free website hit counter

தனித்துப் போட்டி: பங்காளிகளை நோக்கி தமிழரசு வீசிய சாட்டை! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்பிற்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பு தன்னையொரு தேர்தல் கூட்டாக மெல்லச் சுருக்கிக் கொண்ட போதே, அதன் அழிவுகாலம் ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், தேர்தல் வெற்றிகளை மாத்திரம் முன்னிறுத்திச் செயற்படும் கூட்டுக்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கான வாய்ப்புக்கள் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

விடுதலைப் புலிகளின் ஒத்தாசையோடு ஆரம்பிக்கப்பட்ட கூட்டமைப்பு, இரண்டு தசாப்த காலத்தினை கடந்திருக்கின்றது. அதுவும், முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர், கூட்டமைப்பு 13 ஆண்டுகள் நீடித்திருந்தது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். கூட்டமைப்பு புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்று, அதனை தேர்தல் களத்தில் நிரூபிப்பதற்காக உருவாக்கப்பட்ட (தமிழ்த் தேசியக் கட்சிகளின்) கூட்டு. புலிகள் இருக்கும் வரையில், கூட்டமைப்பிற்கான தீர்மானங்களை கிளிநொச்சியே எடுத்தது. கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்காக கிழக்கிலும், கொழும்பிலும் தொடர்ச்சியாக இயங்கிய ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் தரப்பு, கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்வதற்காக முயன்ற போது, அதனை அப்போது கிளிநொச்சியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கள் தடுத்தன. குறிப்பாக, கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்யும் நோக்கில், கட்சிக்காக வரையப்பட்ட யாப்பு பணிகள் இடைநடுவில் புலிகளால் நிறுத்தப்பட்டது. “...கூட்டமைப்பை பதியத் தேவையில்லை. ஏனெனில், இந்தக் கட்சிக்காரர்களை முழுதாக நம்ப முடியாது. அது, ஒரு தேர்தல் கூட்டாக மாத்திரம் இருக்கட்டும்...” என்பதுதான் புலிகளின் நிலைப்பாடு. கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய விரும்பிய தரப்பினரிடம் கிளிநொச்சி அதனைத்தான் வலியுறுத்தியது. தொடர் அர்ப்பணிப்புக்களின் வழியாக எழுந்த போராட்ட அமைப்பொன்று, தங்களை மீறி இன்னொரு தரப்பு மேலெழுவதை விரும்பாது. புலிகளும் அதைத்தான் அப்போது செய்தார்கள்.

ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னரும் 13 ஆண்டுகள், கூட்டமைப்பு நீடித்திருந்தது, என்றால் அது இரா.சம்பந்தன் என்கிற ஒற்றை மனிதரால்தான் சாத்தியமானது. ‘…புலிகள் இப்போது இல்லை. இனி என்னுடைய இறுதிக் காலம் வரையில் நான்தான் தமிழினத் தலைவர், என்னைத் தாண்டி யாரும் வர முடியாது...’ என்பது சம்பந்தனின் எண்ணம். கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈபிஆர்எல்எப் உள்ளிட்ட கட்சிகள் வெளியே சென்ற போதும், பங்காளிக் கட்சிகளுக்குள் இருந்து ‘கட்சி விட்டோடிகள்’ வெளிய சென்று புதிய கட்சிகளை ஆரம்பித்த போதும், தமிழின தலைவர் எனும் அடையாளத்தை அவர் யாருக்கும் விட்டுத்தரத் தயாராக இருக்கவில்லை. தான் அரசியலுக்கு அழைத்து வந்த சி.வி.விக்னேஸ்வரன், தனக்கு நிகரான ஒரு தலைவராகும் வாய்ப்புக்களை வடக்கு அரசியல் களம் உருவாக்கிய போது, தன்னுடைய ‘விட்டுப்பிடிக்கும்’ உத்தி ஊடாக விக்னேஸ்வரனை சம்பந்தன் வீழ்த்தினார். தமிழரசுக் கட்சியோடு விக்னேஸ்வரன் முரண்பட ஆரம்பித்த 2015 காலத்திலேயே, அவரை வெளியேற்றியிருந்தால், கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்று பெரியளவில் உருவாகியிருக்கும். இப்போது, அதன் தலைவராக விக்னேஸ்வரன், சம்பந்தனுக்கு சமமாக வந்திருப்பார். ஆனால், அதனை அவர் உணர்ந்து விட்டுப்பிடிக்கும் உத்தியை விக்னேஸ்வரனுக்கு எதிராக வெற்றிகரமாக நிலை நிறுத்திக் காட்டினார்.

இப்போது சம்பந்தன் உடலளவில் தளர்ந்துவிட்டார். அவருக்கு தமிழ்த் தேசிய அரசியலில் இருந்த பிடியும் தளர்ந்துவிட்டது. கடந்த பொதுத் தேர்தல் காலத்திலேயே அது வெளிப்பட்டது. சம்பந்தனின் பிடி தளர ஆரம்பித்ததும், அவர் பிளவுகளை ஒட்டியும் மறைத்தும் வைத்து காத்து வந்த கூட்டமைப்பும் உடைந்து கலகலக்கத் தொடங்கிவிட்டது. அவரினால் இன்றைக்கு எந்தவொரு பங்காளிக் கட்சியையும் கட்டுப்படுத்த முடியாது. ஏன், அவரினால் தமிழரசுக் கட்சிக்குள் கூட தீர்மானங்களை முன்மொழிய முடியாது. மூத்த தலைவராக தன்னுடைய மரியாதையை பேண வேண்டுமானால், தமிழரசின் மத்திய குழு முடிவுக்கு இணங்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் சம்பந்தனின் முடிவுகளை அங்கீகரிப்பதற்காக அல்லது நியாயப்படுத்துவதற்காக மாத்திரமே தமிழரசின் மத்திய குழு கூட்டப்பட்டிருக்கின்றது. இன்று நிலை அப்படியில்லை. கட்சியின் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவே, மத்திய குழு முன்னிலையில் வாய் திறக்க பயப்படுகிறார். அவர், பேசிக் கொண்டிருக்கும் போதே, எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியான நிலையில், சம்பந்தன் இன்று முடிவுகளை எடுத்து அறிவிக்கும் நிலையில் இல்லை. அதனால், கட்சியின் கருத்தை ஏற்பது என்பதுதான் அவருக்கு இருக்கும் ஒற்றைத் தெரிவு.

வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்த போது, அதனை சம்பந்தன் விரும்பவில்லை. தனக்கு நெருக்கமானவர்களிடம் அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். ஆனால், தன்னுடைய விருப்பு வெறுப்புக்கள் குறித்து சிந்திப்பதற்கு இன்றைக்கு தமிழரசு தயாராக இல்லை என்ற போது, தேவையின்றி வாயைக் கொடுக்காமல் இருப்பது, தனது மரியாதையைக் காப்பாற்றுவதற்கு உதவும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

கூட்டமைப்பு தேர்தல் மைய அமைப்பாக சுருங்க ஆரம்பித்ததும், பங்காளிக் கட்சிகள் தங்களது நிலையை பலப்படுத்த ஆரம்பித்துவிட்டன. ஒரு கட்டம் வரையில் தமிழரசு ஏக நிலையில் நின்று ஆடியது. குறிப்பாக, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரையில், கூட்டமைப்புக்குள் தங்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லை என்பது தமிழரசின் நிலைப்பாடு. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு சந்தித்த தோல்வி, குறிப்பாக தமிழரசின் தோல்வி பங்காளிக் கட்சிகளை பலம்பெற வைத்தது. கிட்டத்தட்ட கூட்டமைப்புக்குள் தமிழரசு ஒரு பக்கமும், ரெலோவும் புளொட்டும் இன்னொரு பக்கத்திலும் நின்று ஆடித் தீர்த்தன. தமிழரசை வெறுப்பேற்றுவதற்காக தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவர்கள், எதிரணியினர் என்று அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ரெலோவும் புளொட்டும் அரங்க அரசியல் செய்தது. அது, தமிழரசுக்குள் ‘நான் பெரிதா நீ பெரிதா’ என்று முரண்பட்டு நிற்கின்ற தலைவர்களைக் கூட எரிச்சற்படுத்தியது. அதுதான், கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்கக் காரணமானது. கட்சித் தலைமைக்காக எம்.ஏ.சுமந்திரன் அணியும் சிவஞானம் சிறீதரன் அணியும் தங்களுக்குள் மோதிக்கொள்ளத் தொடங்கிவிட்ட போதிலும், இந்த விடயத்தில் ஓரணியாக நின்றன. குறிப்பாக, தனித்துப் போட்டியிடும் முடிவை எதிர்த்த மாவையை அந்த முடிவை ஏற்க வைக்கவும் அதுதான் காரணமானது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் காணப்படும் விகிதாசார வடிவத்துக்குள் குழப்பமான நிலை இருக்கின்றது. இதனால், வட்டாரங்களில் வெற்றி பெற்றாலும், எந்தவொரு கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்கிற நிலை காணப்படுகின்றது. தனித்து ஆட்சியமைக்க வேண்டுமனால், ஒவ்வொரு கட்சியும் அந்த மன்ற எல்லைகளுக்குள் கிட்டத்தட்ட 75 வீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றாக வேண்டும். இதனால், இந்தச் சிக்கல்களை தவிர்ப்பதற்காக, கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றதும், அதன் பின்னர் இணைந்து கூட்டமைப்பாக ஆட்சி அமைப்பது சாதகமான கட்டங்களை ஏற்படுத்தும் என்று கூறித்தான் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை முன்வைக்கின்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் அதனை முன்வைத்துத்தான், தனித்துப் போட்டியிடும் தங்களின் முடிவை தமிழரசு இறுதி வரையில் நியாயப்படுத்தியது. தமிழரசின் இந்த வாதம் நிராகரிக்கக் கூடியது அல்ல. ஏனெனில், கடந்த உள்ளூராட்சி மன்ற முடிவுகள் அதற்கு சான்றாக இருக்கின்றன.

ஆனால், உண்மையில், தமிழரசுக் கட்சிக்கு தங்களை மீறி கூட்டமைப்புக்குள் நிலையெடுத்து ஆட நினைக்கும் பங்காளிக் கட்சிகளை அடக்கி வைக்கும் அவசரம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு, தனித்துப் போட்டியிடுவது எனும் உத்தியை கையிலெடுத்திருக்கின்றது. அதன்மூலம், வீட்டுச் சின்னம் இல்லாமல், ரெலோவும் புளொட்டும் தங்களை நிரூபித்துவிட்டு வந்து கூட்டமைப்புக்குள் ஆடட்டும். அப்போது, அவர்களின் ஆட்டத்தை சகித்துக் கொள்ளலாம். அது இல்லாமல், தமிழரசின் வீட்டுச் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுவிட்டு ஆடுவதையெல்லாம் பொறுக்க முடியாது என்பது, தமிழரசுக் கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையிலுள்ள உறுப்பினர்களின் நிலைப்பாடு. தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை இனி தமிழரசு மாற்றிக் கொள்ளாது. இதுவரை காலமும் கூட்டமைப்பு என்றால், வீட்டுச் சின்னம். அதனை இனி, பங்காளிகளோடு பகிராமல் பார்த்துக் கொள்ள தமிழரசு முடிவெடுத்திருக்கின்றது.

ரெலோவும் புளொட்டும் தனித்து களம் காணுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அப்படி போட்டியிட்டால், அவர்களினால் வெற்றிபெற முடியாது. அப்படியான நிலையில், தமிழரசுக்கு எதிராக பலமான அணியொன்றை கட்டவே நினைப்பார்கள். அவர்களின் தெரிவு, விக்னேஸ்வரன் தலைமையிலான ஓர் அணி. அதனைவிட்டால் வேறு வழியில்லை. விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டடில் ‘மானாக’ துள்ளிக் குதிக்கிறார்களோ அல்லது ‘மீனாக’ நீச்சல் போடப் போகிறார்களோ என்பது இன்று (வியாழக்கிழமை) தெரிந்துவிடும். இன்று விக்னேஸ்வரன் தலைமையில் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் புதிய தேர்தல் கூட்டு பற்றி யாழ்ப்பாணத்தில் அறிவித்தல் விடும் வாய்ப்பு உண்டு.

பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு எதிரான புதிய கூட்டில் இணைந்த பின்னர், மீண்டும் அவர்களோடு இணைந்து போட்டியிடுவது என்பது அவ்வளவுக்கு சாத்தியமான ஒன்றல்ல என்பது தமிழரசுக் கட்சிக்கு தெரியும். தமிழ்த் தேசியப் பரப்பில் தன்னை முதன்மைக் கட்சியாக நிரூபிக்கவும், புலிகள் மீட்டுக் கொடுத்த வீட்டுச் சின்னத்தின் மூலம் கிடைக்கும் வாக்கு அறுவடையை முழுமையாக அனுபவிப்பதற்காகவும் தமிழரசுக் கட்சி வீசியிருக்கின்ற சாட்டையே, தனித்து போட்டியிடுவது என்கிற விடயம். கூட்டமைப்பின் இறுதி நாட்கள் அவசரமாக எண்ணப்படுகின்றன. அது, பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளும் நிலையில் இன்று தமிழ் மக்களும் இல்லை. ஏனெனில், போலி ஒற்றுமையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. கூட்டமைப்பின் இறுதிக் காலம் அப்படித்தான் இருந்தது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction