free website hit counter

அவளும் அவளும் – பகுதி 13

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

வந்தவர்கள் முதலில் செல்லாச்சியை மட்டுமே கண்டிருக்க வேணும் “ அக்கா ! நீங்கள் இன்னமு; வெளிக்கிடேல்லையோ…?” எனக் கேட்டார்கள். அவர்களின் தமிழ் உரையாடலும், உடைகளும் அவர்களை அடையாளங் காட்டிட, ஆசுவாசத்துடன் செல்லாச்சி சற்று நகர்ந்து திரும்பி வேலைப் பார்த்தாள்.

அவர்களும் அவனையும், அருகே நின்ற சக்கர நாற்காலியையும் அப்போதுதான் பார்த்திருக்க வேண்டும்.
“ஓ…” என்றான் அவர்களில் ஒருவன். பின் அவனே தொடர்ந்தான்.

“நீங்க இரண்டு பேரும் தான் நிக்கிறியளோ..?”
செல்லாச்சி தலையாட்டினாள். “ஓம்.. தம்பி“ என்றான் வேலன்.
வந்தவர்களுக்குப் புரிந்தது இது அவர்களின் வீடு அல்ல என்பது. அதனால் “வீட்டுக்காறர் எல்லாரும் போயிற்றினமோ…?” எனக் கேட்டான்.
அதற்கும் “ஓம்” என்பதைப் பதிலாக்கினான் வேலன்.
“அக்கா நீங்களும் போயிருக்கலாமே..?” எனக் கேட்க வந்தவன், செல்லாச்சியின் நீர் முட்டியிருந்த கண்களைக் கண்டு அதனைக் கேட்கவேயில்லை.
“ சரி கவனமா இருங்கோ.. முடிஞ்சா நாளைக்கு ஏதாவது ஒரு வாகனத்தோட வரப் பாக்கிறம்…” என்றான்.
செல்லாச்சியின் நீர் முட்டிய கண்கள் நன்றியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தின.
வேலன் கைகளைக் கூப்பினான். அந்தக் கரங்கூப்பலின் பின்னால் அவனது வாழ்வின் எதிர்பார்ப்பும், விருப்பும், எதிரே நின்றவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கூப்பிய அவனது கைகளை இறுகப்பற்றித் தாழ்த்திவிட்டுத், தோள்களில் தட்டிக் கொடுத்தான். அது வேலனுக்கு பெரு நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டான்.
“ கவனமா இருங்கோ..” என்றவாறே சென்றார்கள். வைரவன் வாசல் படலை வரை அவர்களைத் தொடர்ந்து சென்று பின் திரும்பி வந்து திரும்பவும் படுத்துக் கொண்டது.
“ இருட்டுப்படுகுது நீர் விளக்க வையுமென்..”
வேலன் சொன்னதற்குக் கட்டுப்பட்டவள் போல் செல்லாச்சி முகங் கழுவுவதற்காகக் கிணற்றடிப் பக்கமாகச் சென்றாள். அவள் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை பிறந்ததை அவள் உடல் மொழிந்தது.
வேலன் மறுபடியும் சுவரில் சாய்ந்து கொண்டான். சூழலின் அமைதியை அவனால் ரசிக்க முடியவில்லை. இந்த இருளும், தனிமையும் ஏதோ இனம்புரியா அச்சத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் அதையும் தாண்டி வந்தவர்கள் சொல்லிச் சென்ற வார்த்தைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முயற்சித்தான். அது அவன் அகத்துள் பெரும் போராட்டமாகவே நடந்திருக்க வேண்டும்.
கிணற்றடியிலிருந்து சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தலைவாசல் திண்ணைக்கு வந்த செல்லாச்சி, சின்னத்தம்பியின் படத்தின் முன்னால் ராசம் கொடுத்த போது வேண்டி வைத்த வீட்டின் சாவிக்கொத்தை எடுத்துக் கொண்டாள். அதனைஒரு தடவை வடிவாகப் பார்த்தபின் இடுப்பிலே செருகிக் கொள்ளப் போனாள். பின் ஏதோ யோசித்துக் கொண்டவள் போல, சின்னச் சிரிப்புடன் அதனை கைகளிலேயே வைத்துக் கொண்டாள். ராசம் வீட்டுச் சாவிக்கொத்தை இடுப்பிலே செருகிக் கொள்ளும் காட்சி அவள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
பெரிய வீட்டுப்பக்கம் போன அவள், தலைகுனிந்து உட் சென்று பெரிய வீட்டின் வாசலில் நின்றாள். பித்தளைப் பிடி போட்டிருந்த பெரிய வீட்டின் வாசல் திறப்பினை அடையாளங் காண்பதற்கு அவள் சிரமப்படவில்லை. அதனைச் சாவித்துவாரத்தில் செலுத்தி, திருகியிபின், கதவுகளை இரு கைகளாலும் தள்ளினாள். வலது புறத்தில் ஒற்றைக் கதவு திறந்து கொண்டது.
வீட்டின்னுள்ளிருந்து சாம்பிராணியின் நறுமணம் அவள் முகத்தில் முட்டி வரவேற்றது. புகுந்த வீட்டிற்குச் செல்லும் புதுப் பெண்போல், பயமும், நாணமும் கலந்திருக்க வலது காலை மெதுவாகத் தூக்கி, வாசற்படியினை மிதிக்காது, சின்னத்தம்பியும், கமலமும் கட்டிய கோவிலின் கர்பக்கிரஹத்துக்குள் கவனமாகக் கால் பதித்தாள். சந்திரனில் கால் பதித்த விண்வெளி வீரனைப் போல் அவள் உடலும் உள்ளமும் துள்ளியது.
சற்று நேர அமைதியின் பின் “இஞ்சப்பா..!” ஆச்சரியத்துடன் பதற்றத்தை வேலனின் பக்கமாகக் கொண்டு வந்தாள் செல்லாச்சி.
“ஆச்சியின்ர பெட்டகம் சாமி படத்தட்டில இருக்கு….”
அதற்கென்ன என்பது போல அவளைப் பார்த்த வேலனிடம்,
“ அதுக்குள்ள அம்மாவின்ர நகையெல்லாம் கிடக்கு. அவசரத்தில எடுத்துப் போக மறந்திட்டா போல கிடக்கு…” மாறாத பதற்றத்துடனேயே சொல்லி முடித்தாள்.
வேலன் யோசனையில் அமைதியாயிருந்தான்.
“என்னவும் பேசாமலிருக்கிறியள்..? “
“அது வெறும் பெட்டகமாக இருக்கும்.. நகை காசெல்லாம் எடுத்திருப்பினம்…”
“இல்லையும்.. நான் திறந்து பாத்திட்டன். எல்லாம் அப்பிடியே கிடக்கு..”
அவள் சொன்னதை நம்ப முடியவில்லை என்பது ஒருபுறமும், பெண்களின் அறிதல் ஆர்வம் குறித்த எண்ணம் மறுபுறமாக வேலனை அமைதியாக்கியது.
அவனது அமைதியின் அர்த்தம் புரியாமல் தவித்த செல்லாச்சி அவளை உசுப்பினாள்.
“ அதை அப்படியே வைச்சிருக்கிறது நல்லதல்ல…” அவன் அமைதி கலைத்தான். அவன் சொல்வது சரிதான் என்பது போல செல்லாச்சியும் தலையாட்டினாள்.
“ விளக்கு வைச்சிட்டீரே…? “
“இல்ல..”
“ அப்ப உடன போய் பெட்டகத்த மூடித் தூக்கிற்று வாரும்..”
“வெளியாலையோ…?” அவள் கேள்வியில் நியாயம் இருந்தது. சின்னத்தம்பியர் அந்த வீடு கட்டிக் குடிபுகேக்க, அவள் சின்னப்பிள்ளை. ஆனாலும் அம்மாள் கோவில இருந்து, புது வீட்டுக்குப் படங்கள் எடுத்து வரும்போது, சின்னதம்பி, தலைப்பாக் கட்டோடு தலைக்கு மேல வைத்து அந்தப் பெட்டகத்தை தூக்கி வந்து பெரிய வீட்டுக்குள்ள கொண்டுபோன காட்சியை, தாயின் பின்னால் மறைந்திருந்தவாறு அவள் பாரத்திருந்தது நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அந்த நாளின் பின்னால் ஒரு போதும் அந்த மரப்பெட்டியை அவள் வெளியே கண்டாளில்லை. அதுவே அவள் கேள்வி.
“ஓம்…” ஏதோ முடிவுக்கு வந்தவன் போலச் சொல்லி விட்டு, திண்ணைக் குந்திலிருந்து சக்கர நாற்காலிக்குத் தாவினான் வேலன்.
“என்னச் செய்யப் போகுது இந்த மனுஷன்.. ?” தனக்குள் கேட்டவாறே பெரிய வீட்டுக்குள் சென்றாள் செல்லாச்சி. திரும்பி வரும்போது, , பெரிதும் இல்லை, சிறிதும் இல்லை எனச் சொல்லக் கூடிய அளவிற்கு இருந்த ஒரு மரப்பெட்டி அவளது கையில் இருந்தது. அதன் மேற்புறத்தில் பெரிய விபூதிக் குறியும், நடுவில் சந்தனமும், குங்குமமும் வட்டப் பொட்டாகத் தெரிந்தன.
சக்கர நாற்காலியில் இருந்தபடியே வேம்புக்குப் பக்கத்தில் குழியொன்றைத் தோண்டிக் கொண்டிருந்தான் வேலன். இப்போது அவனது நோக்கம் செல்லாச்சிக்குப் புரிந்துவிட்டது. தலைவாசல் குந்தில் பெட்டியை வைத்துவிட்டு, வேலனிடமிருந்து மண்வெட்டியை வாங்கி குழியை ஆழப்படுத்தினாள்.
அப்பால் நகர்ந்து, சென்ற வேலன் பெட்டியைத் திறந்து பார்த்தான். பெட்டிக்குள் நிரம்பிக் கிடந்தன தங்கநகைகள். மஞ்சுள் பூசிய பணத்தாள்கள் சிலவும், நெல்மணிகளும், மஞ்சளும் கிடந்தன. எப்போதோ வைத்துக் காய்ந்து போயிருந்த எலுமிச்சங் காயொன்று தன் பச்சையத்தை முற்றாக இழந்திருந்தது. அப்படியே சிலபூக்களும் சருகாகிக் கிடந்தன.அருகே வந்த செல்லாச்சியிடம் “எங்கயாவது ஒரு பேப்ரும் பேனையும் எடுத்து வாரும்..” என்றான். ஏன் என்ற கேள்வியை உள்ளுக்குள் ஒளித்துக் கொண்டு வெளியே தேடினாள் கிடைத்தது.
அவற்றை வேண்டிக் கொண்ட வேலன். “ வீட்டுக்க போய் தீருநீறும, சூடத்தட்டும் எடுத்து வாறீரே..? “ இப்போதும் செல்லாச்சி அவனிடம் எதுவும் கேட்காமல் பெரிய வீட்டுக்குள் போனாள். அவள் திரும்பி வருகையில் திறந்திருந்த பெட்டியை வேலன் மூடினான். மூடுவதற்கு முன்னால் வேலன் அதற்குள் எதையோ வைத்தது போல அவளுக்குத் தெரிந்திருந்தது.
“ என்ன வைச்சனியள்…?”
“ அது திறந்து பார்க்கேக்க.. பார்க்கிறவைக்குத் தெரிய வேண்டியது… “அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும் அதற்கு மேல் அவள் ஏனோ கேட்கவுமில்லை. அவள் எண்ணமும், கவனம், வேறாக இருந்திருக்க வேண்டும்.
சூடத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்திபோலக் காட்டிய பின், தட்டை செல்லாச்சியிடம் நீட்டிவிட்டு, பெட்டகத்தைத் தொட்டுக் கண்களை மூடிக் கும்பிட்டான்.
செல்லாச்சி ஆழப்படுத்திய குழியைப் பக்கத்தில் சென்று ஆழம் பார்த்தவன், திருப்தியடைந்தவனாக “ இங்க எடுத்து வாரும்… “ என்றான்.
செல்லாச்சி பெட்டியைக் கவனமாகத் தூக்கி வந்தாள். அதனை ஒரு பழைய உரைப்பையினால் வடிவாகச் சுற்றிக் கொண்டான் வேலன். பின் இருவருமாக அதனைக் குழிக்குள் இறக்கினார்கள்.
“அம்மாளாச்சி..! “ மெய்யுருகிய செல்லாச்சி, குழிக்குள் மண்ணைத் தள்ளி மூடத் தொடங்கினாள். அவளைத் தடுத்தான் வேலன்.
:கொஞ்சம் பொறும் ..” என்றவன் பின் வளவிற்கு மண்வெட்டியுடன், சக்கர நாற்காலியில் உருண்டோடினான். செல்லாச்சி குழிக்குள் கிடந்த பெட்டிக்குக் காவலாய் நின்றாள்.

“ இந்த இருட்டை எங்க போச்சுது இந்த மனுசன்..” என அவள் அலுத்துக் கொள்ளும் தறுவாயில், வேலன் திரும்ப வந்தான். அவனது கையில் சின்ன வாழைக்குட்டி ஒன்றிருந்தது.
“ இது என்னத்துக்கு..? “
“ இதில இந்தப் பெட்டிய வைச்சிருக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். தற்செயலாக நாளைக்கே எங்களுக்கு ஏதாச்சும் நடந்திட்டா அம்மாவைக்கு எப்பிடித் தெரியும்….?”
அவனது இந்தப் பேச்சு செல்லாச்சிக்குப் பிடிக்கவில்லை. அவள் அமைதிகாத்தாள்.
“ இந்த இடத்தில வாழைய நட்டு வைச்சா, நிலைமை சரியா வந்து, அவையளில ஆராவது திரும்ப வரேக்க இதில வாழை நின்டா, அவை யோசிப்பினம். வீட்டுக்கு முன்னலா வாழை நின்டா நல்லதில்லையென்டு அதைக் கிளப்புவினம். அப்ப பெட்டியக் கண்டுருவினம்.” ஒரு உற்சாகத்துடனேயே வேலன் தன் யோசனையச் சொன்னான்.
ஒரு வகையில் அவன் சொல்வது நியாயமாக இருந்தாலும், நாங்கள் ஏன் இல்லாமல் போவோம் என்பதிலேயே அவளது யோசனை இருந்தது. உற்சாகமற்ற தன்மை அவளின் ஐயத்தை வேலனுக்கு விளம்பியது.
“நீர் வித்தியாசமா யோசிக்காதையும். நாளைக்கே தம்பியவை வாகனங் கொண்டு வந்து, வெளிக்கிட்டுப் போனா, நாங்க திரும்பி வாறதுக்கு முந்தி அம்மாவை வந்திட்டினம் என்டா, பெடட்டகத்தைக் காணேல்லையென்டு சொல்லேக்க வீண்பழி கேக்க வேணும். இப்பிடி இருந்தா அது எப்பிடியும் தெரிய வரும்…” தன் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை, யோசனையாகவும் விளக்கமாகவும் சொன்னான் வேலன். அவன் சொல்வது நியாமாக இப்போது அவளுக்குத் தோன்றியது. இருவரும் சேர்ந்து நம்பிக்கையை வாழையாக வைத்தார்கள்.
“ இப்ப நீர் வீட்டுக்கு விளக்க வைச்சிட்டு வாரும்… “ செல்லாச்சியை திரும்பவும் பெரிய வீட்டுக்கு அனுப்பிய வேலன், வாழையைச் சுற்றி பாத்தி கட்டி ஒழுங்கமைக்க ஆரம்பித்தான்.
செல்லாச்சி விளக்கேற்றி விட்டு வந்தபோது, வாழை அநத் இடத்தில் நெடுநாட்களாக இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தான் வேலன். ஏதோ ஒரு பெரும் பொறுப்பை நிறைவேற்றிவட்ட திருப்தி அவன் முகத்தில்.
அன்றைய இரவு அந்த வாழை இரகசியத்தையும், அவர்களையும் ஆட்கொண்டது. அவர்களும் நாளை மீதான நம்பிக்கையுடன் இரவைக் கடந்தார்கள்.
எண்ணத்திலும், எதிர்பார்பிலும் இனிமையாக நிழலாடிய நம்பிக்கையை இருளினதும் வேலனதும் அரவணைப்பின் நெருக்கத்தில் செல்லாச்சி கேள்வியாகக் கிசுகிசுத்தாள்.
“ நாளைக்கு அவை வந்திருவினம்தானே…?”


- தொடரும்

அவளும் அவளும் – பகுதி 12

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction