எத்தியோப்பியாவில் மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உயிர்காக்கும் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கு அவசரகால நிதியை விடுவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் இது குறித்து செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்; எத்தியோப்பியாவின் டிக்ரே பிராந்தியத்திலும், பிற மோதல்களால் பாதிக்கப்பட்ட வடக்கிலும் அவசரகால நடவடிக்கைகளை அதிகரிக்கவும், நாட்டின் தெற்கில் வறட்சிக்கான ஆரம்ப நிலையை கட்டுப்படுத்தவும் மொத்தம் 40 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளதாக கூறினார்.
"வடக்கு எத்தியோப்பியாவில் மனிதாபிமான நெருக்கடிகள்; அழமாகவும், அகலமாகவும் வளர்ந்து வருவதால் அங்குள்ள மில்லியன் கணக்கான மக்கள் கத்தி முனையில் வாழ்கின்றனர்" என்று கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும், தேவைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பியாவில் டிக்ரேயின் வடக்குப் பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே ஒரு வருடமாக நடந்த சண்டையில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் நூறாயிரக்கணக்கான மக்கள் பஞ்சம் போன்ற நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.