free website hit counter

ரெலோவின் 'சொப்பன சுந்தரி' உரை! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘சொப்பன சுந்தரி’யை உதாரணமாக முன்வைத்து ஆற்றிய உரை கவனம் பெற்றிருக்கின்றது. நாட்டின் பிரதான துறைமுகங்களை அரசாங்கம் சீனாவுக்கு தரைவார்த்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே, அவர் சொப்பன சுந்தரி விடயத்தை தொட்டார். 

‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் நடிகர்கள் கவுண்டமணி – செந்தில் தோன்றும் ஒரு காட்சியில் சொப்பன சுந்தரி எனும் நடிகை குறித்து இரண்டாந்தரமாக பேசுவார்கள். அதாவது, சொப்பன சுந்தரி வைத்திருந்த காரை (வாகனம்) தான் வைத்திருப்பதாக கவுண்டமணி கூற, சொப்பன சுந்தரியை யார் வைத்திருக்கிறார்?, என்று செந்தில் கேட்பார். இப்படியாக அந்தக் காட்சி நீளும். அதனை மிகப்பெரிய நகைச்சுவைக் காட்சியாக தமிழ் கூறும் நல்லுலகம் இன்றளவும் கொண்டாடி வருகிறது. ஒரு பெண்ணை, அந்தப் பெண்ணுக்குரிய தார்மீகம், உரித்துக்கள் உணராமல் கார் போன்ற ஒரு சொத்தோடு ஒப்பிட்டு, பேசும் மனநிலை என்பது மிகவும் பிற்போக்குத்தனமானது. அதுவும், பலர் பாவித்த காரோடு, ஒரு பெண்ணை ஒப்பிடுவதும், அதனை நகைச்சுவையாக கொண்டாடித் தீர்ப்பதும் மனநிலை பிறழ்வுள்ள சமூகமே செய்யும்.

மனிதன் பெண்களை சொத்தாகவே வரலாறு முழுவதும் கண்டு வந்திருக்கிறான். பெண்களை சக மனுசியாக அவளின் உணர்வுகளை உரிமைகளை மதித்து நடக்கும் நிலையைக் குறித்து சிந்திக்கத் தொடங்கியது என்பது சில காலமாகத்தான். ஆனாலும், இன்னமும் ஆதி காலத்துச் சிந்தையோடும் ஆணாதிக்க திமிரோடும் ஒரு சமூகம் தன்னை நிலை நிறுத்திவிடும் என்று நினைப்பது படு முட்டாள்தனமானது. அப்படியான நிலையில், மக்கள் பிரதிநிதி ஒருவர் சொப்பன சுந்தரி விடயத்தை முன்வைத்து பேசுவதனை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

கோவிந்தன் கருணாகரன் சொப்பன சுந்தரி தொடர்பில் குறிப்பிட்டு பேசும் போது, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தார். தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், மிகவும் நகைச்சுவையாக சொப்பன சுந்தரி குறித்து பேசுகிறார் என்று செல்வம் நினைத்திருக்கலாம். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, இயக்கமொன்றில் தலைவராக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவராக செல்வம், கோவிந்தன் கருணாகரனின் உரையை கண்டித்திருக்க வேண்டும். அல்லது, கோவிந்தன் கருணாகரனை மன்னிப்பு கோரச் செய்திருக்க வேண்டும். ஆனால், தங்களின் நிலை மறந்து நின்று பல்லிளிப்பது என்பது பெரும் சாபக்கேடு.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது விடுதலை, சுயநிர்ணய உரிமை சார்ந்து எழுந்தது. அது, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் வரும் போது, சமத்துவம் என்கிற விடயத்தை தன்னோடு சேர்த்துக் கொண்டது. சாதி மறுப்பு, பெண்கள் விடுதலை என்பன புலிகள் காலத்தில் எழுதப்படாத விதிகளாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. போர் முனைகளின் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போரிடுவதற்காக மாத்திரமல்ல, அரசியல், நிர்வாக நடைமுறைகளின் போக்கிலும் பெண்களை முன்னிறுத்தி புலிகள் செயற்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய இன்றைய தலைமுறையின் உணர்திறன் என்பது, புலிகள் காலத்தின் நீட்சிதான். அதாவது, தமிழ்த் தேசிய அரசியல் என்பது, மேலாதிக்க அடக்குமுறைகள் என்று நம்பப்படுகின்ற அனைத்துக்கும் எதிரானது. அதில், பேரினவாதத்துக்கு எதிரான விடுதலை மாத்திரமல் ஆணாதிக்க, சாதிய மேலாதிக்க மனநிலைகளுக்கு எதிரான விடுதலையும் அடங்கும். தமிழ்த் தேசியத்தின் பெயரினால் போலி வேடம் போடுபவர்களைத் தாண்டி, உண்மையான தேசிய உணர்வோடு இருப்பவர்கள் அதனை சிரமேற்று செயற்படுவார்கள். ஆனால், வாக்குகளுக்காக மாத்திரம் தமிழ்த் தேசியம் என்று பேசிவிட்டு, பதவிகளையும் சுகங்களையும் பெற்றுக்கொண்டுவிட்டவர்கள் சொப்பன சுந்தரி குறித்து பேசுவது வியப்புக்குரியதல்ல.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ்த் தேசிய விடுதலையின் பெயரினால் எழுந்தது. நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் விடுதலையின் பெயரினால் அந்த இயக்கத்தில் இருந்து உயிரை விட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் விடுதலை என்கிற விடயத்தை மறந்து, சிங்கள பேரினவாதத்தின் ஒட்டுக்குழுவாக அது செயற்பட்டது. அப்போது, அந்த இயக்கம் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் அரச படைகளோடு இணைந்து நின்று தமிழ் மக்களுக்கு எதிராக புரிந்த குற்றங்கள் சொல்லி மாளாதவை. உயிர்ப்பலி எடுப்புக்கள் தொடங்கி பாலியல் வல்லுறவுகள் வரை ரெலோ இயக்கத்தின் மீது இன்றளவும் கழுவ முடியாத இரத்தக் கறைகள் இருக்கின்றன. அந்த குற்ற மனநிலை காலத்திலிருந்து ரெலோ இன்னமும் விடுபடவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது.

ஏனெனில், ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த கூட்டமைப்பின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான வினோ நோகதாரலிங்கம், கூட்டமைப்பை ‘விபச்சார வீடு’ என்று மக்கள் சந்திப்பொன்றில் பகிரங்கமாக கூறியிருந்தார். தான் எந்தக் கட்சியில் இருந்து, பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டாரோ அந்தக் கட்சியையே, விபச்சார வீடு என்று அழைப்பதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும். அவர், அப்படிப் பேசி இரண்டு மாதங்களாகிறது. ஆனால், அவரோ, அவரின் கட்சித் தலைவரோ இதுவரையில் அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. குறைந்த பட்சம் மன்னிப்பையாவது கோரவில்லை. மாறாக, ரெலோவின் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர், சொப்பன சுந்தரி குறித்து பேசும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தின் பெயரினால் மக்களின் ஆதரவினைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகவோ, மாகாண சபை உறுப்பினராகவோ அல்லது பிரதிநிதியாகவோ இருக்கின்றார்கள், தங்களின் நிலை குறித்து நன்கு அறிந்தும் உணர்ந்தும் செயற்பட வேண்டும். இல்லாது, குடிகாரர்கள், மனநிலை தவறியவர்கள் போன்று கண்டதையெல்லாம் பொது வெளியில் பேச முடியாது. அப்படி அவர்கள் பேசினால், அது தமிழ் மக்களின் தலைகளிலேயே எழுதப்படும். ஏனெனில், இவ்வாறானவர்களை தேடிப் பிடித்து வாக்களித்து வெற்றிபெற வைத்தவர்கள் தமிழ் மக்களே.

கோவிந்தன் கருணாகரன் பாராளுமன்றத்தில் சொப்பன சுந்தரி குறித்து பேசிய விடயம், எழுந்தமானமாக நிகழ்ந்தது அல்ல. அவர் தன்னுடைய உரையை தெளிவாக எழுதி எடுத்து வந்தே பேசினார். அந்த உரையை உண்மையிலேயே அவர்தான் தயாரித்தாரா அல்லது இன்னொருவர் தயாரித்துக் கொடுத்தாரோ தெரியாது. ஆனால், அந்த உரை ஆற்றப்படுவதற்கு முன்னர், அந்தப் பிரதியை ஒருமுறையாவது அவர் வாசித்து, அதனை விளங்கிக் கொண்டிருந்தால் இவ்வாறான இரண்டாந்தர உதாரணம் வந்திருக்காது. எழுதி வாசித்த உரையில் கூட கவுண்டமணி – செந்தில் என்பதற்குப் பதிலாக நகைச்சுவை நடிகர் வடிவேலு தோன்றும் காட்சி என்று வேறு அவர் வாசித்தார்.

பாராளுமன்ற அமர்வுகளில் பார்வையாளர்களாக மாணவர்கள், இராஜதந்திரிகள் தொடங்கி, பல தரப்பினரும் பங்கெடுப்பது வழக்கம். அதுவும், தற்போது, பாராளுமன்ற அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. அப்படியான நிலையில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தாங்கள் என்ன பேசுகிறோம், என்ன மாதிரியாக நடந்து கொள்கிறோம் என்பது குறித்து புரிதல் வேண்டும். அதனைவிடுத்து, தன்னிலை மறந்து செயற்படுவது என்பது அபத்தமானது.

ரெலோ இயக்கம் கூட்டமைப்புக்குள்ளும் தமிழ்த் தேசிய அரசியல் களத்திலும் தன்னை முதலிடத்தில் முன்னிறுத்த முயன்று வருகின்றது. ஒரு கட்சியாக இயக்கமாக முதலிடத்தை நோக்கி இயங்குவது என்பது அவசியமான ஒன்று. ஆனால், அந்தக் கட்டத்தில் எவ்வாறான பொறுப்புணர்வோடு இயக்கவேண்டும் என்பது குறித்து குறைந்த பட்ச சிந்தனையாவது வேண்டும். இல்லாது செயற்பட்டால், விபச்சார வீடு, சொப்பன சுந்தரி போன்ற கீழ்த்தரமான உரையாடல்களை நிகழ்த்தப்படுவது தவிர்க்கப்படாது. இவ்வாறான மனநிலையோடு இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு தலைமையேற்க நினைப்பது அபத்தமானது. குறைந்த பட்சம், இவ்வாறான தவறுகளை ரெலோ இனியாவது தவிர்க்க வேண்டும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction