free website hit counter

கருப்பையை அகற்றும் ஏழைப்பெண்கள்! கண்ணீர் பின்னணி !

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாதவிடாய் காரணமாக, தங்களால் பணியை இடையூறு இன்றி பெண்களால் செய்ய முடியவில்லை. இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது என்பதற்காகக் கருப்பையையே அகற்றி விடுவதாக அதிர்ச்சித் தகவல்கள் செய்திகளாக வெளியாக மகாராஷ்டிர மாநிலத்தின் மகளிர் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் கிராமத்துப் பெண்கள் பணிக்கு இடையூறாக மாதவிடாய் இருப்பதாலும் இதனால் பணிக்குச் செல்ல முடியாமல் ஊதிய இழப்பு, அபராதங்கள் கட்ட நேரிடுவதாலும் கருப்பையையே அகற்றி விடுகின்றனர். இந்த அவலம் குறித்து தி இந்து பிசினஸ் லைனில் அதிர்ச்சி செய்தி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மகளிர் ஆணையம் பீட் மாவட்ட அதிகாரிகளுக்கு விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.

பெரும்பாலும் கரும்புக் கூலிகளாக இருக்கும் இந்த ஏழைப்பெண்கள் கருப்பையை நீக்க ஒப்பந்ததாரர்கள் முன் பணம் கொடுக்க, மருத்துவ முறை தவறல்களுடன் இந்தக் கொடுமை மராத்வாதா ஏழைப் பெண்களின் சுரண்டலுக்கு வித்திட்டுள்ளது.

இந்தச் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறியுள்ள மகளிர் ஆணையம், தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்த்தப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளது.

 

2 - 3 குழந்தைகளுக்குப் பிறகு கருப்பையைப் பெண்கள் அகற்றுவது கிராமங்களில் சகஜம் என்று கூறப்பட்டாலும், கருப்பையை அகற்றுவதினால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுத் தேய்ந்து போதல் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை, இது அபாயகரமானது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இதனையடுத்து இதனைக் கண்டுபிடித்து உண்மையை வெளிகொண்டு வந்து காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணையின் ஒவ்வொரு படியையும் தங்களுக்குத் தெரிவிக்கவும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாயன்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், மகாராஷ்ட்ரா தலைமைச் செயலர் யு.பி.எஸ். மதனுக்கு நோட்டீஸ் அனுப்பி உடனடியாக இதில் தலையிட்டுச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். பணிக்குச் செல்லும் ஏழை கிராமப்புறப் பெண்களின் வேதனையை அதிகரிக்கும் இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது என்று மகளிர் ஆணையம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளது.

'தி இந்து பிசினஸ் லைன்' ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்திய விவரங்களின் கொடூரமான பக்கங்கள் இதோ: 15 - 16 வயதிலேயே திருமணம் நடந்து விடுகிறது. வறட்சிப் பகுதியான மராத்வாதா பெண்கள் அடுத்த 2 ஆண்டுகளில் தாயாகி விடுகின்றனர். 22 - 23 வயதில் கருப்பையை அகற்றிக் கொள்கின்றனர். அதன் பிறகு கரும்புக் கூலிகளாக இருக்கும் இவர்கள் வாழ்நாள் முழுதும் கூலி வேலையை இடையூறு இல்லாமல் செய்து வருகின்றனர்.

மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாகப் பணிக்கு வர முடியாத நாட்களுக்குச் சம்பளம் இல்லை, மேலும் அபராதங்களையும் ஒப்பந்ததாரர்கள் வசூலித்து விடும் அராஜகம் இருந்து வந்ததால் கருப்பை இருந்தால்தானே மாதவிடாய் சிக்கல், அகற்றி விடுவோம் என்று முடிவு எடுக்கின்றனர், இதற்கு ஒப்பந்ததாரரே முன் பணம் கொடுக்கும் அவலங்களும் தொடர்கதையாகி வந்துள்ளது. இந்த முன் பணம் இவர்கள் கூலியில் பிடித்தம் செய்யப்படும்.

இதோடு பணப்பேய் மருத்துவ உலகமும் ஒப்பந்ததாரர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சட்ட விரோதமாகக் கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சைகளைச் செய்து வருகின்றனர். அதாவது வெள்ளை அல்லது சிகப்புப் போக்கு புற்று நோயின் அறிகுறி என்று கூறி பயமுறுத்திக் கருப்பையை அகற்றுவதுதான் சிறந்தது என்று பரிந்துரைத்து இந்த அக்கிரமங்களைச் செய்ததாக 'தி இந்து பிசினஸ் லைன்' அதிர்ச்சி ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. கருப்பையுடன் ஓவரியும் கூடச் சேர்ந்து அகற்றப்படுவதும் கிராமம் கிராமமாக நடைபெற்று வருவதும் அம்பலமானது.

மேலும் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அவர்களுக்குப் போதிய ஓய்வும் அளிப்பதில்லை. சதா வேலை, வேலை என்று உழைக்க வைத்துச் சுரண்டப்படுகின்றனர். இத்தகைய பெண்களின் கணவன்மார்களும் மனைவியின் வேலை எந்த விதத்திலும் தடைபட்டு விடக்கூடாது என்பதில் சுரண்டலுடன் கைகோர்த்துள்ள அவலமும் நடந்து வருகிறது. கருப்பையை அகற்றிய பிறகு அவர்கள் ‘பெண்கள் இல்லை, வேலை செய்யும் எந்திரம்’ என்று சமூக ஆர்வலர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction