம்பார்த்து பொலீஸ் கார் வருமெண்டு அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இல்லை, அவள் மேலான ஆத்திரமும் அந்த டோப்பின் நாத்தமும் அவனது பார்வையை மறைத்துவிட்டிருந்தது. பொலிஸ் காரின் வருகையை உணர்வதற்குரிய தன்னிலையை அவன் இழந்திருந்தான்.
இருந்தும்…
அவனுடைய வார்த்தைகளின் அதிர்வில் அந்தப் பொலிஸ்காரன் விழித்ததும், புன்னகைத்ததும் அவன் விழிகளில் இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது, அவனது வார்த்தைப் பிரயோகம் பொலிஸ்காரர்களை சில கணங்கள் விழிக்கவைத்ததையிட்டு உள்ளளவில் அவனுக்குப் பெருமைதான். அதை நினைக்கும்போதெல்லாம் ஒருவித சுகத்தை அனுபவித்தக்கொள்கிறது உள்மனம்.
அவள் மீதான ஆத்திரம் இரக்கத்தில் கரைந்தபோதும் கோபம் இன்னும் அவனை விட்டுவிடுவதாக இல்லை. அவனை அறியாமலே உள்ளுணர்வுகள் அவள்மீதான ஆத்திரத்துடள் பொங்குவதும் அடங்குவதுமாக...
உள்ளுணர்வுடன் பேசிக்கொள்கிறான்… „அவள் ஒரு பாலியல் தொழிலாளிதான். ஆனால் அவளிடம் நேர்மையிருந்தது. அது வேறொரு விதமானது. அவளுடைய தொழில்முறை சார்ந்தது. அவள் தன்னுடைய இயலாமையைச் சொல்லி என்னுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம். அதை விட்டுட்டு…
ஒன்றுமே செய்ய இயலாத நிலையில்தான் என்னை ஏமாற்ற நினைத்திருக்கிறாள்.
இன்றைக்கு முடியாவிட்டால் நாளைக்கு வந்து பார் என்று நான் சொல்லியிருந்தால்… பெருந்தன்மையாக இருந்திருக்கும். நட்பும் வளர்ந்திருக்கும். அவள் எனது தினப் பயணியாகவும் வாடிக்கையாளினியாகவும் இணைந்திருப்பாள்.“

ஐந்து சத வருமானத்தையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் பொலீசுக்கு தண்டப்பணம் கட்டியதை நினைத்து அவனது உள்ளக் குமுறல்கள் ஓய்ந்தபாடில்லை.
„எல்லாத்துக்கும் மூலம் அவள்தானே!“
மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து சங்கமிக்கிறது அவனது குழம்பிப்பிப்போன உணர்வுகள். சிக்னல் இல்லாதபோது தொலைக்காட்சிப்பெட்டிகளில் விழும் கீறல்களைப் போல.
° ° ° ° ° ° ° ° ° °
லாங்ங் ஸ்றாஸ்சா. சூரிச் மாநகர வீதிகளில் நன்கு அறியப்பட்ட ஒரு பெரிய வீதி. மிக முக்கியமானதும் கூட. ப்பாடெனெர் சாலையில் ஆரம்பித்து, புரட்சிகளுக்கும் கிளர்ச்சிகளுக்கும் இடம் தருகின்ற ஹெல்வெற்றியா ப்ளாற்ச்சை (Helvetia Platz) உரசியபடியும் முகர்ந்த வகையிலும் வடக்குத் திசையை நோக்கி நீண்ட படுக்கையாக அகன்று செல்கின்ற இவ் வீதி, சூரிச் பிரதான தொடருந்து நிலையத்தின் தொடுகைக்குரிய அறுபது அல்லது அதற்கு மேற்பட்ட தண்டவாளப் பாதைகளைக் குறுக்காக ஊடறுத்து, நிலக்கீழ் வழியாகச் சென்று மீண்டும் தரைவழியே ஏறி ஒரே திசையில் நீண்டு லிம்மாற் ப்ளாற்சில் கரைகிறது. நீண்ட வீதியென்ற பெயரில் அறிப்பட்டபோதும் இது ஒரு நகரப்பகுதி (Quartier)யாகவே திகழ்கிறது. ¨ஹொட்டேல் றெகீனா¨! ¨றெஸ்ற்Nhhறன்ற் சொன்னே! இவை… சுவாரசியத்துக்கும், வேடிக்கைக்கும், வினோதத்துக்குமுரிய பல்வகை நிகழ்வுகளைச் சுமந்தபடி இதன் மையப்புள்ளிகளாக உயர்ந்து நிற்கின்றன!

இப் பகுதியின் சிறப்பம்சமே அதன் நிர்வாணக் கோலம்தான். ஒளிவு மறைவின்றி உலகின் பல்வேறு சூழல்களையும் ஒருங்கே உள்வாங்கிக் காண்பிப்பது இதன் இயல்பு. தினம் தினம் காசுக்குத் திண்டாடும் ஒட்டாண்டியும் இங்கு வந்து ஆறுதலடைகிறான். பேர்சொல்லக்கூடிய குபேரர்களும், கனவான்களும் கூட மன அமைதியை முகர்வதற்கும், நுகர்வதற்குமான மையமாக் எல்லாவகை

நெருக்கடிகளையும் எதிர்கொள்ளத் தயார் என்பதுபோல கால்களை விரித்துக் கைகளை அகட்டி திறந்த வெளியில் மல்லாந்து கிடக்கிறது, இந்த நெடுங்சாலை!
பாலுறவுத் தொழிலுக்குரிய சகல வழிகளையும் அகலத் திறந்து வைத்திருக்கும் வீதியோர மாடிகள்… பெண்ணுறவுப்வுக்காரர்களுக்கு மட்டும் இடமளிப்பில்லை. அரவாணிகள், ஆணுறவுக்காரர்கள் என்று பல்வகை ஆன்மாக்களையும் உள்வாங்கிக்கொள்கிறது.

சர்வதேச அளவில்… போதைவஸ்துப் பாவனைக்குரிய பாரிய நகரப் பகுதிகளில் இதுவும் ஒன்று! கஞ்சா தொடங்கி ஹெறொய்ன் ஈறாக, பாவனைக்கும் வாங்குவதற்கும் விற்பதற்குமான நடுமையம். பல்வகைக் கிறிமினல்கள் வந்து போவர். இடையிடையே சிலர் பொலிசில் மாட்டுப்படுவர், சிலகாலம் சிறை செல்வர். மீண்டும் பிரசன்னமாவர்.

சாதாரண டிஸ்கோ நடனக் கிளப்புகள் முதல் கபறே நிர்வாண நடன நிலையங்கள் வரை, வனப்புடன் மிளிர்கின்ற பல்வகை கலைஞர் கூட்டங்களும் கலைக் கூடங்களும், இந் நகர்ப் பகுதியை அழகுற அலங்கரித்துக்கொள்ளும் தினந்தோறும்.

குளிரின் குரூரம் மனித உயிர்களின் சதைப் பிண்டங்களைப் பிய்த்திழுக்கின்ற குளிர்ச் சூழலிலும் இப் பகுதி மனித நடமாட்டத்துக்குரிய சிறப்பை இழப்பதில்லை. பரந்த ஒளிச் சுவாலைகளை வீசுகின்ற மின் கலங்களால் அலங்கரிக்கப்பட்டபோதும் பல்வகை நிறமுகூர்த்தங்களுடன் கூடிய ஒருவகை இருளைக் கௌவ்விக்கொண்டு ஒளிர்வது இதன் இருப்பின் சிறப்பு.

பல்வேறுபட்ட மனித முகங்கள்…
உலகின் மிகப் பெரிய அழகிகளின் குவிமையம் இதுதானோ என்று எண்ணத்தோன்றும். அசிங்கப்பட்ட மனித உருவங்களும் வந்து போகும். வௌ;ளி சனி என்றால் சொல்லி அடங்காது. அந்தளவுக்கு இளவட்டங்கள், வாலிபங்கள், வயோதிபங்கள்! என்று வேறுபட்ட தலைமுறை (Generation) உறவுகளின் வருகையால் நிரம்பி வழியும்! ஜன நெரிசலுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் இம் மையப் பகுதி!

அப்படி ஒரு வெள்ளிக்கிழமை இரவு. ஹோட்டல் றெகீனா முன்பாக, நெஞ்சைக் குடையும் மனக்கிலேசத்துடன். காத்து நிற்கிகிறாள் அந்த அழகிய லத்தீன் அமெரிக்கப் பெண்.

„நடந்து போகும் தூரம்தான். இண்டைக்கு… அதுவும் இந்த நேரத்தில நிலக்கீழ் வீதியைக் கடந்து நடந்து செல்வது…? ராக்சியில் போவதற்கும்…?“

நெஞ்சு பட படத்த போதும் எல்லாவற்றையும் சுதாகரித்துக்கொண்ட அவள் திடமான முடிவுக்கு வருகிறாள்.
„ராக்சியிலேயே போவம்…“

ராக்சியை மறிப்பது, ராக்சி ட்றைவருடன் பேசுவது பற்றிய பல கேள்விகளுக்கு விடையளிப்பது போல் மனதை அலட்டிக்கொள்கிறாள். எல்லாமே வழக்கத்துக்கு மாறான முறையில்தான். ராக்சி ஒன்று வந்துகொண்டிருக்கிறது. அவள் செல்லவேண்டிய பாதையை நோக்கி… மறிக்கும் நோக்கில் கையை உயர்த்த முனைகிறாள். பயணிகளுடன் வருதைக் கண்ணுற்றதும் கையை மெல்லக் கீழே வீழ்த்துகிறாள். சில வினாடிகளில் பின்னால் வந்துகொண்டிருக்கும் மற்றொரு ராக்சி வெறுமையாக இருப்பதைக் கண்டு கையை உயர்த்தி மறிக்கிறாள். நின்றதும், தானாகNவு கதவைத் திறந்து முன் முடிவுடன் முன் சீற்றில் உட்காருகிறாள். கதவை இறுகச் சாத்திக்கொண்டதும்…

„சற்சலி -அன்பே- என்னை லிம்மாற் ஸ்ற்றாசா (வீதி) 215க்குக் கிட்ட இறக்கிவிடு“. ஏற்கனவே அறியப்பட்டவனுடன் பேசுவது போல் வார்த்தையை விட்டெறிந்தாள். ஆம் என்பதுபோல் தலையசைத்த ட்றைவர் வாகன நெரிசல்களுக்கு மத்தியில் மெதுவாகவும் மிகுந்த அவதானத்துடனும் வாகனத்தை ஓட்டுகிறான். கணநேர அமைதிக்குப் பின் அவள் தொடர்ந்தாள்.

„சற்சலி இண்டைக்கு ஒண்டுமே நடக்கேல்ல. பிஸ்னெஸ் சரியான படான். அதுதான் நேரத்துக்கு வீட்டை போறன்.“

„என்ன சொல்லுறாய்… இஞ்ச பார். பேய்ச் சனமாய் இருக்கு. நீ ஏன் அப்பிடி சொல்லுறாய்?“ கேள்வியாக விழுந்தது ராக்சி ட்றைவரின் பதில்.

„உனக்குத் தெரியாது… உதெல்லாம் சின்னப் பெடியள். காசில்லாததுகள். உதுகளால எனக்கு ஐஞ்சு சதமும் கிடைக்காது.“ அவள் வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தபோது ட்றைவர் குறுக்கிட்டான்.

„யாவாரத்துக்கு நேரங் கிடக்கு… நீயேன் அதுக்கிடையில விட்டுட்டு ஓடுறாய்?“

„இல்லையில்ல… பிறகும் நடக்காது. இது பனிச் சறுக்கிற விடுமுறைக் காலம். அதுதான் பணக்காரர் எல்லாம் மலைக்குப் போட்டாங்கள்.“ என்றாள் அழகான அப் பயணிப் பெண்.

„அதுக்காக நம்பிக்கையை இழக்கக் கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கை“ ட்றைவர் தத்துவ முத்தொன்றை உதிர்த்ததும், தருணம் பார்த்து ராக்சிக்காக காத்துக்கொண்டிருந்த கணத்திலிருந்து, உள்ளக் கிடக்கையில் தவித்துக்கொண்டிருந்த உண்மையை வெளிப்படுத்தினாள் அவள்.

„அன்பே சற்சலி… இண்டைக்கு என்னட்டைக் காசில்லை…“
„அதால…“
„இரண்டு பேரும் ஒரு உடன்பாட்டுக்கு வருவம்.“

அவளது உரையாடலின் உள்ளர்த்தத்தை விளங்கியோh விளங்காமலோ அவன் கேட்டான்…

„அதென்ன உடன்பாடு?“

அவள் மிகுந்த அன்புகூர்ந்து வார்த்தைகளை உதிர்த்தாள்.

„அன்பே நீ ராக்சியை விட்டுட்டு மேலே வா. நான் உன்னைச் சந்தோசப் படுத்துவேன்.“

„நைன்… நைன்… அதொண்டும் எனக்கு வேண்டாம். எனக்கு நீ உரிய கூலியைத் தா. அது போதும்“ சற்று எச்சரிக்கையும் கோபமும் சேர்ந்து ட்றைவரின்; உதடுகள் வெடித்தன.

அவள் பயப்படுவதாக இல்லை. நீண்டநாள் பழகிய நண்பனிடம் கெஞ்சுவதுபோல் தனது தாய்மொழியில் கொஞ்சும் வார்த்தைகளால் நனைத்தாள் அவனை.

„மி அமோர்“ (Mi Amour) எனது இதயமே… வழக்கமாக நான் நூறுதான் வாங்கிறனான். அதுவும் சில நிமிட நேரங்களுக்கு மட்டும். ஆனால் நீ எனக்கு ஐம்பது மட்டும் தந்தால் போதும். உன்னை மிகுந்த திருப்தியோடு அனுப்பிவைப்பேன்.“

அவள் தனக்கான தொழிலில் கைதேர்ந்தவளாக இருப்பாள் என்பதை அவளது பூடகமான பேச்சு உணர்த்தியது. அவன் நிதானமாகக் கூறினான்.

„இல்லை… இண்டைக்கு என்ரை முதலாவது ஓட்டமே இதுதான். என்னட்ட ஐஞ்சு சதமும் இல்ல.

அவனுக்கு முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்… பணத்துக்குப் பதிலாக புணர்ச்சிக்கு வரக்கோரும் இவளது புலம்பல்கள்… இருவகை நெருக்கடிகளுக்கும் மத்தியில் சாவதனமாக ராக்சியை ஓட்டிக்கொண்டிருக்கிறான் ட்றைவர். கீயோமாயோ என்று அலறிக்கொண்டுவரும் கூ... கூ... ஒலி, ட்றைவரின் செவிப்பறைகளைச் சடுதியாக அறைகிறது. அம்புலன்ஸ் ஒன்று பின்னிருந்து வருவதை கண்ணாடிகள் காட்டிக்கொடுப்பதற்கு முன்பாகவே அவன் தெரிந்துகொண்டான். வாகனங்கள் இரண்டு வரிசைகளில் தேங்கிப்போய் நிற்கின்றன. அம்புலன்சின் வருகைக்கு வழிவிட்டு நிற்கவேண்டியது கட்டாய விதி! ட்றைவரின் கரங்கள் ஒருகணம் தடுமாறுகின்றன. ஒருவாறாக அமைதியடைந்து காரை ஓரப்படுத்துகிறான்.

இதே கூ... கூ... ஒலியுடன் பொலிஸ் வாகனங்களும் வருவதுண்டு. அவை பாரிய விபத்து நடந்த இடங்களை நோக்கியதாக. அல்லது மோதல்கள் இடம்பெறும் இடங்களை நோக்கி விரைவதாக இருக்கும். தீயணைப்பு வாகனங்களும் இதே சத்தத்துடன் அதிவிரைவாகப் பாய்வது வழக்கம். இச் சந்தர்ப்பங்களில் எல்லாம் பயணம் தாமதப்படும். மீற்றர் ஏறிக்கொண்டிருக்கும். ராக்சிப் பயணிகள் அவர்களை அறியாமலே உள் மனதில் விசனம் கொள்வர்.

வாகனம் தாமதமாகும் வினாடிகளில் 20 றாப்பன் (சதம்) கணக்கில் மீற்றரில் ஏறிக்கொண்டிருக்கும் தொகை, பயணிப் பெண்ணை அச்சத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் அவளிடம் பணம் இல்லை. ஆனால் அவள் தனது பய உணர்வை மறைத்து அவனை சென்றிமென்ராக ஈர்க்க முனைகிறாள்.

„அன்பால் நிறைந்தவனே! நீ உன்னட்டை இருக்கிற காசைத் தந்தால் போதும். காலையில் என் மகனுக்கு சான்விச் வாங்கிக் குடுக்கக்கூட காசில்லாமல் இருக்கிறன்.“

ட்றைவர் மிக்க நிதானத்துடன் பதிலளித்தான்.

„சொல்வதைக் கேள்… எனக்கெண்டும் மனைவி பிள்ளைகள் இருக்கினம். அவைக்குத் துரோகம் செய்ய நான் விரும்பவில்லை“

அவள் விடுவதாக இல்லை. தொடர்ந்தாள்…

„நீ சந்தோசமாக இருப்பதுதான் எனக்கு முக்கியம். அதைப் பற்றித்தான் நான் பேசுகிறேன்.“

„பெண்ணே! நான் ஹச் பயணம் செய்த ஒரு முஸ்லிம். என்னால் என் மனைவிக்கு துரோகம் செய்ய முடியாது“

ட்றைவர் மத நம்பிக்கை சார்ந்த தனது கொள்கையை நிதானத்துடன் முன் வைத்தான். ஆனால் தத்துவப் பின்னணிகொண்ட அவனது மத நம்பிக்கையை புரிந்துகொள்ளும் உயிரியாக அவள் இல்லை. இருந்தும் அவனுடன் விவாதிக்கத் தலைப்பட்டாள் இருட்டில் அலையும் திருடனைப் போல.

அவள் புன்னகைத்தபடி சொன்னாள். „உங்கட மதத்திலதான நாலு, ஏழு எண்டு கலியாணஞ் செய்யலாமெண்டு சொல்லுகினம். அப்படியிருக்க… நீயேன் பயப்படுகிறாய்?“

அவன் அவளுடைய அறியாமையை உணர்ந்தவகையில் அவதானத்துடன் நிதானமாய் சுருக்கமாகப் பதிலளித்தான்.

„அது நீ நினைக்கும் அந்த அர்த்தத்தில் அல்ல“

அவள் விட்டுவிடுவதாக இல்லை. அவனது மதநம்பிகையின் வழியாக அவனை இரங்க வைக்கும் முறையில் தொடர்கிறாள். அப்பாவிக்குரிய தொனியில்…

„உனது கடவுள் எனது நிலையைப் புரிந்துகொள்ளமாட்டாரா?“

„எனது கடவுள் உன்ரை நிலையைப் புரிந்துகொள்வது எனக்கு முக்கியமில்லை. எனக்கு முக்கியம் எனது கடவுள் எனக்குச் சொன்ன கடமைகள்தான்;.“

„அப்பிடியெண்டா என்னைப் போன்ற ஏழை விபச்சாரியைப் புரிந்துகொள்ளாத உன்ரை கடவுளிலை ஏதோ குறைபாடிருக்கு.“

அவள் கூறிய அந்த இலக்கத்துக்கு அருகில்தான் ட்றைவர் வழக்கமாகச் சாப்பிடச் செல்லும் உணவகமும் இருந்தது. இவளை இறக்கி விட்டு சாப்பாட்டுக்குச் செல்லும் முன்நோக்குடன் கார்ப் பார்க்கிங் ஒன்றில் வண்டி நிறுத்தப்பட்டது.

„எனது கடவுளைக் குறை கூறுவதற்கான உரிமை உனக்கில்லை.“ என்று கண்டிப்புடன் வார்த்தைகளை உதிர்த்த ட்றைவர் மேலும் தொடர்ந்தான்.

„உன்னை உனக்கான இடத்தில் விட்டுவிட்டேன். அதற்கான கூலி 15.20ஐத் தா“

அவள் பணிவுடன் உரைத்தாள் „அன்பே என்னிடம் பணமில்லை“

„அப்படியானால் நீ ஏன் ராக்சியில் ஏறினாய்?; நடந்து வந்திருக்கலாம்தான“ உரத்த தொனியில் ட்றைவர்.

„நான் நடந்து வந்தால் பொலிஸ் என்னைத் செக் பண்ணி;த் தொல்லைப்படுத்தும். அதாலைதான்…“
பொலிசினால் வரும் இடையு+றுகள் குறித்த அவளது முன்னைய பாடங்களை அழுத்தமாக எடுத்துரைத்தாள்.

„அப்பிடியெண்டா 32ம் நம்பர் பஸ்சில ஏறி, ற்றாமில மாறி வந்திருக்கலாம்தான?“ ட்றைவர் கட கடவென்று வெருட்டும் தொனியில் வார்த்தைகளைப்பொழிந்தான்.

„ மைன சற்சிலி… பஸ் ரிக்கெற்றுக்கும் என்னட்டைக்காசில்ல. அதுதான்…“

„அப்ப டாக்சிக்காறன் எண்டா ஒரு ஏமாளி… சுகமா ஏமாத்திப்போடலாம் எண்டு நினைச்சிருக்கிறாய். அப்பிடித்தான?“ ஆத்திரம் பொங்கியவனாய் அலறினான்.

அவள் துணிவும் பயமும் கலந்த தொனியில் மீண்டும்

„அன்பே! நான் உன்னை ஏமாற்ற நினைக்கவில்லை. நான் இப்பவும் சொல்லுறன்… நீ வா… உன்னை, உனது அங்கங்களை முழுமையாக ருசித்து… உனது மனைவி உனக்குக் கொடுக்க முடியாத இன்பத்தை நான் உனக்கு வழங்குவேன். இந்த 15.20க்கான மாற்றாக நீ அதைப் பெற்றுக்கொள்.“

„அப்படியில்லை. நீ இப் பணத்தைத் தரத்தான் வேண்டும். என்னால் எனது மனைவிக்கும் எனது இறைவனுக்கும் துரோகம் செய்ய முடியாது.“ ஆத்திரம் அடங்காத தொனியில் மீண்டும் உரைத்தான் ட்றைவர்.

இவன் தனது வழிக்கு வரமாட்டான் என்பதை மிகவும் தாமதமாகத்தான் அவள் தெரிந்துகொண்டாள். தெரிந்துகொண்ட உடனேயே சு+சகமாக மெல்லக் கதவைத் திறந்து ஓட முற்பட்டதும்…
அவளது தலை முடியைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டான் ட்றைவர். அந் நிலையிலும் அவள் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது தனது கைப்பிடிக்குள் அகப்பட்டது அவளது செயற்கை முடி என்று.

ஏமாற்றத்தை எதர்பாராத ஆத்திரத்தில் தலைமுடியை பின்னிருக்கையை நோக்கி எறிந்தான். கதவை வேகமாக அடித்துச் சாத்தினான். உணவகத்தை நோக்கி சடக்… சடக்… என்று நடந்தான்.

இதயத் துடிப்பு படக் படக் என்றிருந்தது. சின்னனாக ஒரு சான்விச்சுக்கு ஓடர்பண்ணிப் போட்டு தனியான ஓர் இருக்கையில் அமர்ந்தான். இதயத் துடிப்பின் வேகத்துக்கு ஏற்ப அவனது எண்ண அலைகள் அவளையே சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தன.

„அவள் தன்னுடைய கணக்கைத் தீர்த்துக்கொள்வதற்காக என்னைப் பாலுறவுக்கு ஈர்த்துக்கொள்ள நினைத்தது எந்தளவுக்கு நியாயம்? ஏற்கனவே பல ராக்சி ட்றைவர்மார் அப்படித்தான் நடந்திருக்க வேணும்? அதாலதான் அவள் என்னை அந்தளவுக்கு வற்புறுத்தியிருக்கிறாள். மனைவி என்றாலும் வற்புறுத்திப் பாலுறவுகொள்ள முனைவதை குற்றம் என்று நினைப்பவன் நான். நியாயப்படி அவள் செய்தது தவறு. சட்டப்படியும்தான். ஆனால் சட்டப்படி அவளின் கணக்கைத் தீர்த்துக்கொள்ள முடியுமா? அதற்கு சரியான சாட்சி வேணும். அல்லது அவளின் கையெழுத்து வேணும். எல்லாத்துக்கும் மேல அவள் பேர் தெரிய வேணும். ராக்சிக் காரருக்கு சட்டம்? அது துட்டைக் கறக்குமேயொழிய… வேறெதுவும் செய்யாது. இப்பிடி எத்தினை முறை எத்தினை ராக்சிக் காரர் ஏமாற்றப்பட்டிருக்கினம்;? இரண்டு கிழமைக்கு முன்னம் ஒரு தமிழ்ப் பெடியன்! அந்த ஆபிரிக்க ராக்சி நண்பரை ஏமாற்றிப்போட்டு ஓடியிருக்கிறான். அதுவும் 120 சுவிஸ் பிராங்குக்குரிய தூரத்துக்குப் போன பிறகு. இவ்வளவு ஏமாற்றங்களையும் தாண்டித்தான் இந்தத் தொழிலில இருக்கவேண்டியிருக்கு.“

அவனுடைய இருக்கையை நோக்கி சான்விச் வந்திருந்தது. கூடவே ஒரு காப்பியையும் பெற்றுக்கொண்டான். பணத்தைக்கொடுப்பதற்கு முன்பாக சேவிஸ் பெண்ணை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தான். அந்த ரக்சிப் பயணியின் தோற்றத்தை ஒத்திருந்ததை ஒப்பிட்டுப் புல்லரித்துப் போனான்.

„சிலவேளை அவளின் சகோதரியாக இருக்குமோ?“

மனதில் பொசிற்றிவ்வான எண்ணங்கள் உலாவருவதை உணர்கிறான்.

„அந்த ப்பெறுக்கை (டோப்) மிக அழகானது. தொழில் முறையாக பின்னப்பட்டது. அவளின் முகத் தோற்றத்தை மிளிர வைப்பது. அதன் பெறுமதி சுமார் 1000 சுவிஸ் ஃபிராங்கைத் தாண்டும். ராக்சிக்கு 15.20 ஃபிராங்கைத் தரமுடியாதவளுக்கு இது பெரிய தொகை. அவள் இருக்கும் இடம் தெரிந்தால் நானே கொண்டுபோய் குடுத்துவிடலாம். எனது சிறிய தொகைக்காக இந்தப் பாவத்தை நான் சுமக்கக் கூடாது. ப்பெறுக்கைக்காக எண்டாலும் அவள் எப்பிடியும் என்னைத் தேடி வருவாள். அப்பிடி அவள் வந்தால் அதைத் திருப்பிக் குடுத்துவிடவேண்டியதுதான்.“
சேர்விஸ்காரியிடம் கணக்கை முடித்துவிட்டு உணவகத்தை விட்டு வெளியேறிய ட்றைவர் நிதானமாகக் கால்களைப் பதித்து ராக்சியை நோக்கி நகர்கிறான்.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
தெளிவான மனநிலையுடன் ஜக்கற் பொக்கற்றில் இருந்து திறப்பை எடுத்து மிக ஆறுதலாக கதவைத் திறக்கிறான். „புக்“ என்று வீசிய நாற்றத்தால் திணறிப்போன அவன் மிக வேகத்துடன் பின் கதவைத் திறக்கிறான். சீற்றில் இருந்த ப்பெறுக்கையை ஆத்திரத்துடன் எடுத்து வெளியே வீசுகிறான்…
அதே கணத்தில் பொலிஸ் கார் ஒன்று அவன் முன்னே வந்து நிற்கிறது. காரில் இருந்து இறங்கிய பொலீசார் மூவரில் ஒருவர் பெண்.
நிமிர்ந்த நடையுடன் பாதங்களை முழுமையாகப் பதித்து அவனை நோக்கி நெருங்கி வந்த போலிசாரில் ஒருவன் (ஜேர்மன் மொழியில்);
„வணக்கம்! சூரிச் நகரப் பொலிஸ் ஹெர்மான்“ தன்னை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஓட்டுனர் பத்திரத்தைக் கேட்டான். அடுத்து ராக்சிக்குரிய பத்திரங்கள் அனைத்தையும் வாங்கி பொலிஸ் பெண்ணிடம் சரி பார்க்கும்படி கொடுத்தான். அவள் எல்லாவற்றையும் கொன்றோல் பண்ணி உறுதிப்படுத்திவிட்டு

„எல்லாம் சரியாக இருக்கிறது.“

என்று கூறி நன்றியையும் தெரிவித்தாள். அருகில் நின்ற மற்றவன் ராக்சி ட்றைவரிடம் வந்தமைக்கான உண்மைக் காரணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தனது பதவிக்குரிய ஆளுமையுடன் சற்று உரத்த குரலில் தொனித்தான்.

„நீங்கள் ஒரு குப்பையை வெளியில் எறிந்திருக்கிறீர்கள். எமது நாட்டில் குப்பையை வெளியில் எறிவது தவறு! சட்டப்படி குற்றம்! அது உங்களுக்கும் தெரியும்:“

பொலிஸ் கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அவன் தனக்கு நேர்ந்ததை சுருக்கமாக இரக்கத்துடன் விவரித்தபோது பெண் பொலிஸ் குறுக்கிட்டாள்.

„எமக்கு கதை முக்கியமில்லை. நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். அதுதான் எமக்கு முக்கியம். எதற்கும் எமது மேலதிகாரியிடம் இது பற்றி வினவுகிறோம்.“ கூறிய அவள் தமது மேலதிகாரியிடம் அதற்குரிய தொடர்புக்கருவியில் பேசினாள்.

ட்றைவர் மற்றைய பொலிசாரிடம் கூறினான் „நான் குப்பையைத் திரும்பப் பெறுகிறேன்“

„இல்லை குப்பை போட்டது போட்டதுதான். குற்றத்துக்கான தண்டம் உண்டு“ மேலதிகாரியிடம் பேசிய பெண்பொலிஸ் வலியுறுத்தினாள்.

„என்னை அனுமதியுங்கள். நான் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டிக்குள் போடுகிறேன்“

„நீங்கள் அதையும் செய்யத்தான் வேண்டும். நீங்கள் குப்பையை வெளியில் வீசியது குற்றம். அதற்குத் தண்டம் உண்டு. நீங்கள் அதைச் செலுத்தித்தான் ஆகவேண்டும்! எமது மத்திய பிரிவுக்கு தொடர்புகொண்டு தொகையைக் கூறுகிறேன்.“

மத்தியில் இருந்து பதில் வந்தது „லிற்றறிங் ஓர்ட்னுங், புஸ்சைக்கான -தண்டத்துக்கான- தொகை 100 ஃபிறாங்“ என்று!

மனதுக்குள் நகைத்தான் ராக்சி ட்றைவர். இருந்தும் நிதானமாகவும் அமைதியாகவும் பொலிசாரைப் பார்த்து ஜேர்மன் மொழியில் மொழிந்தான்.

„இதுவரை காலமும் நான் நினைத்தேன்;
சட்டத்தின் நோக்கம் மக்களை வழிநடத்துவதுதான் என்று! ஆனால் இப்போது புரிந்துகொள்ளுகிறேன்… சட்டத்தின் நோக்கம் மக்களைத் தண்டிப்பதுதான் என்று!“

உயர்ந்து நிமிர்ந்த அந்தப் பொலிஸ்காரன் அவனைப் பார்த்து ஒருகணம் விழித்தான், ஒருவகைப் புன்னகை ததும்ப…!

- யோகா - ராஜன்

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction