தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்ஷக்களே’ என்று முழங்கி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில், இந்தச் சக்திகள் ஏற்றின.
ஆனால், அடிப்படைவாத சக்திகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி, சீனாவின் செல்லப்பிள்ளைகளாக நடப்பதை, ராஜபக்ஷக்கள் தமது தலையாய கடமையாக இன்றைக்கு வரிந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான், ராஜபக்ஷக்களுக்கும் தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இலங்கையைத் தன்னுடைய கொலனியாக மாற்றுவதற்கான சீனாவின் நீண்டகாலத் திட்டமிடல் என்ற கருத்துகளை, தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளும் உள்வாங்கிப் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றன. கொழும்புத் துறைமுக நகருக்கான சிறப்புச் சட்டமூலம், இலங்கையில் இருந்து துறைமுக நகரை இன்னொரு நாடாகப் பிரகடனப்படுத்தும் அளவுக்கான அதிகாரங்களை வழங்குவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றன.
துறைமுக நகருக்கான ஆணைக்குழு ஒன்று மாத்திரமே, இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு தொடர்பாடலாக இருக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. அதுவும், ஜனாதிபதி நினைத்தால், துறைமுக நகருக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக வெளிநாட்டினரை நியமிக்க முடியும் என்கிற அதிகாரங்களையும் குறித்த சட்டமூலம் வழங்குகின்றது.
அப்படியான நிலையில், ஏற்கெனவே சீனாவின் செல்லப்பிள்ளைகளாக, அவர்களின் சொற்படி ஆடிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷக்கள், சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவுக்கும் சீனப் பிரதிநிதிகளையே நியமித்து, துறைமுக நகரைத் தனிநாட்டுக்குரிய அதிகாரங்களோடு சீனாவிடம் வழங்கிவிடும் வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.
துறைமுக நகரச் சிறப்புச் சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்ற வழக்கொன்றில், ஜனாதிபதி செயலாளரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, “இலங்கை அரசியலமைப்பில், நாட்டின் பிரதம நீதியரசராக இலங்கையர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்கிற கோடிடல்கள் இல்லை. எனவே, வெளிநாட்டினர் ஒருவரைக் கூட நியமிக்கலாம்” என்று வாதிட்டிருக்கின்றார். அதன்மூலம், துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு எந்தத் தரப்பினரையும் நியமிக்க முடியும் என்ற தொனிப்பட பேசியிருக்கின்றார். இப்படி, நீதிமன்றத்தில் தன்னுடைய வாதங்களை முன்வைத்த ரொமேஷ் டி சில்வாவைத்தான், ராஜபக்ஷக்கள் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான குழுவின் தலைவராக நியமித்து இருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையைப் பிரிவினைவாதக் கோரிக்கையாக தென் இலங்கை பூராவும் கொண்டு சேர்ந்ததில் தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளுக்கு முக்கிய பங்குண்டு. “ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு என்கிற விடயத்தை முன்வைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றார்கள். இதன்மூலம், இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் எதிர்பார்க்கும் தனி நாட்டை, மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கப்போகிறார்கள்” என்று ராஜபக்ஷக்களின் ஏவலாளிகளாக நின்று, நல்லாட்சிக் காலத்தில் இந்த அடிப்படைவாத சக்திகள் முழங்கின.
ஆனால், நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட அரசியலமைப்புக்கான யோசனைகளில், தமிழ் மக்கள் எதிர்பார்த்த சமஷ்டி அதிகாரம் என்பது ஒப்புக்காகக்கூட வழங்கப்படவில்லை. மாறாக, தற்போதுள்ள மாகாண சபையை ஒத்த ஒரு கட்டமைப்புப் பற்றியே பேசப்பட்டது என்பது, அனைவருக்கும் தெரிந்த உண்மை. பௌத்த பீடங்கள் தொடங்கி, தென் இலங்கையின் அனைத்துச் சக்திகளும், புதிய அரசியலமைப்பு யோசனைகளை முன்வைத்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான நிலையை எடுத்தன.
அதுபோல, ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்கிற நிலைப்பாட்டின் ஊடாகத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் பாரம்பரிய நிலைப்பாடுகள் சார்ந்த, சில சட்ட அனுமதிகளை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்றும் ராஜபக்ஷக்களோடு சேர்ந்து நின்று, இந்த அடிப்படைவாத சக்திகள் திட்டமிட்டன. குறிப்பாக, முஸ்லிம்களின் திருமணச் சட்டத்தை அகற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டன. அதை ஒரு பிரிவினைவாதத்துக்கு எதிரான போராக, அந்தச் சக்திகள் தென் இலங்கை பூராகவும் பிரசாரம் செய்தன.
ஒரு நாட்டின் இறைமை என்பது, அந்த நாட்டின் மக்களுக்கானது. மாறாக, அது ஆட்சியாளர்களுக்கு உரித்தானது அல்ல. அப்படியான கட்டத்தில், நாட்டு மக்களின் இறைமையை, இன்னொரு நாட்டிடம் அடகு வைக்கும் வேலைகளில் ராஜபக்ஷக்கள் ஈடுபடுகிறார்கள். நாட்டின் ஒரு தரப்பின் பாரம்பரிய சட்டங்களின் மீதே, ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற பெயரில் அத்துமீறல்களை நடத்திய சக்திகள், இன்றைக்கு நாட்டு மக்களின் இறைமை இன்னொரு நாட்டிடம் எந்தவித அனுமதியும் இன்றி அடகு வைக்கப்படும் சூழலை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறுகின்றன.
கொழும்புத் துறைமுக நகருக்கான சட்டமூலத்தில், குடிவரவு - குடியகல்வு விடயங்களை, துறைமுக நகரமே கொண்டிருக்கும். அதாவது, இலங்கையின் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்துக்கும் துறைமுக நகருக்குள் வந்து செல்லும் எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜைக்கும் சம்பந்தமில்லை என்பது, தனி நாட்டுக்கான உரித்துக்கான எளிய சான்று.
2001 -2004 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் செய்த அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகள், துரோகியாகப் பிரிவினைக்கு ஒத்துழைத்த தலைவராகக் காட்டின. அதனை முன்வைத்தே, ராஜபஷக்களுக்கான முதலாவது ஆட்சிக்காலம் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அதே ரணில், “வடக்கில் பிரபாகரன் ஆளுகை செலுத்திய பகுதிகளைவிட, கொழும்புத் துறைமுக நகர், அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது; அது தனிநாட்டுக்கு ஒப்பான ஒன்று” என்று கூறுகிறார்.
சிங்கப்பூர் போன்று, துறைமுகங்களைப் பிரதானப்படுத்தி தெற்காசியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொழும்பை மையப்படுத்தி ஆரம்பிக்க வேண்டும் என்கிற யோசனையின் சொந்தக்காரர் ரணில். அவரின் 2001- 2004 ஆட்சிக் காலத்தில் அதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவர் பதவியிழந்ததும், கொழும்புத் துறைமுக நகர் திட்டத்தோடு சீனா, ராஜபக்ஷக்களை ஆட்கொண்டது. இன்றைக்கு அதன் திட்டங்களை ஒவ்வொரு கட்டமாக, சீனாவின் கட்டளைகளுக்கு அமைய ராஜபக்ஷக்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக, சீன இளைஞர்கள் யுவதிகள், இலங்கையின் பெருமைகளை சிங்களத்தில் பேசுவது, காலாசார நடனங்கள் ஆடுவது என்று காணொளிகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கின்றன. அதன்மூலம், தென் இலங்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்திருக்கின்ற துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிரான அலைகளை அடக்க முடியும் என்று சீனாவும், அதன் ஏவலாளிகளும் நினைக்கின்றன.
கொரோனா வைரஸின் பெருந்தொற்று அச்சுறுத்தல் என்பது, நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் என்றைக்கும் இல்லாத அளவுக்குப் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இப்படியான நெருக்கடியான நிலையில், அதைக் காட்டிலும் மாபெரும் அச்சுறுத்தலான விடயத்தைக் கொழும்புத் துறைமுக நகரச் சட்டமூலத்தின் மூலம், ராஜபக்ஷக்கள் நாட்டுக்கு வழங்கத் துணிந்திருக்கிறார்கள். அதன் மீதான அதிருப்திகள், விமர்சனங்களைக் கடப்பதற்காக, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனவாத - மதவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ரிஷாட் பதியூதின் உள்ளிட்டவர்களைக் கைது செய்தமையும், புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளுக்கான தடைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியமையும் அதன் உதாரணங்களாகக் குறிப்பிட முடியும்.
ஆட்சி அதிகாரத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் கையிலெடுக்கும் எந்தத் தரப்பும், அடிப்படையில் அறமற்ற தரப்புகளே ஆகும். ஆட்சி அதிகாரத்தை அடைந்ததும் அந்தத் தரப்புகள், தங்களது அதிகாரத்தைத் தக்க வைக்கவும், தங்களது தவறுகளை மறைக்கவும் அந்த இனவாத - மதவாதத் தீயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றன.
அதைத் தாண்டி, நாட்டின் பாதுகாப்புக்காகவோ, முன்னேற்றத்துக்காகவோ எந்தவொரு தரப்பும் இனவாதத் தீயைக் கையிலேந்தத் துணியாது. ராஜபக்ஷக்களுக்காக இனவாத - மதவாதத் தீயைக் கையிலேந்தியவர்கள், இன்றைக்கு நாட்டைச் சீனாவின் கொலனியாக மாற்றுவதற்குப் பங்களித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்! அவர்கள் தங்களின் பித்தத்தைப் போக்குவதற்காக, தின்பதற்கு இங்கு ஏதுமில்லை.