ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு கடும் சவாலாக விளங்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த போராளிக் குழுவுடன் யுத்தம் செய்வதை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் தலிபான்கள் திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அந்தராபியின் கீழ் எதிர்ப்புப் படைகள் தலிபான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த பொல்-இ-ஹேசர், தே சலாஹ் மற்றும் பானு ஆகிய மாவட்டங்ளைக் கைப்பற்றியதாகவும் , ஏனைய மாவட்டங்களை நோக்கி முன்னேறி வருவதாகவும் உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 40 பேர் அடங்கிய தலிபான்கள் குழு ஒன்று பஞ்ஷிர் எதிர்ப்புப் படைகளை சந்தித்ததாகவும், இப்படைகளின் தலைவர் அஹ்மத் மசூர்த் பேச்சுவார்த்தையை விரும்பியிருந்ததாகவும் தகவல் வெளியான போதும், இப்பேச்சுவார்த்தையின் முடிவு குறித்துத் தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை. வெகுவிரைவில் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குப் பின் ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வாபஸ் பெற்ற பின் தலிபான்கள் தமது ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காபூல் விமான நிலையத்தை நோக்கி மக்கள் படையெடுக்கும் பிரதான சாலையை அடைத்துள்ள தலிபான்கள், வெளிநாட்டினர் செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப் படும் என்றும் தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம் ஆப்கானில் இருந்து நியூடெல்லி வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.