free website hit counter

இளைஞர்களை திட்டமிட்டுப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசியக் கட்சிகள் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்கு பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில் தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, எனக்கு இதற்கான பதில்களை பேச வேண்டியிருந்தது. 

உண்மையிலேயே தமிழ்த் தேசியக் கட்சிகள் இளைஞர்களை அரசியலுக்குள் உள்வாங்குவதற்கு தயங்குகின்றனவா? என்றால் ‘இல்லை’ என்று பதிலளிக்கவே கட்சிகளின் தலைவர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள் முனைவார்கள். அதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகளில் உறுப்பினர்களாக இளைஞர்கள் இருப்பதை காட்டுவார்கள். ஆனால், இளைஞர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுவது என்பது உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகளில் சிலரை உறுப்பினராக்குவது மட்டுந்தானா?

தமிழ்த் தேசிய அரசியலின் உந்துவிசையாக எப்போதுமே இளைஞர்களே இருந்திருக்கிறார்கள். தந்தை செல்வாவுக்குப் பின்னால் தமிழ் மக்கள் திரள ஆரம்பித்தது என்பது இளைஞர்களின் கணிசமான பங்களிப்போடு நிகழ்த்தப்பட்டது. தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு என்றொரு வரலாறு உண்டு. வாலிபர் முன்னணி பல தலைவர்களை உருவாக்கியிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவர் மாவை சேனாதிராஜா கூட வாலிபர் முன்னணிக்கூடாக அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர்தான்.

அதுபோல, தனி நாட்டுக் கோரிக்கையை மூத்த அரசியல் தலைவர்கள் ஒரு தீர்வாக முன்வைத்து ஆக்ரோச வீர உரைகளை ஆற்றிய போது, அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் இளைஞர்கள். அதுதான், முப்பது ஆண்டுகளையும் தாண்டி ஆயுதப் போராட்டம் நிலைபெற்றதற்கும் காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலையீடு இருந்த காலம் வரையில்கூட இளைஞர்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. மூத்த தலைவர்களுடன் இளம் தலைவர்கள் அரசியல், இராஜதந்திர சந்திப்புக்களில் கட்டாயம் சேர்க்கப்பட்டார்கள். அப்படித்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒருகட்டம் வரையில் அடையாளம் பெற்றார். அவர், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் வாரிசு அரசியல்வாதியாக இருந்தாலும், அவரை இளம் தலைவராக முன்னிறுத்தியதில் புலிகளின் பங்கு கணிசமானது. அதுதான், முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான காலத்தில் கூட்டமைப்போடு அவர் முரண்பட்டபோது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கட்டுவதற்கான ஆதாரமாக அமைந்தது.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த பன்னிரண்டு ஆண்டுகளிலும்கூட தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்களில் பெரும் சக்தியாக, தேர்தல்களில் வாக்குகளாக திரள்வதும் இளைஞர்கள்தான். அண்மையில் நடைபெற்ற ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான போராட்டமும்கூட ஒருசில அரசியல்வாதிகளின் துணிச்சலான நகர்வோடு ஆரம்பித்தாலும், அது பெருந்திரளாக மாறி அடையாளம் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தன்னலம் நோக்காது பாடுபடும் இளைஞர்கள்தான். போராட்டங்களில் கூட்டமாக திரள்வதற்கும், தேர்தல்களில் பிரச்சாரங்களில் பங்களித்து வாக்குச் சேகரிப்பதற்கும் தேவைப்படும் இளைஞர்கள், அரசியல் முடிவுகளை எடுப்பது, அடுத்த கட்டங்களை திட்டமிடுதல் போன்ற செயற்பாடுகளில் கட்சிகளினால் தொடர்ச்சியாக தவிர்க்கப்படுகிறார்கள்.

சிலவேளை, இளைஞர்களின் பங்களிப்போடுதான் கட்சி அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவையோ, கஜேந்திரகுமாரோ, செல்வம் அடைக்கலநாதனோ அல்லது தர்மலிங்கம் சித்தார்த்தனோ வாதிடுவார்கள் என்றால் தேர்தல்கள், போராட்டங்களுக்கு அப்பால் இளைஞர்களை அரசியல் ரீதியாக இவர்கள் எங்கு முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு பதிலளிக்க வேண்டி வரும். மாவை வாலிபர் முன்னணிக்கூடாக வந்தவர். கஜேந்திரகுமார் இளைஞர் என்பதற்காக(வும்) முன்னிலைப்படுத்தப்பட்டவர். செல்வமும், சித்தார்த்தனும் ஆயுத இயக்கங்களில் இருந்து கட்சி அரசியலுக்கு வந்தவர்கள். ஆயுதப் போராட்டம் என்பதே இளைஞர்களுக்கான அடையாளந்தான். ஆனால், இவர்கள் யாரும் இளைஞர்களை முன்னிறுத்திய அரசியலை நடத்துவதற்கு தயாராக இல்லை. ஏனெனில், இளைஞர்கள் கட்சிகளுக்குள் முடிவெடுக்கும் நிலையை அடைந்தால், அது தங்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் என்று அஞ்சுகிறார்கள். அது மாத்திரமன்றி இரண்டாம் நிலைத் தலைவர்கள் உருவாகும் சந்தர்ப்பங்களையெல்லாம் திட்டமிட்டுத் தவிர்க்கிறார்கள்.

தமிழரசுக் கட்சியில் இன்றைக்கும் வாலிபர் முன்னணி தேர்தல் காலத்தில் ஒரு பலமான அங்கம்தான். ஆனால், அதிலுள்ள முக்கியஸ்தர்கள் கட்சிக்குள் முடிவுகளை எடுக்கக்கூடிய அல்லது அழுத்தங்களைச் செலுத்தக் கூடிய நிலையில் இல்லை. வாக்கு அரசியலுக்கான கட்டத்தில்தான் வாலிபர் முன்னணி கையாளப்படுகின்றது. வாலிபர் முன்னணிக்குள் சேர்க்கப்பட்டிருக்கும் கணிசமான இளைஞர்களுக்கு பரந்துபட்ட அரசியல் அறிவு என்பது இல்லை. பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களில் வாக்குச் சேர்ப்பதற்கு ஒருவர் உதவுவார் என்று கருதினால், அவருக்கு வாலிபர் முன்னணிக்குள் கொண்டுவந்து முக்கியத்துவம் வழங்கும் வழக்கத்தை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் மாவை அப்படியானவர்களையே அதிகம் வாலிபர் முன்னணிக்குள் கொண்டுவர நினைக்கிறார். கட்சியினதும் தலைவர்களினதும் செயற்பாடுகளை தர்க்கபூர்வமாக விமர்சிக்கும் இளைஞர்களை வாலிபர் முன்னணிக்குள் உள்வாங்குவதற்கான வாய்ப்புக்களை திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். தேர்தல் காலங்களில் வாலிபர் முன்னணி அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல காவாலித்தனமாக சேட்டைகளை புரிந்து கட்சியினது தோல்விக்கு காரணமானவர்களை தமிழரசுக் கட்சி, குறிப்பாக மாவை தன்னோடு இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழரசுக் கட்சிக்குள் அல்லது கட்சியின் முக்கியஸ்தர்கள் யாராவது இளைஞர்களுடனான திறந்தவெளிக் கலந்துரையாடல்களை நடத்தினால், அது தொடர்பில் மாவை அச்சப்படும் சூழல் காணப்படுகின்றது. ஒரு சமூகம் முன்னோக்கி பயணிப்பது என்பது இளைஞர்களின் கணிசமான பங்களிப்பில் தங்கியிருக்கின்றது. அப்படியான கட்டத்தில் தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியாக இன்னமும் இருக்கும் தமிழரசுக் கட்சி இளைஞர்களின் கருத்துக்களை, விமர்சனங்களை திறந்த மனதோடு எதிர்கொள்ளும் திறனோடு இருக்க வேண்டும். ஆனால், அதற்குப் தயாராக இல்லாமல், அனைத்துக்கும் பதவி, தேர்தல் பற்றிய அடையாளங்களைச் சுமத்தி விலத்தியோடுவது என்பது அயோக்கியத்தனமானது. தமிழரசுக் கட்சி அப்படியான நிலையிலேயே இருக்கின்றது.

கஜேந்திரகுமாரைப் பொறுத்தளவில், அவர் தன்னை எதிர்காலத்தில் பிரதான கட்சித் தலைவராக்க நினைக்கிறார். அத்தோடு, பொன்னம்பலங்களின் அடையாளம் என்பது என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார். பொன்னம்பலங்களின் மூன்றாம் தலைமுறை வாரிசாக அவர், தனது முன்னோர்களுக்காக செயற்படுவதை குறை சொல்ல முடியாது. ஆனால், அவர் தன்னையும் தன்னுடைய வாரிசு அரசியலையும் ஸ்திரப்படுத்துவதற்காக மாத்திரம் இளைஞர்களை கையாள்கிறார் என்பதுதான் அதிகப்படியான விமர்சனம். இந்த விமர்சனத்தை இந்தப் பத்தியாளர் கடந்த சில ஆண்டுகளாக முன்வைத்து வருகிறார். ஆனால், அப்போதெல்லாம், அதனை மூர்க்கமாக எதிர்த்து வந்த கஜேந்திரகுமார் ஆதரவு இளைஞர்கள் பெரும்பாலானோர், இன்றைக்கு அதே விமர்சனங்களை பொதுவெளியில் முன்வைக்கிறார்கள். அதாவது முன்னணி என்கிற போலி அடையாளத்துக்கு ஊடாக காங்கிரஸை வளர்ப்பதற்காக தங்களை பகடைக்காய்களாக கஜேந்திரகுமார் பயன்படுத்திவிட்டு, தேர்தலில் வென்றதும் தூக்கி எறிந்துவிட்டார் என்று அழுது புலம்புகிறார்கள். முன்னணிக்குள் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாவதையே கஜேந்திரகுமார் விரும்பவில்லை. அதுதான் மணிவண்ணனை வெளியேற்றக் காரணம் என்கிறார்கள். அத்தோடு, இன்றைக்கு முன்னணியில் இருந்து வெளியேறிய இளைஞர்களை நோக்கி ரவுடிக்கூட்டம் என்கிற அடையாளம் கஜேந்திரகுமார் அணியினால் வழங்கப்படுகின்றது. அதனைக் காணும் போது, தேர்தல் மைய அரசியல்வாதிகளின் அப்பட்டமான முகம் தெரிகின்றது.

செல்வத்துக்கோ, சித்தார்த்தனுக்கோ தங்களது கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற எந்தவித எண்ணமும் இல்லை. தங்களது காலம் முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதற்கான வாய்ப்புக்களை எப்படி தக்க வைப்பது என்பது மட்டுமே அவர்களது ஒற்றை இலக்கு. அவர்கள் தலைமையேற்றிருக்கும் கட்சிகளில் புதிதாக இளைஞர்கள் யாரும் சேருவதில்லை. அண்மைக்காலத்தில் சேர்ந்திருப்பதாக அடையாளப்படுத்தப்படும் இளைஞர்கள் பெரும்பாலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களாக இருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் ஆசனங்களுக்காக ரெலோவுக்கும், புளொட்டுக்கும் சென்றவர்கள். அவர்களும்கூட தங்களை கூட்டமைப்பு அடையாளத்துக்குள் பேணவே முயல்கிறார்கள். செல்வம் மன்னாரின் கத்தோலிக்க வாக்குகளிலும், சித்தார்த்தன், தந்தையார் தர்மலிங்கத்தின் பெயருக்காக விழும் வாக்குகளிலும் தங்கியிருப்பவர்கள். அவர்களுக்கு தங்கள் காலத்துக்குப் பின்னரான எந்தவித அரசியல் எதிர்பார்ப்பும் இல்லை. அவர்களிடம் இளைஞர்களுக்கான அரசியல் பற்றி உரையாடுவது எல்லாம் வீணானது.

இன்னொரு முக்கியஸ்தர் இருக்கிறார், தன்னுடைய எழுபது வயதுகளில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வந்த சி.வி.விக்னேஸ்வரன். அவரும் தன்னுடைய காலம் பூராவும் பதவியோடு இருப்பதற்கான ஏற்பாடுகளில் மாத்திரம் கவனம் செலுத்துபவர். அவரது கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர்கள் என்று ஒருவர் கூட இல்லை. அப்படி அடையாளப்படுத்தப்படுவதைக்கூட அவர் விரும்புவதில்லை. ‘சர்வமும் தானே, தன்னை மீறி யாருமில்லை’ என்கிற நினைப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவர். அவரிடத்திலும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு குறித்து எதிர்பார்க்க முடியாது.

இவர்களுக்கு எல்லாமும் முன்னோடியான இரா.சம்பந்தன் பற்றி இந்தப் பத்தியில் எழுதப்படவில்லை. ஏனெனில், வயது மூப்பின் காரணமாக அவர் தளர்ந்திருக்கிறார். இன்றைக்கும் கூட்டமைப்பின் தலைவராக அவர் இருந்தாலும் முடிவுகளை எடுக்கும் கட்டத்தில் இல்லையென்று சொல்லலாம். அவரிடத்தில் இனி இளைஞர்கள் பற்றி பேசுவதால் எந்தப் பயனும் இல்லை.

தமிழ்த் தேசிய அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது தேர்தல் நோக்குக்குள் மாத்திரம் சுருக்கப்படாமல், அரசியல் இராஜதந்திர ஊடாடல் கட்டங்களில் பங்களிக்கும் அளவுக்கு வலுப்படுத்தப்பட வேண்டும். அதுதான், எதிர்காலத் தலைவர்களை பரந்துபட்ட அறிவோடு வளர்ப்பதற்கு உதவும். ஆனால், அதற்கான வழிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளே அடைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் வேதனையானது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction