free website hit counter

என்னவாகப் போகிறார் எடப்பாடி

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  விடுதியில் அதிமுக எம்.ஏல்.ஏக்கள் அனைவரின் கடிதங்களையும் சசிகலா வாங்கிக்கொண்டபிறகு, முதலமைச்சர் பதவியை முதலில் இன்றைய தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கே கொடுக்க விரும்பினாராம் சசிகலா.

ஆனால், சசிகலாவுக்கு 800 கோடியும் ஒரு எம்.எல்.ஏவுக்கு 1 கோடியும் 1050 கொடி கொடுத்தே எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை விலைக்கு வாங்கியதாக’என்று அப்போது தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் வார இதழ்கள் எழுதின. இந்த 1050 கோடி ரூபாயை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 15 ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி காண்ட்ராக்டர்களிடமிருந்து திரட்டுவது எளிதாக இருந்தது என்றும் அதே பத்திரிகைகள் எழுதின. முதலமைச்சர் பதவிக்குக் கொட்டிக்கொடுத்த இந்தக் கோபத்தை சசிகலாவிடம் காட்டவே, கட்சியைக் கைப்பற்றி, அவரை கட்சியிலிருந்தே தூக்கி அடித்தார் என்கிறார்கள். இதற்காக 25 எம்.ஏல்.ஏக்களின் ஆதரவைக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸை சாணக்கியத் தனதுடன் துணை முதல்வர் ஆக்கி தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். அதிலிருந்தே எடப்பாடியின் சாதூர்யம் தமிழக அரசியலில் விளங்கத் தொடங்கியது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகான நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் ஊழல் பெரு ஆறாகப் பெருகெடுத்து ஓடினாலும், கோரானாவிலும் பெரும் ஊழலைச் செய்தாலும் அதையெல்லாம் மக்கள் கண்டுகொள்ளமால் இருக்க, ரேஷன் அட்டை வழியாக இரண்டுமுறை பணப் பட்டுவாட செய்தார். அந்தக் வகையில் சாமனிய மக்களையும் ஊழலில் பங்குதாரர்களாக சேர்ந்துக்கொண்டார் எடப்பாடி என்பதுதான் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களின் கருத்து. தேர்தல் அறிக்கையிலோ, மக்களை முட்டாள் ஆக்கும்விதமாக பல இலவசங்களை அறிவித்திருக்கிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால், தனி நீதிமன்றம் ஊழல் வழக்குகளை தங்கள் மீது திமுக போடும் என்பதை மனதில் வைத்தே, தங்கள் தேர்தல் அறிக்கையை வடிவமைத்தது அதிமுக.

இதுவொருபக்கம் என்றால் கூட்டணி அமைப்பதிலும் எடப்பாடி தனது திறமையைக் காட்டத் தவறவில்லை. அரசியலில் பழுத்த பழமாக இருந்த கருணாநிதியே, 2016-ல் தேமுதிக தங்கள் அணிக்கு வரவில்லை என்றதும் சோர்ந்து போனார். தேர்தலுக்கு முன்பே திமுகவின் தோல்வியை ஒப்புக்கொண்டது போலவே இருந்தது அவரது பிரச்சார முறை. இதைக் கவனித்து, “நீங்கள் மற்ற கட்சிகளுக்குப் போடும் ஓட்டுக்கள் அனைத்தும் வீணாகிவிடும். எனவே, வெற்றிபெறும் எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று பேசி, வாக்குகளைக் கவர்ந்தார் ஜெயலலிதா. ‘பத்து ஆண்டுகளாக ஒரே ஆட்சி என்பதால் மக்களுக்கு ஏற்படுகிற சலிப்பு, எதிர்விளைவுகளை மட்டுமே தருகிற பாஜக கூட்டணி, வெற்றி நிச்சயமல்ல’ என்று திசையெட்டும் இருந்தும் வருகின்ற கருத்துக்கணிப்புகள் என்று பல பலவீனங்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி களத்தில் துணிந்து நிற்கிறார்.

அதிமுக -பாஜக கூட்டணியில் அத்தனை மாவட்டங்களுக்கும் போய்ப் பிரச்சாரம் செய்யும் ஒரே பேச்சாளராக வலம் வந்து முடித்திருக்கிறார் எடப்பாடி. அசுரத்தனமாக 234 தொகுதிகளையும் அவரது பிரச்சார வாகனம் சளைக்காமல் சுற்றிவந்து விட்டது. பல இடங்களில் பகல் 12 மணி, மாலை 3 மணிக்குக் கூட கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு இடத்திலும் 20 நிமிடத்துக்குக் குறையாமல் பேசிய அவர், உள்ளூர்ப் பிரச்சினைகளையும் மறக்காமல் தொட்டுப் பேசி வாக்காளர்களைக் கவர்ந்தார். மதுரை கிழக்கில் பேசியபோது, ‘வீடு தேடி வந்து உங்கள் குறைகளைத் தீர்க்கிற எம்எல்ஏ வேண்டுமா? அல்லது வீடு புகுந்து உங்களைத் தாக்குகிற எம்எல்ஏ வேண்டுமா? இங்கே போட்டியிடும் திமுக வேட்பாளர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்குத் தெரியும்’என்று போட்டுத் தாக்கினார் முதல்வர். கூடவே, திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டு, நில அபகரிப்பு, கடைகள் சூறையாடல் போன்ற சம்பவங்களையும் நினைவுபடுத்தினார். திமுகவினர் ரவுடிகளைப் போல கடை கடையாகச் சென்று மாமுல் வசூலித்ததாகவும் குற்றம்சாட்டியவர், ‘அமைதியாக நீங்கள் உழைத்து, உங்கள் உழைப்பில் சாப்பிட வேண்டும் என்றால் திமுகவுக்கு ஓட்டுப் போடாதீர்கள்’என்றும் அதிரடி கிளப்பினார்.

பிரச்சாரத்தில் எடப்பாடி இன்னொரு உத்தியையும் கடைபிடித்தார். வேட்பாளர்கள் ஜீப்பில் கைகூப்பி நிற்க, எடப்பாடி தன்னுடைய வேனில் நின்றபடி வாக்குக் கேட்டார். அதுவே அமைச்சர், மாவட்டச் செயலாளர் அல்லது கூட்டணி கட்சித் தலைவரின் தொகுதி என்றால் அவர்களையும் தனது வேனில் ஏற்றிக்கொண்டு ஓட்டுக்கேட்டார். போடியில் துணைமுதல்வர் பன்னீர்செல்வத்துக்காக ஓட்டுக்கேட்ட ஈபிஎஸ், மாவட்டத்தில் போட்டியிடும் மற்ற மூன்று வேட்பாளர்களையும் ஜீப்பில் நிறுத்திவிட்டு, பன்னீரை மட்டும் தன்னுடைய வேனில் தனக்குப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார். ஆனால், அந்த வேனில் நின்று கொண்டு மைக்கில் பேசி ஓட்டுக்கேட்க பன்னீர் அனுமதிக்கப்படவில்லை. இப்படி, தன்னுடைய உழைப்பின் பயன் இன்னொருவருக்குப் போய்விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார் பழனிசாமி.

10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுகவின் கதை முடிந்தது, இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது கடினம் என்று தகவல்கள் குவிந்துகொண்டிருந்த நேரத்தில், ஆ.ராசா உள்ளிட்ட திமுக பிரபலங்கள் அவதூறாகப் பேசியதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் எடப்பாடி. அவர்களது ஆயுதத்தை எடுத்தே அவர்களைப் பதம் பார்த்தார். தன்னுடைய தாயார் பற்றி ஆ.ராசா பேசிய பேச்சு, உண்மையிலேயே அவரைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். இருப்பினும் அந்த உணர்வை மிகையாகவே வெளிப்படுத்தி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து பெண்களின் வாக்குகளைக் கவர முயன்றுள்ளார் எடப்பாடி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பெண்கள் வாக்கு அதிமுகவுக்குக் கிடைப்பது கடினம்தான் என்று சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியின் இந்த நகர்வு திமுகவினரை அசர வைத்துவிட்டது.

எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் அவருக்கு வாழ்வா, சாவா போராட்டம். அதிமுகவின் மற்ற அமைச்சர்கள் தோற்றால் ஊழல் வழக்கில் சிறை செல்லக்கூடும். ஆனால், எடப்பாடியாருக்கு இருக்கும் பயம் அது அல்ல. ஆட்சி போனால் பரவாயில்லை, கட்சி போய்விட்டால்? குறைந்தபட்சம் எம்எல்ஏவாகி, எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தால்தான் கட்சியையும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையும் தொடர்ந்து தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்க முடியும் என்று கருதுகிறார் அவர். எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கபூர்வமாகச் செயல்படுவதன் மூலம், அடுத்த தேர்தலிலும் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ள முடியும் என்பதும் அவருடைய கணக்கு. அவருடைய கணக்கு என்னவாகிறது என்பதை அறிந்துகொள்ள மே 2-ம் தேதி வரை தமிழகம் காத்திருக்க வேண்டும்.

- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction