free website hit counter

விக்கி எனும் அறமற்ற அரசியல்வாதி! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 

சித்திரைப் பிறப்புக்கு முதல் நாள் சமூக ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் பேட்டியளித்தார். வழக்கம் போலவே, அந்தப் பேட்டியும் முன்னதாகவே கேள்வி- பதில்கள் தயார்ப்படுத்தப்பட்டு, அதன் பிரதிகளை வைத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, ஏற்கனவே தயார்ப்படுத்தப்பட்ட கேள்விகளை நெறியாளர் கேட்டதும், அதற்கு பதில்களை பிரதித் தாள்களைப் பார்த்து விக்னேஸ்வரன் வாசிப்பார். அப்படித்தான் அந்தப் பேட்டியும் போய்க் கொண்டிருந்தது. ஆனால், வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பிலான கேள்விக்கு விக்னேஸ்வரன் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பதில்களுக்குப் பதிலாக அந்தத் தருணத்தில் தோன்றிய பதிலை வழங்கியது போன்ற தோற்றம் காணப்பட்டது.

அந்தப் பதில், “…முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராஜா தகுதியற்றவர். அதனால்தான், 2013இல் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னை முன்னிறுத்தினார். வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமியை முன்னிறுத்தலாம். அனைத்துக் கட்சிகளும் இணைந்து கோரிக்கை விடுத்தால் மீண்டும் நான் முதலமைச்சர் வேட்பாளராகுவது குறித்து சிந்திப்பேன்...” என்றவாறாக இருந்தது.

அடிப்படை அரசியல் நாகரீகம், அறம் பற்றிய எந்தவித எண்ணமும் இல்லாத ஒருவராக விக்னேஸ்வரன், தேர்தல் அரசியலுக்கு வந்த காலம் முதல் நிரூபித்து வந்திருக்கிறார். அத்தோடு, அவர் நேரடி அரசியலுக்கு வந்து சுமார் எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அவர் இன்னமும் முன்பள்ளி சிறார்களின் நடவடிக்கைகளுக்கு ஒப்பான அரசியல்வாதியாகவே இருக்கிறார். அரசியல் உரையாடல்களில் அவர் ஏற்கனவே தயார்ப்படுத்தப்பட்ட உரைகள், கேள்வி- பதில்கள் இல்லையென்றால் தடுமாறிவிடுவார். அப்படியான பல சந்தர்ப்பங்களில் உளறிக்கொட்டி தன்னுடைய உண்மையான அரசியல் அறிவின் அளவு எப்படி என்று நிரூபித்திருக்கின்றார். மாவை குறித்த ‘முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்’ என்கிற கூற்றும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

அரசியல்வாதிகளோ, பேச்சாளர்களோ யாராக இருந்தாலும் ஏற்கனவே தயார்ப்படுத்தப்பட்ட உரைகளை ஆற்றுவது குறித்து இந்தப் பத்தியாளருக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை. அப்படியான உரைகள் பல நேரங்களில் நேர்த்தியாக அமையும். ஆனால், ஓர் அரசியல்வாதி அல்லது சமூகத்தின் தலைவனாக தன்னை முன்னிறுத்தும் ஒருவர் கேள்விகளுக்கான பதிலை உடனடியாக வழங்கும் வன்மையோடும் இருக்க வேண்டும். அது, மக்களின் மனங்களை பிரதிபலிப்பதனூடும், அரசியல் மாற்றங்களை உள்வாங்கி சமயோசிதமாக சிந்திப்பதனூடும் வருவது. அது சிலருக்கு இயல்பாக வாய்க்கும். இன்னும் சிலரோ படிப்பினைகள் மூலம் அதனை வளர்த்துக் கொள்வார்கள். ஆனால், விக்னேஸ்வரனுக்கு அது இயல்பிலும் இல்லை. இல்லாத ஒன்றை அவர் வளர்த்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அதுதான், அவரின் முன்பள்ளி அரசியல் நடவடிக்கைகளுக்கு காரணம்.

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக எண்பது வயதுகளை அண்மிக்கும் மாவை சேனாதிராஜா முன்னிறுத்தப்பட்டால், அதனை இந்தப் பத்தியாளர் கடுமையாக விமர்சிப்பார். ஏற்கனவே ஒரு தடவை வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றி ஏதும் செய்யாது கோட்டைவிட்ட பெருமை கூட்டமைப்பிற்கு இருக்கிறது. அப்படியான நிலையில், அரசியல் தூரநோக்கும், நிர்வாக அனுபவமும் உள்ள ஒருவர், குறிப்பாக வயது மூப்பினால் அல்லாடாத ஒருவர் கூட்டமைப்பினால் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும். அதன்மூலம், செயற்திறனுள்ள மாகாண சபையை கட்டமைக்க வேண்டும். மாறாக, பதவிகளுக்காக அங்கலாய்க்கும் தரப்புக்களினால் ஆக்கிரமிக்கப்படும் மாகாண சபையொன்று இனியும் உருவாகக் கூடாது.

முதலமைச்சர் கனவு மாவை சேனாதிராஜாவுக்கு பலகாலமாக உண்டு. கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோற்றதும், அவரை முதலமைச்சர் கனவுக்குள் பல தரப்புக்களும் சேர்ந்து மூர்க்கமாக தள்ளின. குறிப்பாக, அவரோடு சேர்ந்து கடந்த தேர்தலில் தோற்றுப்போனவர்களும், அவரை முதலமைச்சர் கதிரையில் ஒப்புக்கு இருந்திவிட்டு, மாகாண சபையை தாங்கள் ஆக்கிரமிக்கலாம் என்று காத்திருக்கும் சில குள்ள நரிகளும். 2013 காலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை முன்மொழியப்பட்டிருந்தால் அது ஓரளவுக்கு வரவேற்கப்பட்டிருக்கும். அதன் மீதான விமர்சனங்கள் பெரியளவில் எழுந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால், தற்போதுள்ள நிலையில், உடல்நிலை, வயது மூப்பு அத்தோடு குடும்ப அரசியல் ஒன்றுக்கான ஆர்வம் உள்ளிட்ட விடயங்கள் அவரை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்துவதில் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. அத்தோடு, கடந்த சில ஆண்டுகளாக அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த போதிலும், கட்சியை கட்டுக்கோப்பாக பேணாத நிலையில், அவர் தலைமையில் அமையும் மாகாண சபைக்குள், அதன் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எப்படி கட்டுப்படுவார்கள் என்ற கேள்வி முக்கியமானது?

இந்தப் பத்தியாளரைப் பொறுத்தளவில், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து வயது மூப்பினால், குறிப்பாக நாளாந்த அரசியல் நடவடிக்கைகளை மற்றவர்களின் உதவியின்றி செய்ய முடியாத நிலையில் இருக்கின்ற அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தல் மைய அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டு கட்சிகளின், அமைப்புக்களின் போசகர்கள் நிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட யாரும் விதிவிலக்கல்ல. மக்கள் நலன் சார் அரசியலில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தல் என்பது ஒரு தார்மீகமாகும். ஆனால், அந்தத் தார்மீகத்தை தந்தை செல்வாவுக்குப் பிறகு எந்தத் தமிழ்க் கட்சியின் தலைவரும் செய்யவில்லை என்பது வெட்கக் கேடானது. அதில், பல தலைவர்களும் அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாகுவதையே தடுத்துக் கொண்டிருப்பவர்கள். அதில் சம்பந்தன் ஓரளவுக்கு பொறுப்புடன் இருந்திருக்கின்றார். அடுத்த தலைமுறைத் தலைவர்களாக ஒரு சிலரை அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், விக்னேஸ்வரனைப் பொறுத்தளவில் தன்னுடைய எழுபது வயதுகளின் பின்னில் கட்சியை ஆரம்பித்த அவர், அவரது கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர் என்று ஒருவரைக்கூட இதுவரை அடையாளப்படுத்தவில்லை. மாறாக, ஏகமும் தானே என்கிற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார். அப்படியான நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களின் தகுதி குறித்து கருத்துக்கூற முனைகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு ஒரு தொகுதி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனை மதிக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். ஆனால், அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புரிந்து கொள்ளாமல், தனியாவர்த்தனம் செய்து குட்டையைக் குழப்பும் வேலையை மாத்திரம் விக்னேஸ்வரன் செய்து கொண்டிருக்கும் போது, அவரின் அரசியலுக்கான தகுதி குறித்து மற்றவர்களும் கருத்துக்கூற விளைவார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில் சிறிய இடைவெளியொன்றை நிரப்பிக் கொண்டிருக்கும் ஒருவர் என்கிற அளவைத் தாண்டி, விக்னேஸ்வரனது அரசியல் ஆளுமை தொடர்பில் பட்டியல் இடுவதற்கு ஏதுமில்லை. கடந்த காலத்தில் அவரைச் சுற்றி ஒளிவட்டங்களைக் வரைந்தவர்களும், ஜனவசியக் கட்டுரைகளை எழுதியவர்களும் கூட இன்றைக்கு அவரை ஒரு வேண்டாத அரசியல்வாதியாகவே நோக்குகிறார்கள்.

தன்னுடைய நீதியரசர் ஓய்வு காலத்தை கொழும்பு கம்பன் கழக மேடைகளில் கௌரவமாக கழித்துக் கொண்டிருந்த விக்னேஸ்வனை, வடக்கு அரசியலுக்கு அழைத்து வந்து சம்பந்தனும் சுமந்திரனும் தவறிழைத்தார்கள். அந்தத் தவறு சரி செய்யப்படும் வாய்ப்புக்கள் அமைந்த போது, யாழ். மையவாத கும்பலொன்று தமிழ் மக்கள் பேரவையை அமைத்து விக்னேஸ்வரனுக்கு வாழ்வளித்தது. அது அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது. ஒவ்வொரு கட்டத்திலும் விக்னேஸ்வரனை தாங்கி நின்றவர்கள், அவரை காப்பற்றினார்கள். ஆனால் அவர் யாரையும் காப்பாற்றவில்லை. மாறாக, தோள்களில் சுமந்து சிகரத்தில் ஏற்றியவர்களின் முகத்தில் குத்தும் வேலைகளையே தொடர்ந்தும் செய்து வந்தார். அதன் வெளிப்பாடே ‘மாவைக்கு தகுதியில்லை’ என்கிற அவரது எண்ணமும். 2013இல் மாவை விக்னேஸ்வரனுக்கு வழிவிட்டிருக்காது விட்டால், விக்னேஸ்வரன் இன்னமும் கொழும்பில் ஏதாவது மேடையில் ஒரு பிரசங்கியாக இருந்திருப்பார். சிலவேளை, அவர் அதில் நன்றாக செயற்பட்டிருக்கக் கூடும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction