free website hit counter

சிறீதரனின் புதிய பயணத்தின் முன்னாலுள்ள சவால்கள்? (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த் தேசிய அரசியலின் தாய்க் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், கட்சியின் தலைமைப் பொறுப்பை பேருரையாற்றி சிறீதரன் ஏற்கவிருந்தார். எனினும், கடந்த சனிக்கிழமை கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின் இறுதியில் சிலரினால் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை அடுத்து, தேசிய மாநாட்டினை காலவரையறையின்றி வெளிச்செல்லும் தலைவர் மாவை சேனாதிராஜா ஒத்திவைத்தார். 

இந்தப் பத்தி, கடந்த சனிக்கிழமை எழுதப்பட்டது. 

திருகோணமலையில் இந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைத் தோற்கடித்து சிறீதரன் வெற்றிபெற்றிருந்தார். 

தமிழ்த் தேசிய அரசியலுக்குள் சிறீதரனும் சுமந்திரனும் சம காலத்தில் வந்தவர்கள். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். கடந்த பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஏனைய வேட்பாளர்கள் ஓர் அணியிலும் இவர்கள் இருவரும் இன்னொரு அணியாகவும் நின்று வாக்குச் சேகரித்திருந்தார்கள். மற்றைய அணியினர் அனைவரும் தோல்வியடைய, இவர்கள் இருவரும் வெற்றிபெற்றிருந்தனர். சிறீதரன் தன்னை கடும் தமிழ்த் தேசியவாதியாக முன்னிறுத்துபவர்.சுமந்திரன், தமிழ்த் தேசியவாதியாக தன்னைக் கூறிக் கொண்டாலும் மென்வலு அரசியலில் ஆர்வமுள்ளவர். அதனை அவர் 2015 பொதுத் தேர்தல் காலத்தில் வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார். இந்த விடயம்தான், சுமந்திரனை தலைவருக்கான போட்டியில் தோற்கடித்திருக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு கடும் தமிழ்த் தேசியம் பேசும் ஒருவர் அல்லது அப்படியான அணுகுமுறையுள்ள ஒருவர் தலைவராக வேண்டும் என்று கட்சியின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதேவேளை, சுமந்திரன் இல்லாத தமிழரசுக் கட்சியை பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதை அவருக்கு கிடைத்த கணிசமான வாக்குகள் பிரதிபலிக்கின்றன. அத்தோடு, தேர்தலில் சிறீதரன் வெற்றிபெற்ற அறிவிப்பு வெளியானதும், கை கொடுத்து சுமந்திரன் அவரை வாழ்த்தினார். அப்போது, பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் வெளிப்படுத்திய "...சிறீதரன் எங்களின் இதயம், சுமந்திரன் எங்களின் மூளை..." என்ற கோசமும், அதனைத் தொடர்ந்து எழுந்த கரகோசமும் கவனிக்கத் தக்கது. 

கடும் தமிழ்த் தேசியவாத முகம் தமிழரசுக் கட்சிக்கு வேண்டும் என்பது, பலதரப்புக்களின் தொடர் விருப்பமாகும். தமிழரசுக் கட்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டெடுத்துக் கொடுத்தது முதல் அதன் தலைவராக இருந்த பெருந்தலைவர் இரா.சம்பந்தன், தன்னை கடும் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக் கொண்டதில்லை. தென் இலங்கையோடும் சர்வதேசத்தோடு விட்டுக்கொடுப்புக்களோடு உரையாடக்கூடிய நெகிழ்வுக்போக்குள்ள தலைவராகவே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அதுவும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் என்பது ஒட்டுமொத்தமாக சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் சென்றதும், அவர் தன்னை மென்வலு அரசியலின் பக்கத்தில் நிலைநிறுத்திக் கொண்டார். அவருக்குப் பின்னால், தலைவராக வந்த மாவை சேனாதிராஜா சம்பந்தனின் பினாமி போன்றவர். அவரிடத்தில் முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை. ஒரு கட்டம் வரையிலும் சம்பந்தன் சொல்வதைச் செய்யும் கருவியாகவும், பிறகு சுமந்திரனின் முடிவுகளுக்காக காத்திருக்கும் ஒருவராகவும் மாறியிருந்தார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் மாத்திரமே மாவை சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களை கூறியிருக்கிறார். மற்றப்படி, தமிழரசுக் கட்சியின் முடிவுகள் என்பது சம்பந்தன், சுமந்திரன் தரப்பினரால் மாத்திரமே எடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படித்தான் தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும் உணர்ந்து கொண்டிருக்கின்றது. ஆக, விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியின் முகம் என்பது கடும் தமிழ்த் தேசியவாதிகள் என்ற கட்டத்தைத் தாண்டிய மென்வலு முகமாகவே இருந்திருக்கின்றது. அப்படியான சூழலில் கடும் தமிழ்த் தேசியவாத முகம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிறீதரனை தலைவராக தேர்தெடுந்திருக்கிறார்கள். 

இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், சம்பந்தனின் அரசியல் வாரிசு சுமந்திரன், அவரின் நிலைப்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்போகிறார் என்று நம்பப்பட்டது. ஆனால், தலைவருக்கான தேர்தலில் சுமந்திரனைப் புறந்தள்ளி சிறீதரனை சம்பந்தன் ஆதரித்திருக்கிறார். தலைவர் தேர்தலுக்கான இறுதிக் கணம் வரையில், எப்படியாவது சிறீதரன் வென்றுவிட வேண்டும் என்பதில் சம்பந்தன் கடுமையாக உழைத்திருக்கிறார். கடும் தமிழ்த் தேசியவாத முகத்தைத் தேர்தெடுப்பதற்காக, மென்போக்குள்ள தலைவர் என்று விமர்சிக்கப்பட்ட சம்பந்தன் முயன்றிருக்கிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. 

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல், 'வாரிசு அரசியல் - வாழ்நாள் தலைவர்' என்ற ஜனநாயக விரோத தன்மைகள் கட்சியை ஆக்கிரமித்துவிடக்கூடாது என்பதற்காக கட்சியின் யாப்பில் தலைவர் ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் மாத்திரமே அந்தப் பதவியை தொடர்ந்து வகிக்க முடியும் என்ற ஏற்பாடு உள்ளது. அதுபோல, மத்திய குழுவிடம் கணிசமான அதிகாரம் இருக்கின்றது. எழுந்தமானமாக முடிவுகளை கட்சித் தலைவரோ, செயலாளரோ எடுக்க முடியாது. ஆனாலும் கடந்த காலத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் எடுத்த முடிவுகளே கட்சியின் மத்தியகுழு அங்கீகாரத்தோடு பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மத்தியகுழு அங்கீகரிக்காத முடிவுகளை கட்சியின் சார்பில் பேசவல்ல தான் ஒருபோதும் எடுத்ததில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். கட்சிக்குள் கூட்டுப்பொறுப்பை ஏற்பதற்கு சிலர் பல காரணங்களுக்காக தயாராக இருப்பதில்லை. அதனால், அனைத்தும் சம்பந்தனும் தானும் எடுத்த முடிவுகள் என்பது மாதிரியான நிலை இருந்தாக அவர் தன்னிலை விளக்கமளிக்கின்றார். 

இப்போது, தமிழரசுக் கட்சி கடும் தமிழ்த் தேசியவாதி முகத்தோடு இருக்கும் சிறீதரனிடம் சென்றிருக்கின்றது. அவர், கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு தன்னுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அது, அவரை ஆதரித்த தரப்புக்களை குளிர்வித்திருக்கின்றது. ஆனால், அரசியலும் இராஜதந்திரமும் வெளியில் காட்டப்படும் 'படங்கள்' சார்ந்தது மட்டுமில்லை. வெளித்தெரியாத - சொல்லப்படாத ஆயிரமாயிரம் ஏற்பாடுகள் சார்ந்தது. அதனையெல்லாம் எப்படி கையாளப் போகிறார் என்பதில்தான் சிறீதரன் தன்னை எப்படியான தலைவராக நிரூபிக்கப்போகின்றார் என்பது அடங்கியிருக்கின்றது. அவர், இதுவரை கிளிநொச்சியில் அரசியல் செய்தவர். இப்போது, ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்களுடனும் அவர்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் ஒருவராக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடனும், தரப்புக்களுடனும், தென் இலங்கையோடும், சர்வதேசத்தோடும் அரசியல் செய்ய வேண்டும். தமிழ்த் தேசியப் பரப்பும் தென் இலங்கையும் சர்வதேசமும் ஒருபோதும் ஓர் அணியாக இருந்ததில்லை. மூன்றும் எதிரெதிர் துருவமாகவே அதிக தருணங்களில் இருந்திருக்கின்றன. இந்த நிலைக்குள் நின்று சிறீதரன் செயற்பட்டாக வேண்டும். தன்னை கடும் தமிழ்த் தேசியவாதியாக காட்டி வந்திருக்கின்ற அவர், பேச்சுவார்த்தைகளில் அந்த உறுதியை வெளிப்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால், அவரின் கடும் தமிழ்த் தேசியவாத முகம் நொருங்கிவிடும். 

சுமந்திரன், இதுவரை காலமும் தமிழரசுக் கட்சிக்குள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை கைவிடும் காலம் வந்திருக்கிறது. அதற்கு அவர், கட்சிக்குள் அதிகாரமிக்க பதவிகளிலோ, பேச்சாளர் என்ற அந்தஸ்திலோ தொடரக்கூடாது. இல்லையென்றால், தமிழரசுக் கட்சி என்பது சுமந்திரனின் முகத்தினால் மீண்டும் முன்னிறுத்தப்படும். அது, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் எதிர்பார்ப்புக்களை இல்லாமல் செய்துவிடலாம். ஆகவே, புதிய தலைவரான சிறீதரன் அவரின் இலக்கை இடைஞ்சல்கள் இன்றி முன்னொடுப்பதற்கு சுமந்திரன் வழிவிட வேண்டும். புதிய தலைவரோடு இணைந்து இயங்குவேன் என்று சுமந்திரன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஆனாலும் சிறீதரனுக்கு என்று புதிய செயற்திட்டங்கள் இருக்கும். அதற்காக தனக்கு இணக்கமானவர்களை பொறுப்பான பதவிகளில் அவர் நியமிக்க முயல்வார். அப்படியான நிலையில் அதற்கான வாய்ப்புக்களை சுமந்திரன் வழங்க வேண்டும். குறிப்பாக, சர்வதேச விவகாரம், சட்டத்துறை என்று அவர் கடந்த காலத்தில் கட்சியின் முகமாக செயற்பட்ட புள்ளிகளில் இருந்து விலகி புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அது, தமிழரசுக் கட்சியின் புதிய போக்கிற்கு வழி ஏற்படுத்தலாம். இல்லையென்றால் திரும்பவும் சுமந்திரன் எல்லா இடத்திலும் வியாபித்திருக்கும் சூழல் வரும். அது, கடந்த காலத்தில் மாவை சேனாதிராஜா இருந்த நிலைக்கு சிறீதரனையும் தள்ளிவிடும். 

முன்னாள் பங்காளிகளுக்கான அழைப்பு

சிறீதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவானதும், தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி, 2009க்கு முன்னர் இருந்தது மாதிரியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கான அழைப்பை விடுத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்து கூட்டமைப்பு என்பது, புலிகளின் நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் அரசியல் குழு. அதற்கு மேல் முடிவுகளை அறிவிக்கும் எந்த அதிகாரமும் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. அப்படியான நிலையில், 2009க்கு முன்னராக கூட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற சிறீதரனின் அழைப்பை எவ்வாறு கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் ஏற்பாடுகள் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினால் 2004 -2005 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. அதற்காக யாப்பு தயாரிக்கும் பணிகளும் கொழும்பில் இடம்பெற்றன. ஆனால், அந்த முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று புலிகளின் கிளிநொச்சி அரசியல் செயலகம் அறிவுறுத்தியது. அதனையடுத்து, கூட்டமைப்பைக் கட்சியாக பதியும் முயற்சிகள்  கைவிடப்பட்டது. அதுதான், தமிழரசுக் கட்சியை பலம்பொருந்திய கட்சியாக மாற்ற உதவியது. ஏற்கனவே, 2004 பொதுத் தேர்தலுக்காக உறங்கு நிலையில் இருந்த தமிழரசுக் கட்சியை விடுதலைப் புலிகள் மீட்டெடுத்து, மக்கள் மறந்து போயிருந்த வீட்டுச் சின்னத்தை பிரபலமாக்கினார்கள். 

புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பைக் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழரசுக் கட்சி தவிர்ந்த பங்காளிக் கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். கடந்த வருடம் கூட்டமைப்பு இறுதியாக காணாமல் போவது வரையில், அந்தக் கோரிக்கை நீடித்தது. சம்பந்தனிடமும் தமிழரசுக் கட்சியிடமும் ரெலோவும், ஈபிஆர்எல்எப்-பும், புளொட்டும் கூட்டமைப்பை பதிவு செய்ய வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், பொதுச் சின்னமொன்றின் கீழ் தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் கூறி வந்தார்கள். ஆனால், தமிழரசுக் கட்சி தன்னுடைய வீட்டுச் சின்னத்தை விட்டுச் செல்ல ஒருபோதும் தயாராக இல்லை. அப்படியான நிலையில், சிறீதரனின் கூட்டமைப்புக்கான அழைப்பை எப்படி நோக்குவது? 

அதுமாத்திரமின்றி, தமிழரசுக் கட்சிக்குள் வீட்டுச் சின்னத்தில் வெற்றிபெற்றுவிட்டு, பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. குறிப்பாக, தங்களின் மேல் சவாரி செய்துவிட்டு எட்டி உதைக்கும் வேலைகளில் பங்காளிக் கட்சிகள் ஈடுபடுவதனால், கட்சியின் உண்மையான தொண்டர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் வெற்றியும் எட்டாக்கனியாக இருப்பதான நிலை சார்ந்தது அது. அப்படியான நிலையில், அடுத்த தேர்தல்களை எதிர்பார்த்துள்ள தமிழரசுக் கட்சியினர், சிறீதரனின் அழைப்புக்கு வலுச்சேர்ப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு. அழைப்பு வெளியானதுமே, 'ஒட்டுக்குழுக்களுடன் ஒட்டுறவு தேவையில்லை' என்ற விடயத்தை தமிழரசுக் கட்சியின் இரண்டாம் கட்ட முக்கியஸ்தர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைக் காண முடிகின்றது. 

இன்னொரு பக்கம், சிறீதரனின் அழைப்பை ஏற்று முன்னாள் பங்காளிக் கட்சிகள் வருவது என்பது, கூட்டமைப்பை கட்சியாக பதியும் கோரிக்கை மற்றும் பொதுச் சின்னம் கோரல் என்ற விடயங்களைப் புறந்தள்ளி நிகழ வேண்டியது. பொதுத் தேர்தல் வெற்றிகளுக்காக அந்த முடிவுக்கு பங்காளிக் கட்சிகள் இணங்கினாலும், அது தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் காலை வாரும் காட்சிகளை கடந்த காலத்தில் பிரதிபலித்தது போல மீண்டும் நிகழலாம். அப்படியான நிலைப்பாடுகளையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் என்ன அவசரத்தில் சிறீதரன், கூட்டமைப்புக்கான அழைப்பை விடுத்தார் என்று தெரியவில்லை. இல்லையென்றால், புதிய தலைவராக அவர் ஒரு சம்பிரதாயபூர்வ அழைப்பை விடுத்திருக்கிறார் என்று மாத்திரம் கொள்ள வேண்டியிருக்கலாம். அதனை வரும் தேர்தல் காலங்கள் வெளிப்படுத்திவிடும்.

எதுவாக இருந்தாலும் கடந்த காலத்தில் சிறீதரன் செய்து வந்த இலகுவான அரசியலை இனி அவரினால்  செய்ய முடியாது. ஏனெனில், ஊடக அறிக்கைகள், பேட்டிகள் என்ற அளவைத் தாண்டி முடிவு எடுக்கும் இடங்களில் அவர் பங்களித்தது இல்லை. அதனால், அவர் மீதான விமர்சனங்களும் அவ்வளவுக்கு எழுந்திருக்கவில்லை. சாதிய அடையாளத்தைச் சொல்லி திட்டுவது, கிளிநொச்சியில் பங்காளிக் கட்சிகளுக்கு இடமளிக்காமை போன்ற விடயங்களே அதிகம் அவர் மேலான கடந்த கால குற்றச்சாட்டுக்கள்.   ஆனால், இனி அப்படியான காலம் சிறீதரனுக்கு இருக்க வாய்ப்பில்லை. அவர், தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பை நிலைநாட்ட வேண்டும். அது, அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. 

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction